Sunday, February 8, 2015

வங்கிகள் பாதுகாப்பானவையா?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வங்கி ஒன்றில் அண்மையில் நடந்த நகைத் திருட்டும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நடந்த திருட்டு முயற்சிகளும், வேறு பல இடங்களில் நடந்த ஏ.டி.எம். மைய திருட்டுகளும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், சாமான்யர் ஒருவர் வங்கியில் கடன் பெறுவதென்பது மிகவும் சிரமமான விஷயம். அதையும் மீறி வங்கிக் கடன் பெற்றுவிட்டால், அதைத் திரும்பச் செலுத்தும் வரை அவருக்கு நிம்மதி இருக்காது. அதனால், அப்போது கடன் வாங்குவதற்கே பலர் யோசனை செய்வார்கள்.

அவசர பணத் தேவைக்கு பொதுமக்கள் பெரிதும் நம்பியிருப்பது வங்கிகள் தரும் நகைக் கடனை மட்டுமே.

இப்போது, வங்கிகள் அதிகமாகக் கடன் வழங்கினால்தான் அவற்றின் வர்த்தகம் அதிகரிக்கும் நிலை. இதனால், எல்லா வங்கிகளும் போட்டி போட்டுக் கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

வீடு, கார், இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான கடன், நகைக் கடன், தனி நபர் கடன் என பல்வேறு வகைகளில் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளின் நடைமுறைகளிலும் அண்மைக்காலமாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்கள் தங்களின் அவசர பணத் தேவைக்காக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்த 48 கிலோ நகைகளை ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இதேபோன்ற மற்றொரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் உள்ள வங்கிளையொன்றிலும் நடந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 48 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் இரவுக் காவலர் கிடையாதாம். பொதுமக்களின் நகைகளையும் ரொக்கத்தையும் வைத்துள்ள ஒரு வங்கியில் இரவுக் காவலர் இல்லாதது ஏன்?

அந்த வங்கிக் கட்டடத்தில் பாதுகாப்புக்காக உள்ள ஐந்து கதவுகளைத் திறந்தால்தான் எவரும் உள்ளே வர முடியுமாம். அப்படியென்றால், இந்த விஷயங்களெல்லாம் அறிந்தவர்கள்தான் இந்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருக்க முடியும்.

ஒரு வங்கியில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் இணைப்பையும் பாதுகாப்புப் பெட்டக எச்சரிக்கை மணி இணைப்பையும் துண்டித்துவிட்டு மிகச் சாதாரணமாக 48 கிலோ நகைகளை ஒரு கும்பல் திருடிச் செல்கிறது என்றால், அந்த வங்கியின் பாதுகாப்பைப் பற்றி என்ன சொல்வது? பாதுகாப்புக்காக சிறிய தொகையை செலவு செய்யக்கூடாதா?

எப்போதுமே திருடர்களின் குறி கிராமங்களில் ஒதுக்குப் புறமாக உள்ள வங்கிக் கிளைகள்தான்.

கிருஷ்ணகிரி மாவட்ட வங்கியில் திருடப்பட்ட நகைகளின் உரிமையாளர்கள் மிகவும் ஏழைகள். தங்களின் நகைகள் மீண்டும் தங்களுக்குக் கிடைக்குமா என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

அவர்களுக்கு வங்கியின் அதிகாரிகள் இதுவரை சரியான பதிலைச் சொல்லவில்லை. எடைக்கு எடை நகையோ அல்லது தங்கமோ கிடைக்கும் என்று மட்டும் சொல்லியுள்ளனர்.

திருட்டுப் போன நகைகளுக்கு உரிய ரசீதுகளை வைத்திருப்பவர்கள் கடன் வாங்கிய பணத்தைத் திரும்பக் கட்டினால் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றனர். நகைகள் கிடைக்காவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?

வேறு நகைகளைத் தருவது என்றால் எப்படி? தங்கத்தின் அன்றைய கிராம் விலைக்கும் கூடுதலாகத்தான் ஆபரண விலை இருக்கும். கூடுதல் செலவுக்கு யார் பொறுப்பேற்பது? இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

வங்கிகள், ஒவ்வோர் ஆண்டும் தங்களின் லாபக் கணக்கை அதிகரித்துக் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வங்கிக் கிளைகளுக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கும் போதுமான இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், தங்களின் நகைகளை இழந்து தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, நகைகளாகவே வழங்க வேண்டும்.

ஏ.டி.எம். மையங்களில் வைப்பதற்காகக் கொண்டு சென்ற பணம் திருட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்ட பணம் திருட்டு என திருடுபவர்களும் புதுப்புது விதமாகத் திருடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொழில் நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் அவருக்குத் தெரியாமலே மாயமாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

அந்தச் சமயத்தில் தவறு தங்கள் ஊழியர்கள் மீது என்று தெரிந்தால் வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் பணத்தைத் திரும்பத் தருகிறது. இது போல வாடிக்கையாளர்கள் இழந்த நகைகளையும் அவர்களுக்குத் திரும்பத் தர வேண்டும்.

வங்கிகள், பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால், இப்போது லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பெரும்பாலான வங்கிகள் செயல்படுகின்றன.

முன்பெல்லாம், வங்கிகளில் இருக்கும் பெட்டகங்கள் பாதுகாப்பானவை என்று கருதினர். ஆனால், இப்போது வங்கியிலுள்ள பெட்டகத்தையே திருடலாம் எனும்போது வங்கிகள் பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுகிறது.

முதலில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வங்கிக் கிளைகளின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வங்கிகள் பாதுகாப்பானவயா என்ற கேள்வி மாறி வங்கிகள் பாதுகாப்பற்றவை என்கிற முடிவுக்கு பொதுமக்கள் வருவதென்பது தவிர்க்க முடியாதது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024