Wednesday, January 11, 2017

பொறுத்தார் பூமி ஆள்வார்!

By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா  |   Published on : 11th January 2017 01:29 AM 


ஒருவனுக்கு தினசரி இரவில் தன் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டுவதுபோல் தோன்றியது. பக்கத்து வீட்டு நண்பனிடம் ஆலோசனை கேட்டான். அவன் உள்பக்கத்தில் இருந்து பெரிய ஆணிகளை அடித்தால் வெளியே ஊசி முனையாக இருக்கும் யாரும் கதவை தட்ட மாட்டார்கள் என ஆலோசனை சொன்னான். நண்பன் ஆலோசனையை சிரமேற்கொண்டு ஆணி அடித்து முடித்தான்.
அன்று இரவு அவன் வீட்டிற்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்ட வந்தாள். கதவு முழுவதும் வெளிப்புறம் முள் ஆணியாக இருக்கவே வந்த அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டாமலே போய் பக்கத்து வீட்டு கதவை தட்டி விட்டாள். இந்த கதை வைகோவிற்கும் மிகவும் பொருந்தும்.
தமிழகத்திற்கு அதிகமான இலக்கிய ஆளுமைகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கிய மாவட்டம் நெல்லை மாவட்டம். ஆனால், அம்மாவட்டத்திலிருந்து மக்கள் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைமை ஏற்படவே இல்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் வாய்ப்பு வைகோவுக்கு இருந்தது. அதை அவர் நழுவவிட்டுவிட்டாரே என்கிற ஆதங்கம்தான் இந்தக் கட்டுரைக்கே காரணம்.
வை. கோபால்சாமி என்கிற வைகோ மெத்தப் படித்தவர், மடை திறந்த வெள்ளமாக பேசக்கூடியவர். உலக இலக்கியங்களில் இருந்தும், உலக அரசியல்களில் இருந்தும் கொட்டும் மழையாக விவரங்களை அள்ளித்தரக்கூடியவர்.
அறுபதுகளில் இந்த திறமை உள்ள பேச்சாளர்களின் புகலிடம் திராவிட முன்னேற்ற கழகம் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கொழுந்து விட்டு எரிந்த இந்திப் பிரச்னையும் அரிசிப் பிரச்னையும் அவரை தி.மு.க.விற்கு இழுத்து சென்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நாவன்மை அவரை தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாக்கியது. அந்த நெருக்கத்தின் பயனாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்காமலேயே அவர் மூன்று முறை நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராக முடிந்தது.
அவருடைய பேச்சுத்திறனும், ஆங்கில புலமையும் வடநாட்டு தலைவர்களை ஈர்த்தன. இந்திராகாந்தி, வாஜ்பாய் என அனைவருக்கும் அவர் செல்லப்பிள்ளையானார். சொந்த ஊரான கலிங்கப்பட்டியில், பழுத்த காங்கிரஸ்காரரின் மகனாகப் பிறந்த வைகோ சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவராகவும் பின்னர் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராகப் பணியாற்றினார் என்பது வைகோவின் ஆரம்பகால அரசியல் சரித்திரம்.
அண்ணன் மோட்டார் வாகன விபத்தில் இறந்த இடத்தில் தம்பி தங்கவேலுவை சட்டமன்ற உறுப்பினராக்கி பின்னர் மந்திரியாக உயர்த்தி ஆனந்தப்பட்டார் வைகோ. இன்று தங்கவேலு நெல்லை மாவட்ட தி.மு.க.வின் முக்கிய நபராக இருக்கிறார். ஆனால், வைகோவின் நிலை என்ன?
தி.மு.க.வின் உச்சத்தில் வைகோ இருந்தபோது அடித்தட்டில் இருந்தார் ஸ்டாலின். அவசர நிலையில் ஸ்டாலின் அடைந்த இன்னல்கள் அவரை தி.மு.க.வில் முக்கிய புள்ளி ஆக்கியது. கருணாநிதியின் மகனாகப் பிறந்த ஸ்டாலினுக்கு வைகோ தி.மு.க.வில் ஒரு தடைக்கல்லாகப் பார்க்கப்பட்டார் என்பது நிஜம்.
