உலகில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும்போதும், கேட்கும் போதும் 'மனிதம் செத்துக்கொண்டிருக்கிறது' என்றுதான் பலரும் புலம்பித் தீர்க்கிறார்கள். பிரிட்டனில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டால், மனிதம் எப்போதும் சாகாது என்கிற நன்னம்பிக்கை அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும்!
பிரிட்டனை சேர்ந்த 67 வயது ஆலன் பர்ன்ஸ், பிறக்கும் போதே பார்வைக் குறைபாட்டுடனும், வளர்ச்சிக் குறைபாட்டுடனும் பிறந்து, கஷ்டப்பட்டு தன் வாழ்நாளை நகர்த்தி வந்தார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி, இவரைத் திருடன் ஒருவன் தாக்க, அவரிடம் பணமேதும் இல்லை என்றதும், அப்படியே கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.
கழுத்திலும், கையிலும் அடிபட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலன் பற்றி, உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதைப் பார்த்த கேத்தி கட்லர் என்னும் இளம்பெண், முதியவர், அதுவும் பார்வையற்ற, தன்னை தற்காத்துக் கொள்ளும் திராணியற்றவர் என்றுகூட பாராமல் ஈவு இரக்கமின்றி நடந்துகொண்ட அந்த திருடனின் செயலில் அதிர்ச்சியுற்றார்.
'ஐயோ பாவம்’ என்று விலகிவிடாமல், உதவும்படி என்ன செய்யலாம் என்று அக்கறையுடன் யோசித்தார். இவரின் மெனக்கெடலுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கிறது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி!
பாதிக்கப்பட்ட ஆலனுக்கு உதவிடும் நோக்கில் இணையத்தில் ‘ஆலன் பர்ன்ஸ் ஃபண்டு’ என்ற பக்கத்தை ஆரம்பித்தார் கேத்தி கட்லர். இந்தப் பக்கத்தின் மூலம் குறைந்தது 500 யூரோவாவது நிதி திரட்டிட வேண்டும் என்று நினைத்திருந்த கேத்திக்கு, காத்திருந்தது ஆனந்த அதிர்ச்சி. அந்தப் பக்கத்தை தொடங்கிய நான்கே நாட்களில் 2,82,673 (இந்திய பண மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) யூரோ வரை நிதி கிடைத்துள்ளது.
அமெரிக்கா, கனடா, ஹாலந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் இருந்து நீண்டிருக்கின்றன உதவும் கரங்கள். மேலும், அந்தப் பக்கத்தில் இவர்கள் அனைவரும் ஆலன் குணமடைய வேண்டி தங்கள் பிரார்த்தனைகளையும் சேர்த்துள்ளனர்!
மனிதம் வாழ்க!
- யதி
No comments:
Post a Comment