Friday, October 20, 2017

டி.சி., மறுக்கப்பட்ட மாணவனுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

சென்னை: மாணவனுக்கு மதிப்பெண் சான்றிதழ் தராத பள்ளி, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற, 'நோட்டீஸ்'க்கு பதில் அளிக்காததால், வழக்கு செலவு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் விதித்தும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெற்றி விகாஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 
இங்கு, கார்த்திக் என்ற மாணவன், பிளஸ் ௨ படித்தான். ௨௦௧௭ மார்ச்சில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றான். மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் வழங்க, பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கார்த்திக் தந்தை மணி, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
ஆவணங்களை பார்க்கும் போது, பள்ளிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை எதுவும் இல்லை. மொத்தம், ௭௫ ஆயிரம் ரூபாய், மனுதாரர் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது. 
அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், ௧௧ ஆயிரத்து, ௬௦௦ ரூபாய் என்றாலும், கூடுதல் கட்டணத்தை, மனுதாரர் செலுத்தி உள்ளார்.
பள்ளி தரப்பில், யாரும் ஆஜராகவில்லை; அவர்கள் தரப்பில், பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரர் தரப்பு வழக்கை, பள்ளி நிர்வாகம் ஏற்று கொண்டிருப்பதாக கருத வேண்டியதுள்ளது. 
பள்ளி தரப்பில் முன்வைக்க வாதம் இல்லை என்பதால், நீதிமன்றத்தை தவிர்ப்பதாக கருதுகிறேன். உள்நோக்கத்தோடு, நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு கூட, பதில் தரப்படவில்லை.
வேண்டுமென்றே மாணவனுக்கு மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாணவனின் படிப்பு, ஓராண்டு வீணாகி உள்ளது. 
எனவே, மனுதாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இரண்டு வாரங்களில், சான்றிதழ்கள் கிடைப்பதை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், ௨௫ம் தேதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
தனியார் பள்ளியாக இருந்தாலும், பொதுப்பணி ஆற்றி வருவதால், நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு, பதில் அளித்திருக்க வேண்டும். 
ஒரு பள்ளியே பதில் அளிக்காமல் இருக்கும் போது, சாதாரண மனிதர்களிடம் இருந்து, எதிர்பார்க்க முடியாது. நோட்டீசுக்கு பதில் அளிக்காததால், பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. 
அதை, சென்னை, அடையாறில் உள்ள அவ்வை இல்லத்துக்கு, இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும். செலுத்த தவறினால், பள்ளியின் சொத்தை ஏலத்தில் விற்க, ராசிபுரம் தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024