ஆராய்ந்து கொள்வதே நட்பு
By இரா. இராஜாராம் | Published on : 09th October 2017 03:00 AM
நட்பு என்பது நாடு, இனம், மொழி, மதம், வசதி, வாய்ப்புகள் என எல்லாம் கடந்த ஓர் உன்னத உறவாகும். சிறுவயதிலேயே நண்பர்களாய் ஆனவர் இறுதிக்காலம் வரை நண்பர்களாய்த் தொடர்வதும் உண்டு, பள்ளிப்பருவத்தோடு முடிந்து விடும் நட்பும் உண்டு. பணிபுரிகின்ற இடத்தில் ஏற்படுகின்ற நட்பு வாழ் நாளெல்லாம் விரிவதும் உண்டு.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்போர் அந்தக் காலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகின்றனர். எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, மனம்விட்டுப் பேசி நல்ல ஆலோசனைகளை வழங்கி, உற்சாகப்படுத்தி, தக்கசமயத்தில் உதவிகள் புரிந்து வளரும் நட்பானது ஆழ்ந்த நட்பாகப் பரிணமிக்கின்றது.
கிருஷ்ணரும், குசேலரும் பால்ய நண்பர்கள். பின்னாளில் கிருஷ்ணர் செல்வச் செழிப்பிலும், குசேலர் வறுமையிலும் இருக்கின்ற நிலையில் கிருஷ்ணரைக் காணக் குசேலர், வீட்டிலிருந்த அவலை எடுத்துக்கொண்டு கிருஷ்ணரின் அரண்மனை வாயிலில் தயக்கத்தோடு வந்து நிற்கிறார்.
அவரது வருகையை அறிந்த கிருஷ்ணர் ஓடோடி வந்து குசேலரை வரவேற்று ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டதும், பின்பு குசேலர் தான் கொண்டு சென்ற அவலைத் தயங்கிய படியே கிருஷ்ணருக்கு வழங்கியதும் அவர் அதை ருசித்துச் சாப்பிட்டதும் பின்னர் குசேலரின் வறுமைநிலை அகன்றதும் நாம் அனைவரும் அறிந்த நிகழ்ச்சியாகும்.
அதே போல் இராமாயணத்தில் ராமன் அனுமனுடன் கொண்ட நட்பு மிக உன்னதமானதாகும்.
எத்தனையோ நூல்களில் நட்பைப்பற்றி ஆங்காங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும் திருக்குறளே நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு என்று விரிவாக நட்பின் தன்மையை அதன் உயர்வை எத்தகைய நட்பு வேண்டும், எந்த நட்பு கூடாது என ஆய்ந்தறிந்து உணர்த்தியுள்ளது.
நட்பைப்போல ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை என்று குறள் காட்டுகின்றது.
நல்ல நட்பின் மூலம் தங்கள் நிலையில் உயர்ந்தோரும், தீ நட்பின் மூலம் தங்கள் நிலையில் தாழ்ந்தோரும் பலர் உண்டு. சிறுவயதிலேயே கூடா நட்பின் காரணமாக எத்தனையோ தவறான பழக்கங்களுக்கு ஆளாகிப் பின்னாளில் வருந்தியவர் பலர் உண்டு.
போலி நண்பர்களால் ஏமாற்றமடைந்தவர்களும் உண்டு. நல்லவர்களோடு கொண்ட நட்பானது வளர்பிறை போல நாளுக்கு நாள் வளரக்கூடியது. "உன் நண்பனைச் சொல் நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்' என்பர் அறிஞர்.
இளம் வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நட்பு ஏற்பட பெற்றோர் துணை புரிய வேண்டும். வெளியூரில் விடுதியில் தங்கிப்படிக்கும் பிள்ளைகள், பணியாற்றும் பிள்ளைகள் எத்தகைய நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து, நல்லோர் நட்பெனின் தொடரவும், தீயோர் நட்பெனின் அதனைத் தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இளம் பருவத்தில் தோன்றும் ஆண் பெண் நட்பென்பது காதலாகித் திருமணத்தில் முடிவதும் உண்டு. கண்ணீரில் கரைவதும் உண்டு.
