Sunday, February 8, 2015

கத்திப்பாராவில் குளிர்சாதன வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் சென்னையில் முதல்முறையாக அமைப்பு


சென்னையில் முதன்முதலாக கத்திப்பாரா ஆசர்கானாவில் ரூ.1 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் இன்னும் ஒரு வாரத்திற்குள் திறந்து வைக்கப்படும் என கண்டோன்மென்ட் போர்டு அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்கள் அவதி

சென்னைக்கு நுழைவு பகுதியாக ஆலந்தூர் கத்திப்பாரா உள்ளது. கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் நின்று செல்கின்றன. மாநகர பஸ்களும் நின்று செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இங்குள்ள பஸ் நிறுத்தங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதி பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டு எல்லையில் வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள், வயதானவர்கள் கழிப்பிட வசதி இன்றி கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

நவீன பஸ்நிறுத்தம்

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் சார்பில் கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் குளிர்சாதன வசதி, டி.வி. மற்றும் ஏ.டி.எம். வசதிகளுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் நவீன பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. பஸ் நிறுத்தம் முழுவதும் ரகசிய கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும். பஸ் நிறுத்தத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக ஆட்கள் இருப்பார்கள். பொதுமக்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையில் இருந்து டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

எந்த பகுதிக்கு செல்லும் பஸ் வருகிறது என்பதை அறையில் உள்ள டி.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வாரத்தில் திறப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் முதன்முதலாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தம் இது தான்.

இந்த புதிய பஸ் நிறுத்தம் இன்னும் ஒருவாரத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பிரபாகரன் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024