Sunday, February 8, 2015

மின் வாரியத்தை மிரட்டும் உலக கோப்பை கிரிக்கெட்:கூடுதல் செலவாகும் அபாயம்



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, விரைவில் துவங்க உள்ளதால், தமிழக மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால், மின் வாரியம், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தேவை, சராசரியாக, 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், மின்தடை செய்யப்படுகிறது.

இந்தியா உட்பட, 14 நாடுகள் பங்கேற்கும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், வரும் 14ம் தேதி துவங்கி, மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்திய நேரப்படி, அதிகாலை 3:00 மணிக்கு துவங்கி, பகல் 1:00 மணி வரை, நாள்தோறும், இரு போட்டிகள் நடக்க உள்ளன. தமிழகத்தில், சிறியவர் முதல் பெரியவர் வரை, கிரிக்கெட் போட்டியை ஆர்வமுடன் பார்க்கின்றனர். இதனால், கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, மின் தேவை வழக்கத்தை விட, 500 மெகாவாட் அதிகரிக்கும்.

இதனால், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி, அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால், காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, உச்ச மின் தேவை இருக்கும். அந்த சமயத்தில், நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, காலையில் நடப்பதால், மின் தேவை, வழக்கத்தை விட, 750 - 1,000 மெகாவாட் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தேவை எகிறியது எப்போது? :தமிழகத்தில், கடந்த ஆண்டு, ஜூன் 24ம் தேதி, இரவு 8:25 மணிக்கு, மின் தேவை, 13,775 மெகாவாட் என இருந்தது. அதே ஆண்டு, ஜூன் 20ம் தேதி, ஒருநாள் முழுவதுமான மின் நுகர்வு, 29.34 கோடி யூனிட் என்றளவில் இருந்தது. அதிக மின் தேவை மற்றும் மின் நுகர்வில், இதுவே அதிகபட்ச அளவு. நடப்பாண்டில், இரண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024