Sunday, January 8, 2017

அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல









கோபிநாத் மனைவி துர்கா

ப்ளி முகமும், பட்டாசு வார்தையுமாக மேடைகளை வசீகரிப்பவர் நீயா நானா கோபிநாத். அவர் நான்-வெஜ் பிரியர். மட்டன் பிரியாணியும், மீனும் அவரோட ஃபேவரைட் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது என்கிறார் அவரது மனைவி துர்கா கோபிநாத். தனது சுவையான சமையல் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் துர்கா.

‘‘அவர் வகை வகையாய் கேட்டு மலைக்க வைக்கிற உணவுப் பிரியர் கிடையாது. சமைத்துக் கொடுக்கும் எந்த உணவையும் ரசித்து சாப்பிடுவார். சின்னக் குறைகளுக்கும் முகம் சுளிக்காமல் 'நல்லாருக்கு'னு சொல்லுவார். என் மாமியார் செட்டிநாடு சமையல்ல ஸ்பெஷலிஷ்ட். அம்மாவின் சமையல்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். நான் திருமணத்துக்குப் பின் மாமியார்கிட்டதான் சமையல் கத்துக்கிட்டேன்.

மட்டன் பிரியாணின்னா விரும்பிச் சாப்பிடுவார். செட்டி நாடு ஸ்டைல் சமையலானாலும் அவருக்கு காரம் குறைவாக இருக்கணும். காரம்தான் அவரோட மிகப்பெரிய எதிரி. அதனால பார்த்துப் பார்த்து சமைப்பாங்க மாமியார். மீனும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். மீன் வறுவல், மீன் குழம்பு என எதையும் விட்டு வைக்க மாட்டார். எங்கள் வீட்டு சமையல்ல நள மகாராணினு சொன்னா அது என் மாமியார்தான். மட்டன் பிரியாணி செய்யும் போது அவர் சொல்லச் சொல்ல தேவையான மசாலாக்களை அவர் சொல்லும் பக்குவத்தில் செய்து கொடுப்பேன். அவ்வளவுதாங்க. மத்தபடி எனக்கு சமைக்கத் தெரியாது. அவர் எந்த மூடுல இருந்தாலும் சாப்பிட உக்காரும்போது அவர் அடம் பிடிக்காத குழந்தை மாதிரி. எந்த உணவிலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வார். அவருக்கு சத்தான உணவை சமைத்துக் கொடுப்பதில் அலாதிப் பிரியம் அம்மாவுக்கு’’ என்கிறார் துர்கா கோபிநாத்.
‘‘அவர் டாக் ஷோலதான் மத்தவங்களை போட்டு வாங்குவாரு. ஆனா வீட்டுக்கு வந்தா சுட்டிப் பையன் மாதிரி எப்பவும் ஹியூமர்ல கலக்குவார். என் பொண்ணு வெண்பாவும் அவரும் சேர்ந்தா எனக்கு பிபியை எகிற வைக்கிற அளவுக்கு சண்டை இழுத்து பஞ்சாயத்துக்கு வருவாங்க. நிதானமா யோசிச்சா செம ரசனையான சண்டை அது. அதே சமயம் பொண்ணுக்காக மண்டிப்போட்டு அவளோட விருப்பங்களை, கண்டிஷன்களை எல்லாம் கேட்டுப்பார். வீட்டில் எப்பவும் வெண்பா ராஜ்ஜியம்தான். அவருக்கும் வெண்பாவுக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி எப்படினா, தூக்கம், வலியில கூட வெண்பா அப்பானுதான் கூப்பிடுவா. மறந்தும் அம்மானு கூப்பிட்டதேயில்லை. நாங்க மூணு பேரும் சேர்ந்து இதுவரைக்கும் பல இடங்களுக்கு டூர் போயிருக்கோம். லோக்கல் மார்கெட்டுல ஆரம்பிச்சு பெரிய மால்கள் வரை எல்லாவிதமான உணர்வுகளையும் அவளுக்கு தரணும்னு அவர் விரும்புறார். நான் அதை ரசிக்கிறேன்.

ஒரு டாப்பிக் எடுத்தா அதுல உள்ள புகுந்து ரன்னிங் கமண்ட்ரி அடிக்கிறதுல அவர மிஞ்ச முடியாது. நான் சிரிச்சு சிரிச்சு டயர்ட் ஆகிடுவேன். அவருக்கு புத்தகங்கள் மேல அவளோ காதல். 1000க்கும் மேல புத்தகங்கள் வைச்சிருக்கார். வரலாறு தொடர்பான புத்தகங்கள் விரும்பிப் படிப்பார். எந்த நாட்டின் வரலாற்றைக் கேட்டாலும் மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அவரோட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்" என்கிறார் துர்கா கோபிநாத்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024