Tuesday, January 10, 2017

அச்சுறுத்தாத பேச்சு!

By பி.எஸ்.எம். ராவ்  |   Published on : 10th January 2017 01:11 AM  |
rao
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு, அவரது வயது முதிர்ந்த தாய் உள்பட நாட்டின் 125 கோடி பேரையும் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியது.

பூமிப்பந்தில் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இதுபோன்று நிகழ்ந்ததில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் வங்கிகளின் வாயிலிலும், ஏடிஎம் மையங்களின் முன்பும் மணிக்கணக்கில் தவமிருக்க வேண்டியதாயிற்று.
இதன் காரணமாகத்தான், யார் வீட்டில் எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளதோ, அவர்கள் எல்லோரும் ஒருவித அச்சத்துடனேயே, புத்தாண்டையொட்டி மோடி பேசியதைக் கேட்க குழுமினார்கள்.
அவர்களது அச்சத்துக்கு அடிப்படைக் காரணம் உள்ளது. ஒரு சில குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக, கோடிக்கணக்கான அப்பாவிகளுக்குத் தீங்கு இழைக்கும் வகையிலான நடவடிக்கைகளைத் தன்னால் எடுக்க முடியும் என்று மக்களுக்கு மோடி ஏற்கெனவே உணர்த்தியிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக, மேலும் பயமுறுத்தும் வகையில் எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடாதது மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக, தான் அறிவித்த திட்டத்தின் தோல்வி குறித்து அந்த உரையில் அவர் வாயே திறக்கவில்லை.
கருப்புப் பணத்தை வெளிக் கொணர்கிறேன் என்றும், கள்ளநோட்டுகளை ஒழிக்கிறேன் என்றும், அதன் பின்னர் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவோம் என்றும் கூறி அவர் கொண்டு வந்த திட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் இறந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
அவரது திட்டத்துக்கு மக்களிடம் மாற்றுத் திட்டம் இருந்தது போலவும், மக்கள் தாங்களாகவே முன்வந்து அவரது திட்டத்தால் ஏற்பட்ட கஷ்டங்களை ஏற்றுக் கொண்டது போலவும், மக்கள் செய்த யாகங்களுக்காக அவர் நன்றி கூறினார்.
கூடுதலாக மக்களுக்காக என்று சில திட்டங்களையும் அவர் தனது உரையில் அறிவித்தார். நிதிநிலை அறிக்கை உரையில் நிதி அமைச்சர் அறிவிப்பது போலவும், கடன் திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பது போலவும் அவரது உரை இருந்தது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலுக்காக இருந்தாலும் சரி, ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பட்ட அவதிக்கு ஈடு செய்வதாக இருந்தாலும் சரி, கூர்ந்து ஆய்வு செய்தோமானால், பிரதமரின் இந்த எதிர்பாராத "பரிசுகள்' கண்ணுக்குப் புலப்படும் வகையிலான பலன்களை அளிக்கப்போவதில்லை.
வீட்டுக் கடன் தொடர்பான வட்டிச் சலுகைகளை பிரதமர் வெளியிட்டார். அதன்படி, ரூ. 9 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 4 சதவீதமும், ரூ. 12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3 சதவீதமும் வட்டியிலிருந்து தள்ளுபடி செய்யப்படும். ஊரகப் பகுதிகளில் வீடு கட்ட ரூ. 2 லட்சம் வரை பெறப்பட்ட கடனுக்கு வட்டித் தொகையில் இருந்து 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த அறிவிப்புகள் வரவேற்கத் தகுந்தவை என்றாலும்கூட, வீட்டுக் கடன் பெறுவதில் உண்மையான பிரச்னை வட்டி விகிதம் அல்ல; வீட்டுக் கடன் பெறுவதற்கான திறனும், அதைத் திரும்பச் செலுத்துவதும்தான்.
பிரதமரின் மற்றோர் அறிவிப்பு- விவசாயிகள் நலன் காக்கும் வகையில், ரபி பருவ சாகுபடிக்காக கூட்டுறவு வங்கிகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க் கடனில் 60 நாள் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்பது.
ஆனால், சிறு, குறு விவசாயிகளின் மிகப் பெரிய புகார் என்னவென்றால், கூட்டுறவு வங்கிகள், இதர வங்கிகளில் இருந்து தேவையான அளவு கடன் கிடைப்பதில்லை என்பதுதான்.

