Monday, October 16, 2017

இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன்: ரஷ்ய இளைஞர் பிடிவாதம்

Published : 15 Oct 2017 09:27 IST

இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன் என்று ரஷ்ய சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ (24) என்ற இளைஞர், காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டம் கோயிலில் கடந்த 10-ம் தேதி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரை மீட்ட காவல்துறையினர், பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்துக்கு செல்லாமல் மாயமானார். இந்நிலையில் சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் மற்றொரு கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவரை, சிலர் அடையாளம் கண்டுபிடித்தனர்.
கோயில் வாசலில் பிச்சை எடுப்பது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:
இந்தியாவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள கோயிலில் கை நீட்டினால் எல்லோரும் பணம் கொடுக்கின்றனர். நான் ரஷ்யா செல்ல மாட்டேன். இந்தியாவிலேயே இருக்கப்போகிறேன். என்னிடம் நிறைய பேர் பேசுகின்றனர். பணம் கேட்டால் உடனே கொடுக்கின்றனர். என்னுடன் செல்பி எடுக்க 10 ரூபாய் கேட்டால், உடனே கொடுத்து விடுகின்றனர். என்னை பேட்டி எடுக்க நீங்களும் பணம் கொடுக்க வேண்டும். நான் இந்தியா வந்தபோது ரூ.4 ஆயிரம் மட்டுமே வைத்திருந்தேன். இப்போது அதைவிட அதிகமாக பணம் வைத்திருக்கிறேன். இந்தியாவில் பிச்சை எடுத்து வாழ முடிவு செய்திருக்கிறேன். அடுத்ததாக பெங்களுரு செல்ல திட்டமிட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ இந்தியா வருவதற்கு எந்த குறிப்பிட்ட நோக்கமும் கிடையாது. மனம்போன போக்கில் சுற்றுவது மட்டுமே அவரது இலக்கு. பெர்டிகோவின் கைகளில் முன்னதாக அவர் சென்று வந்த நாடுகளின் கொடிகளைப் பச்சைக் குத்தியுள்ளார். சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியக் கொடியை அவர் பச்சை குத்தியுள்ளார்.
கோயில் வாசலில் ரஷ்ய நாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை அறிந்து மேற்கு மாம்பலம் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை அனைத்தும் சரியாக இருந்தன. நவம்பர் 22-ம் தேதி வரை இந்தியாவில் தங்கியிருக்க அவருக்கு விசா இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிச்சை எடுக்கக்கூடாது என எச்சரித்து போலீ ஸார் அவரை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரஷ்ய தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ, தூதரகத்துக்கு வந்து கேட்டால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும். இந்தியாவில் பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ பிச்சை எடுப்பது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள், பெர்ட்னிகோவ் எவ்ஜெனீயை தொடர்பு கொண்டு பேசிய பின்னரும், பிச்சை எடுப்பதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை’ என்றனர்.

No comments:

Post a Comment

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...