இந்திராகாந்தி தன் மகன் சஞ்சய் காந்தியையும் பின்னர் ராஜீவ் காந்தியையும் அரசியலில் வளர்த்து விடுவது குடும்ப வாரிசு முறையென தாக்கிப் பிரசாரம் செய்து கொண்டே கருணாநிதி தன் மகன்கள் அழகிரியை மதுரையிலும், ஸ்டாலினை சென்னையிலும் களத்துக்கு கொண்டு வந்து அவர்களை அரசியலில் வளர்த்து விட்டார்.
போதாகுறைக்கு கனிமொழியும் அரசியலில் நுழைய அது குடும்ப அரசியலுக்கு புதிய வியாக்யானமாகியது. கருணாநிதியின் அரசியல் வெற்றிகளும், அவரின் பிள்ளைகளின் உழைப்பும் அவர்களை தி.மு.க.வின் மையப்புள்ளிகளாக மாற்றின.
இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் மாக்கியவெல்லி எனப்படும் கருணாநிதி, வைகோவை தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்ற தனது அவாவை காய்களை சரியாக நகர்த்தி வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
ம.தி.மு.க. என்ற கட்சியைக் கண்ட வைகோவிற்கு ஆரம்பத்தில் தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் குறைவில்லை. ஆரம்பத்தில் கட்சியை நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிலை நிறுத்திய வைகோ தன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தார். ஆனால் அவர்கள் இப்போது அற்றநீர் குளத்துப் பறவைகளாக வைகோவை விடுத்து அரசியல் லாபங்களைத் தேடிச் சென்றுவிட்டனர்.
வைகோ ஜெயலலிதாவால் பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது அரசியல் லாபங்களையும் தேர்தல் கூட்டணிகளையும் மனத்தில் வைத்து கருணாநிதி அவரை சிறைச்சாலையிலேயே சென்று சந்தித்தார்.
வலியத் தேடிப் போய் கூட்டணிக்குக் கருணாநிதி ஆள் பிடித்தது அதுதான் முதலும் கடைசியும். ஆனால் சிறையிலிருந்து வெளிவந்த வைகோ யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து தன்னுடைய அரசியல் அஸ்தமனத்தின் முன்னுரையை எழுதினார்.
மக்கள் நல கூட்டணி என்று ஏற்படுத்தியபோது மாற்று அரசியலை வைகோ கொண்டு வருவார் என எல்லோரும் எதிர்பார்த்த சமயம் ஜெயலலிதாவால் கை கழுவி விடப்பட்ட விஜயகாந்திடம் சரணடைந்து அவரை முதல்வர் வேட்பாளர் என அறிவித்து தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
தேர்தல் அரசியல் வேண்டாம் சமூக சீர்திருத்தம்தான் என்னுடைய நோக்கம் என பெரியார் சொன்னபோது, சமூக சீர்திருத்தத்தை ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொண்டு வரலாம் என சொல்லி, சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து அண்ணாதுரை தேர்தல் அரசியலுக்கு மாறி ஆட்சியைப் பிடித்தார். அவருடன் இருந்த கருணாநிதி ஆட்சியையும் கட்சியையும் தன் சாமர்த்தியத்தால் தன் கைக்குள் கொண்டு வந்தார். ஆனால் வைகோ சாதித்தது என்ன?
இதற்கு நேர் எதிர், சின்னம்மா என்று இன்று அழைக்கப்படும் வி.கே. சசிகலா. பேப்பர் பையனாக வாழ்க்கையை தொடங்கிய அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்ததும், டீ விற்பவராக இருந்தவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆவதும், தமிழகத்தின் முதல்வர் ஆவதும் ஜனநாயகத்தின் உச்சங்கள்.
எனவே ஒரு கேசட் கடை நடத்திய பெண்மணி ஒரு கட்சியின் தலைவி ஆவதும் அல்லது நாளை முதல்வராகவேகூட ஆவதும் ஜீ பூம்பா அதிசயம் ஒன்றுமல்ல.
இதற்கு பின்னால் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் திட்டமிடலும் பொறுமையும் இருக்கிறது. ஜெயலலிதா போன்ற குணநலன்கள் கொண்ட ஒரு பெண்மணியை ஒருவர் முப்பது ஆண்டுகள் சமாளித்ததே ஒரு மாபெரும் சாதனைதான்.
முப்பது ஆண்டுகளுக்கு மேல் அவர் பேசாமல் மெளனம் காத்ததால் அவர் குரல் எப்படி இருக்கும், அவர் என்ன பேசுவார் என தமிழக பத்திரிக்கைகளையும், காட்சி ஊடகங்களையும், ஏன், தமிழக மக்களையும் ஆர்வத்தோடு காத்திருக்க வைத்தது எது?
