Sunday, February 8, 2015

மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் தவறான தகவல்:ஒரே விவரம் இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தி

மின் இணைப்பு பெயர் மாற்றத்தின் போது, மின் கணக்கீட்டு அட்டை, கம்ப்யூட்டர் ரசீதில், தவறான தகவல் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, 1.73கோடி உட்பட, மொத்தம், 2.53 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.


புதிய மின் இணைப்பு:புதிய மின் இணைப்பு பெற, ஒரு முனை, 1,650 ரூபாய்; மும்முனை, 8,500 ரூபாய் கட்டணத்துடன், மீட்டர், 'கேபிள்' போன்றவற்றிற்கு, மதிப்பீட்டு தொகை, தனியாக செலுத்த வேண்டும். ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற, அதற்கான விண்ணப்பத்தை, மின் வாரிய இணையதளத்தில், பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, வீடு பெயர் மாறியுள்ள சொத்து பத்திரம், சொத்து வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, வாரிசு சான்றிதழ் என, ஏதேனும் ஒன்றின் நகலுடன் இணைத்து, 200 ரூபாய் கட்டணத்துடன், உதவி பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். உதவி பொறியாளர், விண்ணப்பத்தை சரிபார்த்து, செயற் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள, கணக்கீட்டு பிரிவிற்கு, அனுப்பி வைப்பார்.

செயற் பொறியாளர் அலுவலகத்தில், விண்ணப்பதாரர் கோரிய பெயருக்கு, மின் இணைப்பு செய்யப்பட்டு, அதன் விவரம், உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில், உதவி பொறியாளர் அலுவலகத்தில், மின் பயன்பாடு கணக்கீட்டு அட்டையில், புதிய பெயர் எழுதப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வழங்கப்படும். இந்த விவரம், அனைத்தும், பிரிவு அலுவலகத்தில் உள்ள, கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் ரசீதில்...:ஆனால், அவ்வாறு, பதிவு செய்வது கிடையாது. இதனால், மின் கட்டண மையங்களில், மின் கட்டணம் செலுத்தும் போது, தரப்படும், ரசீதில், சொத்தின் பழைய உரிமை யாளர் பெயர் உள்ளது. ஒரே மின் இணைப் பில், மின் கணக்கீட்டு அட்டையில், ஒருவர் பெயரும், கம்ப்யூட்டர் ரசீதில், வேறு ஒருவர் பெயரும் இருப்பது, மக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் அலுவலகத்தில்,மக்கள் தரும் விண்ணப்பம், அனைத்தும், பதிவேடுகளில்,பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு, பதிவு செய்யாமல், இடைத்தரகர் மூலம் விண்ணப்பம் பெறுவதால், இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால், விண்ணப்பத்தை, கம்ப்யூட்டரில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஏழு நாட்கள்:மின் இணைப்பில், பெயர் மாற்றம் செய்ய வழங்கப்படும், விண்ணப்பம் மீது, ஏழு நாட்களுக்குள், தீர்வு காண வேண்டும். ஆனால், உதவி, செயற் பொறியாளர், ஒரு மாதத்திற்கு மேல், அதை மாற்றி தராமல், மக்களை அலைக்கழிக்கின்றனர். எனவே, மின் வாரிய இயக்குனர்கள், தலைமை, மேற்பார்வை பொறியாளர்கள், பிரிவு அலுவலகங்களில், நேரடி ஆய்வு செய்தால் மட்டும், மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

- நமது நிருபர் -



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024