சென்னை சட்டக் கல்லூரியை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மற்றும் மாணவர் விடுதிக்கு ஏழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும், வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்து, மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய சாலை மறியலும், பாரிமுனை பகுதியில் ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறும்,அதனைத்தொடர்ந்து காவல் துறை நடத்திய தடியடியும், மாணவர்களின் கல்வீச்சில் பொதுமக்கள் காயமடைந்ததும் விரும்பத்தகாத நிகழ்வுகள்.
சென்னை சட்டக் கல்லூரி 1891-இல் தொடங்கப்பட்டது.
அந்தக் கட்டடம் பிரிட்டிஷ் அரசின் கட்டடக் கலைஞர் ஹென்றி இர்விங் என்பவரால், இந்தோ - சாக்ரானிக் பாணியில், இந்து - முகமதிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் கட்டடமாக அமைக்கப்பட்டது. தற்போது அக்கட்டடம் வலுவிழந்து நிற்கிறது.
1976-ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியபோது தனியொரு அடுக்குவளாகம் கட்டப்பட்டு, கூடுதலாக ஏழு வகுப்பறைகள் உருவாகின. இந்த வளாகத்தை பாரம்பரியக் கட்டடமாக அன்று அரசு அறிவித்திருந்தால், இந்தப் புதிய கட்டடம் அமைவதற்கான வாய்ப்பு 1976-இல் ஏற்பட்டிருக்காது. அப்போதே வேறு இடம் தேட வேண்டிய அவசியம் நேரிட்டிருக்கும். இப்போது இடத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இந்தப் பாரம்பரியக் கட்டடத்தை இடிக்கப் போகிறோம் என்று அரசு சொன்னால் அதை சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பது நியாயம். இந்தக் கட்டடம், வேறு அரசு அலுவலகங்கள் அல்லது உச்சநீதிமன்றத்தின் வேறு பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் என்று சொன்னாலும் மாணவர்கள் எதிர்க்கலாம், போராடலாம். அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், பழைமையான கட்டடம் வலுவிழந்து வருவதாலும், மாணவர்கள் எண்ணிக்கையின் அளவுக்கு ஏற்ப கட்டடத்தில் வசதிகள் இல்லை என்பதாலும் வேறு இடத்துக்கு கல்லூரியை மாற்ற வேண்டிய நிர்பந்தமானது, தமிழக அரசு மேற்கொண்ட முடிவு அல்ல; காலம் திணித்த முடிவு.
மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சட்டக் கல்விகள் இயக்குநர், "அடுத்த ஆண்டு முதலாக கல்லூரியில் சேரும் மாணவர்கள்தான் புதிய வளாகத்தில் படிக்கப் போகிறார்கள். தற்போது படிக்கும் மாணவர்கள் அனைவரும் படிப்பை முடித்து வெளியேறும் வரை, இந்தக் கட்டடத்தில் படிப்பீர்கள்' என்று உறுதி கூறியதையும்கூட மாணவர்கள் ஏற்க மறுத்து, "நிரந்தரமாக இந்தக் கல்லூரி இதே வளாகத்தில்தான் செயல்பட வேண்டும்' என்று கோரியிருக்கிறார்கள்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறும் சட்டக் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் மிக முக்கியமானது சட்டக் கல்லூரியின் பரப்பளவு. நகரம் எனில் ஐந்து ஏக்கர், ஊரகப் பகுதி என்றால் பத்து ஏக்கர் இருக்க வேண்டும். கட்டடத்தில் விரிவுரைக்கூடம் ஒரு மாணவருக்கு 15 சதுர அடி அளவாகவும், நூலகம் உள்ளிட்ட பிற அறைகள் ஒரு மாணவருக்கு 20 சதுர அடி என்பதாகவும் கணக்கிடப்பட்டு, கட்டடம் அமைந்திருந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 28.3.2013 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த விதிமுறை ஏற்கெனவே இணைவு பெற்றுள்ள கல்லூரிகளுக்குப் பொருந்தாது என்பது உண்மைதான். ஆனால், அது நிரந்தரச் சலுகை அல்ல. மற்ற சட்டக் கல்லூரிகளுக்கு இணையாக பழைய கல்லூரிகளும் தங்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம்தான் இது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
"உயர்நீதிமன்றத்தையொட்டி இப்போது சட்டக் கல்லூரி இருப்பதால்தான் மூத்த வழக்குரைஞர்களிடம் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது' என்று மாணவர்கள் முன்வைக்கும் வாதத்தில் அர்த்தம் இருக்கிறது என்றாலும்கூட, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சட்டக் கல்லூரிகள் நீதிமன்றத்தையொட்டியா இருக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது.
ஒவ்வொரு சட்டக் கல்லூரியிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த வழக்குரைஞரை அழைத்துப் பேச வைத்து, அவரிடம் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவது மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் குறை, நிறைகள் என்ன? தற்போது அவசர சட்டத்தின் மூலம் அமலுக்கு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள விதித்தளர்வில் சாதக, பாதகமென்ன? இதுபோன்ற கருத்தரங்குகள் அல்லது சட்ட வல்லுநர்களின் சிறப்பு சொற்பொழிவுகள் எந்த சட்டக் கல்லூரியிலும் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை.
மாணவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியும். அவர்களும் புரிந்துகொள்வார்கள். ஆனால், இதில் அரசியல் கட்சிகள்தான் மிகப்பெரும் தடையாக இருக்கின்றன. இன்றைய அரசியல் சூழலால், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் மாணவர்களுக்கு துணை நிற்பதால்தான் இந்தப் போராட்டம் பிடிவாதத்துக்காக நடத்தப்படுகிறதே தவிர, வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசு எடுத்த முடிவு காலத்தின் கட்டாயம். கட்சிகளின் அரசியல் ஆதாயத்துக்கு மாணவர்கள் பலியாகிவிடக் கூடாது. சட்டப் படிப்பின் அடிப்படை, வாதம் செய்வதுதான்; பிடிவாதம் செய்வதல்ல.
No comments:
Post a Comment