மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, 'ஐ.என்.டி' என்ற, உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, இந்த வகை நம்பர் பிளேட்டை பொருத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என, கடந்த 2011ல், மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அதே சமயம் வேறு சில மாநிலங்கள் ஐ.என்.டி. நம்பர் பிளேட் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் போலி ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த வாரம் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் போலி நம்பர் பிளேட் தொடர்பாக விசாரிக்குமாறு கோயம்புத்தூர் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் உபயோகிக்கக்கூடாதென்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
தற்போது மாநில காவல்துறை, இது போன்ற நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களிடம் அதை மாற்றி விட்டு கோர்ட் உத்தரவுப்படி பழைய மாடல் நம்பர் பிளேட்டுகளை உபயோகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து வரும் திங்கள் முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment