Tuesday, October 10, 2017


மனப்பக்குவம் தேவை
By வாதூலன் | Published on : 10th October 2017 01:08 AM

இன்றைய வேகமான கணினிமயமான உலகில் விவாகரத்துகள் அதிகமாக நிகழ்வது கண்கூடு. வலைதளம் மூலம் பெண்ணையோ, பிள்ளையையோ பார்த்து, செல்லிடப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். 

பின் திருமணமானவர்கள் ஓரிரு வருடத்துக்குள்ளேயே பிரிந்து விடுகிறார்கள். சகிப்புத் தன்மை இல்லாததும் தீவிர தன்முனைப்பும்தான் இதற்கான காரணங்கள் என்று மன மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இளம் தம்பதியாக இல்லாமல் பல வருடங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடித்தனம் நடத்திவிட்டு, பிறகு ஓய்வுக் காலத்தில் வாழும், தம்பதிகளுக்கிடையேயும் இதுபோன்ற மனக்கசப்பு எழுகிறதே, ஏன்? இயலாமையையும் ஒருவித தன்னிரக்க உணர்வையுமே முதலாவதாகச் சொல்லலாம். 

ஆபீஸ், வேலை, இடமாற்றம், பதவி உயர்வு எனப் பல வகைகளில், ஆண் இயங்குகிறான் என்றால், சமையல் வேலை, குழந்தைகளின் கல்வி போன்ற பல பிரிவுகளில் அக்கறை காண்பித்துப் பெண் சுறுசுறுப்பாக இருக்கிறாள்.
இதனால் ஓய்வு பெற்றதும் கணவன் - மனைவி இருவருக்குமே ஒருவித சூன்ய உணர்வு தோன்றுகிறது.

இன்னொன்று, அறுபது வயதுக்கு மேல் முதுமை சார்ந்த நோய்கள், சர்க்கரைக் கட்டியை எறும்புகள் சூழ்வதுபோல, இயல்பாகத் தாக்குகின்றன. எலும்புத் தேய்மானம், அஜீரணக் கோளாறு, காது கேளாத தன்மை, தள்ளாடும் நடை போன்றவை ஆண் - பெண் இருபாலரையுமே தாக்குகின்றன. அத்தகைய சமயங்களில் இயல்பான சில விமரிசனங்கள்கூட பூதாகரமாய் படுகின்றன.
'அவள் எப்போதுமே ரொம்ப ஸ்லோ' என்ற கணவரின் கருத்து. 'அவருக்கு ஆபீஸைத் தவிர வேறெதுவுமே தெரியாது' என்ற மனைவியின் கூற்று - இவைகூடக் குத்தலாகப் படுகின்றன. சில தருணங்களில் சுய பச்சாதாபத்தின் எல்லையில் கொண்டு தள்ளுகின்றன.

ஓர் அசலான நிகழ்வு, சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஒரே பெண். திருமணமாகி வடக்கே இருக்கிறாள். கலகலப்பான குடும்பம். நாங்கள் போனபோது நண்பர் புன்னகையுடன் வரவேற்கவில்லை. 

அவர் மனைவியுடன் பேச முற்பட்டபோதுகூட இயல்பான பிரதிபலிப்பு இல்லை. இயந்திரம் போல் கொண்டு வரப்பட்ட குளிர்பானத்தை அருந்திவிட்டுக் கிளம்பினோம்.

பின்னர்தான் காரணம் தெரிந்தது. நண்பர் மாதாந்திரக் கணக்கைப் பார்த்து யதார்த்தமாக 'போன மாதம் மெடிகல் பில் அதிகமாகிவிட்டது' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இது மனைவியை மிகவும் உறுத்திவிட்டது (ஏனெனில், அப்போது அவளுக்காகச் செய்த மருத்துவச் சோதனைகள் பல).
இத்தனைக்கும் நண்பருக்கு ஓய்வூதியம் வருகிறது. குறிப்பிட்ட வரம்பு வரைக் காப்பீடு செய்திருக்கிறார். பின்னர் சில நாட்களில் பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும், சகஜமான நிலை திரும்பி விட்டதாம்.
இங்கே ஓர் அம்சத்தை அவசியம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இது ஒரு வார ஏட்டில் வெளியான செய்தி. மாதம் ரூ.30,000 ஓய்வூதியம் பெறுகிற ஒரு முதியவர் தன் எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு யோசனை கேட்டிருக்கிறார்.
காதல் கல்யாணம் செய்து வெளிநாட்டில் இருக்கிற பெண்களிடம் உதவி எதையும் அவர் எதிர்பார்ப்பதில்லையாம். 

நிதி மேலாளர் பணம் எதிர்பார்க்காவிட்டாலும், சீரான உறவு இருப்பதே பெரும் நிம்மதி என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இது முற்றிலும் உண்மை. தன்னுடைய பெண் வேற்று மதத்தினரைக் காதல் திருமணம் செய்துவிட்டதால், பெற்றோரிடையே மன விரிசல் வந்தது. பேரன் பிறந்ததும் தந்தை பெண்ணிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் இது முற்றிப்போய், மனைவியின் இகழ்ச்சியைப் பொறுக்க முடியாது, 65 வயது கணவர் தற்கொலையே செய்து கொண்டுவிட்டார். சில வருடங்கள் முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இன்றைய நாளில் வாரிசுகள் திருமணத்தில் சாதி வேறுபாடுகள், பெரும் அந்தஸ்து வித்தியாசம் - எது வேண்டுமானாலும் நிகழ நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதுபோல் வாழ்வில் ஏதாவது நேர்ந்து விட்டால் நாம் மனம் ஒடிந்து போகாமலிருக்க வேண்டும். அந்தஸ்துள்ள பெண்ணைக் கல்யானம் செய்து கொண்டதாலேயே தாயாரை ஓய்வு இல்லத்தில் தள்ளிவிட்ட ஒரு பிள்ளையை எனக்குத் தெரியும்.

பழைய காலத்தில் இதுபோன்று நடந்ததில்லையே என்ற நியாயமான கேள்வி எழுகிறது. அந்த நாளில் சராசரி வயதே ஐம்பதுதான். மேலும் எதிர்பாராத அசம்பாவிதம் எது நேர்ந்தாலும் இறைவன் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது இருந்தது. 

இன்று ஊடகத் தகவல்கள், ஒப்பீடு மனப்பான்மை, செவி வழிச் செய்தி - எல்லாமாகச் சேர்ந்து முதியோரைக் கலக்கத்தில் ஆழ்த்துகின்றன.
அறுபதில் மணமுறிவு ஏற்படுவது மனம் பக்குவம் இல்லாமையாலேயே என்று உணர்ந்து கொள்ள வேண்டும். விரும்புகிறோமோ இல்லையோ - மருத்துவ முன்னேற்றத்தால் வாழ்வு நீடித்துக் கொண்டே போகிறது.
வயதானவர்கள் இலவச சேவை, இசை, கோயில் என்று ஏதாவதொன்றில் தங்களை வலிய ஈடுபடுத்திக்கொண்டு, மன அமைதி பெறுதலே தங்களை.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024