நட்பும், காதலும் மனம் சார்ந்தது. அதுவே ஆண் பெண் நட்பில் இனக்கவர்ச்சியால் உடல்பற்றாகி விடுகிறது.
இனக்கவர்ச்சியால் ஒருவர் மற்றவரின் விருப்பமின்றி வைத்திடும் உடல் பற்றே ஒருதலைக் காதல் என்று தற்போது சொல்லப்படுகிறது. விருப்பமின்மையை உணர்ந்த பின்பும் விரும்பாதவரை அடைய நினைப்பது அரக்கத்தனமான செயலாகவே கருதப்படும்.
நட்பென்பது ஏதோசிரித்துப்பேசி, கேளிக்கையில் ஈடுபடுவதன்று. நண்பன் தவறு செய்யும்போது அதனைச் சுட்டிக்காட்டித் தவிர்த்திடச் செய்பவனே சிறந்த நண்பனாவான்.
நான் ஆசிரியராகப் பணியாற்றிய ஊரில் எனக்கு நண்பரான ஒருவர் அன்பானவர், பண்பானவர். இஸ்லாமிய ஆச்சாரங்களைச் சரியாகக் கடைப்பிடிக்கக் கூடியவர். அவருடன் எனக்கு ஆத்மார்த்தமான நட்பு ஏற்பட்டது.
தினமும் அவரைச் சந்தித்துப் பேசாமல் என்னால் இருக்க முடியாது. அவராலும் இருக்க முடியாது. குடும்பச் சூழ்நிலை காரணமாக நான் மாறுதல் பெற்று வேறு ஊருக்குச் செல்ல நேரிட்டது.
தொலைத்தொடர்பு வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலகட்டத்தில் வாரம் ஒரு கடிதமாவது ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்டே இருப்போம்.
அவ்வப்போது நேரில் சந்தித்தும் நட்பைப் பகிர்ந்து கொள்வோம். எங்கள் நட்பில் ஜாதி, மதம், எந்தத் தருணத்திலும் குறுக்கிட்டதே இல்லை.
ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட பண்பில் சிறந்த நண்பன் ஒருவன் உள்ளான் என்பதே பெருமைப்படத்தக்கதாகும்.
நட்பில் ஒருவர் தன் நண்பனைவிடத் தான் உயர்ந்தவன் என்று மனத்தில் நினைத்தாலே அங்கு நட்பு போய் விடும். நல்ல நண்பன் கிட்டவில்லை எனில் தனித்திருப்பது மேல் என்கிறார் புத்தர்.
நம்மால் செய்து முடிக்கக்கூடிய கடமைகளையும், செயல்களையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்க வைப்போரது நட்பை நீக்கி விடவேண்டும் என்று கூறுகின்ற வள்ளுவர் பல வகையாலும் ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிந்தபின் கொள்ளாத நட்பானது இறுதியில் தான் சாவதற்குக் காரணமான பெருந்துயரத்தைத் தந்துவிடும் என்கிறார்.
நாம் அணியும் உடைக்கு எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்துத் தேர்ந்தெடுத்து அணிந்து அழகு பார்க்கிறோம். நாம் கட்டும் வீட்டை நம்மால் இயன்ற அளவு அழகுற திட்டமிட்டு அமைக்கிறோம்.
சாதாரணமானது என நினைக்கும் தலை முடியைக்கூட அழுகுபடுத்தப் படாதபாடு படுகிறோம். இன்னும் எத்தனையோ சாதாரண விஷயங்களுக்குக்கூட எவ்வளவோ முக்கியத்துவம் தரும் நாம் நம் நண்பனைத் தெரிவு செய்வதில் அவசரமோ, அலட்சியமோ காட்டிடலாமா?
நல்ல பண்புடையவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதே அறிவார்ந்த
செயலாகும்.
No comments:
Post a Comment