Monday, October 9, 2017

டெங்கு கிருமிகள் முன்பைவிட பல மடங்கு வீரியம் பெற்றுள்ளன! - மருத்துவர் கு. கணேசன் பேட்டி

Published : 08 Oct 2017 11:25 IST

வெ.சந்திரமோகன்





கடந்த சில மாதங்களாகவே டெங்கு குறித்த அச்சம் பரவிவரும் நிலையில்,டெங்கு காய்ச்சல் பற்றியும்,டெங்கு அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியும் விளக்குகிறார் மருத்துவர் கு.கணேசன்.

டெங்கு இத்தனைப் பேரைப் பலிவாங்குகிறதே? 2013-க்குப் பிறகு இப்போதுதான் அதிகமான பேர் இறந்திருக்கிறார்கள். என்ன காரணம்?

சுற்றுச்சூழல் மோசமாகிவிட்டது. தெருச் சுத்தம் பேணுவதில்லை. திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல் போன்ற சுகாதார விஷயங்கள் மிகவும் மோசமாகிவருவது முதல் காரணம். நாட்டின் தட்பவெப்பநிலை மாற்றம் அடுத்த காரணம். டெங்குவை ஏற்படுத்தும் கிருமிகள் மரபுரீதியில் முன்பைவிட பல மடங்கு வீரியம் பெற்றுள்ளது முக்கியக் காரணம். முன்பெல்லாம் டெங்கு பாதிப்பின் காரணமாக, நோயாளி ஒரு வாரத்துக்குப் பிறகு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவது வழக்கம். ஆனால், இப்போதோ மூன்றாம் நாளில் பலரும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடுகின்றனர்.

டெங்கு கிருமிகள் மொத்தம் நான்கு வகை. சாதாரண வைரஸ் காய்ச்சல்போல் ஒரு வாரத்துக்கு வந்து செல்லும் வகையும் உண்டு. ஆபத்தான கட்டத்துக்கு இழுத்துச்செல்லும் வகையும் உண்டு. முன்பு ஏதேனும் ஒரு வகை கிருமிதான் நோயை ஏற்படுத்தும். இப்போதோ ஒருவருக்கே இரண்டு வகை கிருமிகள் நோயை உண்டுபண்ணுகின்றன. முன்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் இந்தக் கிருமிகளால் வாழ முடியாது. இப்போதோ அந்த இடங்களிலும் வாழ்வதற்கான மரபியல் மாற்றங்கள் இந்தக் கிருமிகளுக்கு ஏற்பட்டுள்ளன.

டெங்கு வந்திருக்கிறது என்பதை எப்படி அறிந்துகொள்வது?

கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே.

திடீரென்று கடுமையான காய்ச்சலுடன் நோய் ஆரம்பிக்கும். தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு, இருமல் ஆகிய அறிகுறிகள் சேர்ந்துகொள்ளும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன் விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

ஆபத்து எப்போது?

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இவர்களுக்கு ஆபத்து அதிகம். கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்க சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.


சிகிச்சை முறைகள் பற்றிச் சொல்லுங்கள்…

டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்கவும், உடல்வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். சாதாரண டெங்கு உள்ளவர்கள் வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இந்தச் சிகிச்சையில் பெரும்பாலோருக்கு நோய் கட்டுப்பட்டுவிடும்; சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் ஏற்றப்பட வேண்டும். அப்போது மட்டுமே நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது வரும்.

இன்னும் சிலருக்கு தட்டணுக்கள் மோசமாக குறைந்துவிடும். அதை ஈடுகட்டத் தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்த வேண்டும் இதற்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

எப்படித் தற்காத்துக்கொள்வது?

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு கொசுக்களை ஒழிப்பது ஒன்றே தலையாய வழி. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.

வீட்டைச் சுற்றியுள்ள சாக்கடையை மட்டுமல்ல, கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும், கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரைத் திறந்த பாத்திரங்களில் ஊற்றிவைக்காமல், மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது. குப்பைத்தொட்டிகள், தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைக்க வேண்டும். சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிசனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.

தடுப்பு மருந்துகளுக்கு வாய்ப்பில்லையா?

டெங்கு கிருமிகளில் நான்கு வகைகள் உள்ளதால் நான்கு வகைகளுக்கும் சேர்த்துத் தடுப்பூசி கண்டுபிடிப்பதும் சிரமமாக உள்ளது. உலக அளவில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் அதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஆக்கபூர்வமாக எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை. கொசுக்களை ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் புதுப்புது வழிகளைத் தேடுவதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. இந்தியாவில் அப்படியான ஏற்பாடுகள் துளியும் இல்லை.

அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற சூழலில் போர்க்கால நடவடிக்கைகள் தேவை. திடக்கழிவு மேலாண்மையும் கொசு ஒழிப்பு இயக்கங்களும் மேம்படவில்லை. அதில் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவோடு ஒப்பிடும்போது, ஐரோப்பிய நாடுகளில் டெங்குவின் பாதிப்பு அதிகமில்லை. இதற்கே அந்த நாடுகள் பதற்றமடைந்து, டெங்குவைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டுகின்றன. ஆனால், ஒரு கொள்ளைநோய் தாக்கும்போது, மக்களுக்கு முழுவதுமாக சிகிச்சை தருவதற்கும் வழியில்லை; நோயின் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்குத் தடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் முடியவில்லை எனும் நிலைமை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து முனைப்புடன் செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024