Saturday, February 7, 2015

வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? - கொந்தளிக்கும் ரோஸ்



சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் முன்பு சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருநங்கைகளை நடனமாட வைத்த சம்பவம் திருநங்கைகள் மத்தியில் மட்டுமல்லாது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து நடனமாட வைத்துள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரிபாக்கி வைத்துள்ள அனைத்து தனியார் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் முன்பும் சென்னை மாநகராட்சி திருநங்கைகளை ஆடவைக்குமா என்றும், இது போன்ற நிகழ்வுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் திருநங்கைகள் ஆவேசம் காட்டுகின்றனர்.

கடந்த மாதம் திரைக்கு வந்த `ஐ` திரைப்படத்தில் திருநங்கைகள் பற்றி தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் படத்தின் இயக்குனர் ஷங்கர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.அதில் பங்கேற்ற திருநங்கைகள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்றும், இது போன்று காட்சிகளை அமைத்த இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் திரையுலகைவிட்டே ஷங்கர் போகவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழகம் அளவில் ஊடகங்களிலும், திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த போராட்டம், `ஐ` திரைப்பட இயக்குனர் ஷங்கர் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை போலும். பதில் ஏதும் அவர் கூறவில்லை. இது திருநங்கைகள் மத்தியில் இன்னும் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரி பாக்கியை வசூலிக்க திருநங்கைகளை ஆடவைத்துள்ளது பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பாக திருநங்கைகள் செயல்பாட்டாளர் `இப்படிக்கு ரோஸ்`நமக்களித்த பேட்டியில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் ரோஸ் கூறுகையில், " அரசு அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைதான் வரி வசூலிப்பது. இதில் திருநங்கைகளை நடனமாட வைத்து வரிபாக்கியை வசூலித்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடன்பாடு இல்லாத விஷயம். வரிவசூலுக்காக திருநங்கைகளை பயன்படுத்தியிருப்பது தவறான முன் உதாரணம்.மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியையும் அருவெறுப்பையும் மட்டுமே ஏற்படுத்தும்" என்றார் கொதிப்போடு.

மேலும் ரோஸ், "அரசு அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைக்கு திருநங்கைகள் எதற்கு? அவர்களே அதை செய்துவிட்டு போகலாமே. வரியை வசூலிக்கும் அளவிற்கு அதிகாரிகள் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு ஆடித்தான் வரியை வசூலிக்க முடியும் என்றால் அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..?

வெறுமனே இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு திருநங்கைகளுக்கு நிரந்தர அரசு வேலை தரவேண்டும். எனவே மீண்டும் இது போன்று நிகழ்வுகள் நடக்க கூடாது.

நடந்தால் திருநங்கைகள் பொறுமை காக்க மாட்டோம்" என்றார்.

- தேவராஜன்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024