1996-இல் ஜெயலலிதாவின் தேர்தல் தோல்விக்கும் சறுக்கலுக்கும் முக்கியமான காரணம் வளர்ப்பு மகன் திருமணம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவர் சின்னம்மாவின் ரத்த சொந்தம் என்பது ஒன்றும் ரகசியம் அல்ல. திருமணத்தில் உடன்பிறவா சகோதரிகள் அணிந்து நடந்து வந்த நகைக் கடை காட்சி இன்றும் கண்ணில் நிற்கிறது.
ஆனால் அந்த சறுக்கலால் அவர்களுடைய உறவை பிரிக்க முடியவில்லை. காரணம் சசிகலா அல்லது அவரை இயக்குவதாக சொல்லப்படும் அவருடைய கணவரின் ஆழ்ந்த திட்டமிடல்.
உன் குடும்பமே எனக்கு எதிராக சதி செய்கிறது என சொல்லி அனைவரையும் வேதா இல்லத்திலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. அவர்களோடு சசிகலாவும் வெளியேற்றப்பட்டார். "எனக்கொன்றும் தெரியாது என்னை மன்னித்து விடுங்கள்' என கடிதம் எழுதி ஜெயலலிதா ஜோதியில் மீண்டும் ஐக்கியமானார் சசிகலா.
அப்படியென்றால் ஜெயலலிதா ஒன்றும் அறியா பெண்ணா? சசிகலாவின் சொந்த பந்தங்கள் ஜெயலலிதா தொடர்புடைய கம்பெனியின் பங்குதாரர்களாகவும் இயக்குநர்களாகவும் மேலாண்மை இயக்குநர்களாகவம் இருந்தது எப்படி? இவையெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா?
ஜெயலலிதாவிடம் சசிகலா திரும்பி வந்தது போல, கருணாநிதியே நேரில் வந்தும் அவரிடம் செல்ல விடாமல் வைகோவை தடுத்தது எது? வைகோவை கருணாநிதி வெளிப்படையாகக் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஆனால் சசிகலாவை ஜெயலலிதா தன்னுடைய வீட்டை விட்டு மட்டுமல்ல, கட்சியை விட்டும் வெளியேற்றினார்.
அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்புகளை அவரிடமிருந்து பறித்தார். காலம் கனிந்தது; பிரிந்தவர் கூடினர்; கண்கள் பனித்தன; சசிகலாவிற்கு அனைத்தும் திரும்பக் கிடைத்தன. ஜெயலலிதாவே திரும்பக் கொடுத்தார்.
யார் என்ன சொன்னாலும் 75 நாட்கள் ஜெயலலிதாவுடன் சசிகலா ஆஸ்பத்திரியில் இருந்தது உண்மை. சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நட்பின் ஆழம் வெளியே தெரியாது. இருவரும் விரோதிகளாக ஒரு வீட்டிற்குள் இருந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பரிச்சயமானவர் வைகோ.
அந்த வாய்ப்பு சசிகலாவிற்கு இல்லை. வைகோவை போல சசிகலா படித்தவர் அல்ல, திறமையான பேச்சாளரும் அல்ல. அப்படி இருந்தும், இன்று சகிகலா அடைந்திருக்கும் நிலைக்கு அவருடைய பொறுமையே காரணம்.
ஜெயலலிதா இருக்கும்போது கனவில்கூட காண முடியாதது நடக்கிறது. அவர் பதவி ஏற்றபோது நிகழ்ச்சிக்கு வந்த ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம். தேர்தலில் தோற்ற சரத்குமாருக்கு முன் வரிசையில் இடம். இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு, கருணாநிதி ஆஸ்பத்திரியில் இருக்க, அவரது உடல் நலம் விசாரிக்க அ.தி.மு.க. தூதுவர்கள்! சபாஷ் சரியான மாற்றம்!
"ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு' என்கிறது தமிழ் இலக்கியம். எல்லாம் கற்றுத் தேர்ந்த வைகோ அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்கிற ஒரு விஷயத்தை மட்டும் கற்க மறந்துவிட்டார். இதுதான் வைகோவின் வீழ்ச்சிக்கு காரணம்.
தமிழ் நன்கறிந்த வைகோவிற்கு ஒரு பழமொழி தெரியாமல் போய் விட்டது. பொறுத்தார் பூமி ஆள்வார்.
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024