வங்கிகள் அளிக்கும் கடன் தொகையில் விவசாயிகளின் பங்கு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அத்துடன், அமைப்பு ரீதியாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் கூட்டுறவு வங்கிகளின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது என்பது கண்கூடு.
1992-க்கு முன்னர் வரை, கூட்டுறவு வங்கிகளின் கடனில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அது இப்போது 17 சதவீதமாகக் குறைந்துவிட்டது. எனவே, இப்போது பிரதமர் அறிவித்துள்ள இந்தச் சலுகை பலன் அளித்தாலும், மிகக் குறைவானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விவசாயக் கடன் வழங்குவதற்காக நபார்டு வங்கிகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது மோடியின் மற்றோர் அறிவிப்பாகும். சிறு, குறு விவசாயிகளுக்கும்,

குத்தகைதாரர்களுக்கும் கடன் அளிக்கும் முறையை செம்மைப்படுத்தாத வரை இதுபோன்ற அறிவிப்புகள் எதிர்பார்த்த பலனை அளிக்காது.
அதேபோன்று, அடுத்த 3 மாதங்களுக்குள் 3 கோடி விவசாயக் கடன் அட்டைகள் "ரூபே' அட்டைகளாக மாற்றப்படும் என்பது மோடியின் மற்றுமோர் அறிவிப்பு. இதுபோன்று மாற்றுவதால் கூடுதலாக பணம் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் இதுவும் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கப் போவதில்லை.

மேலும், நமது நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் வெறும் 40 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் உள்ளன. எனவே, "எந்த வங்கியிலிருந்தும் விவசாயிகள் பணம் பெறலாம்' என்பது வெற்று அறிவிப்பே ஆகும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு விற்றுமுதல் அடிப்படையில் வங்கிக் கடன் 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தனது உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அரசின் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது. ஆனால், பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் தொகை, இந்த அறிவிப்பால் அதிகரிக்குமா என்பது கேள்விக்குறியே.

இதேபோன்று, மூத்த குடிமக்களின் சேமிப்புத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும்வகையில், ரூ. 7.5 லட்சம் வரை செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 ஆண்டுகளுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுபோன்ற டெபாசிட்டுகளுக்கு வங்கிகள் ஏற்கெனவே 7 சதவீதம் அளித்துவரும் நிலையில், மோடியின் புதிய அறிவிப்பின் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக கூடுதலாக ரூ. 625 மட்டுமே கிடைக்கும். ஆனால், நாட்டில் உள்ள மூத்த குடிமக்களில் சொற்பமானவர்களே இந்த அளவுக்கு சேமிப்பு வைத்துள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

மேலும், முறைசார்ந்த தொழில் துறையில் 6 சதவீதம் பேர் மட்டுமே ஏதாவது சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக, நாட்டில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 53 மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக, மகப்பேறு கால உயிரிழப்பைத் தடுக்கும் விதமாக கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 4 ஆயிரம் என்பது ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு வேண்டுமானால் சிறிய அளவில் பலன் கொடுக்கக் கூடியதாக அமையும்.

மொத்தத்தில், புத்தாண்டையொட்டி, பிரதமர் மோடி டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்புகள் மிகப் பெரிய பலன்களை அளிக்கப் போவதில்லை என்பது தெளிவு.

பிப்ரவரி முதல் நாள் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மிகப் பெரும் சலுகைகளை அவர் அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்ததன் மூலம் கடும் இன்னல்களுக்கு ஆளாக்கியதுபோல, உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் வகையில் மேலும் ஏதாவது அதிரடி அறிவிப்புகளை மோடி வெளியிட்டு விடுவாரோ என்ற அச்சமே மக்களிடையே இருந்தது.
குறைந்தபட்சம் அதுபோன்று எதுவும் அறிவிக்காததால், தாற்காலிகமாகவேனும், அவரது புத்தாண்டுப் பேச்சுக்குப் பின்னர் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர, இனி மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கிடைத்த அனுபவங்கள், மக்களின் மீதும், நமது நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் அந்த அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம் குறித்து மோடியும், அவரது அரசும் ஆய்வு மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
ஓர் அறிவிப்பு தோல்வியில் முடிந்தநிலையில், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்க்கக் கூடிய பலன்களை அளிக்காததாகவும், எதிர்விளைவுகளை அளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடக் கூடாது.

இதற்கு முன்னர் அறிவித்த திட்டங்களின் தோல்விகளில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் அதன் செயல்பாடுகள் ஜனநாயகரீதியாகவும் அமைய வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகள், நிலைமையை மோசத்தில் இருந்து படுமோசம் என்ற நிலையை எட்டச் செய்வதாக அமைந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024