Friday, February 6, 2015

பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?





'ஹலோ, நான்தாங்க பேசுறேன். எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. நைட் டின்னர் பண்ண முடியாது. நீங்க ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துடுங்க!''

- வாரத்தில் ஏதாவது ஒரு நாள் பெரும்பாலான குடும்பங்களிலிருந்தும் இப்படி ஒரு போன் கால் பதிவாகும்.

''சரி... என்ன வாங்கி வரட்டும்?'' என்ற குடும்பத் தலைவரின் கேள்விக்கு, பெரும்பாலான குடும்பத் தலைவிகளும், குழந்தைகளும் கோரஸாக சொல்லும் பதில் - ''பரோட்டா!''

இது என்ன உளவியல்..? இருக்கிறது விஷயம்.

''நம் பெண்களால் எளிதாக வீட்டில் செய்யமுடியாத ஒரு அயிட்டம்... பரோட்டா. ஆகையால், அதன் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு!'' என்கிறார் கோயம்புத்தூரில் வசிக்கும் குடும்பத் தலைவி ஜெயலட்சுமி.

''இட்லி, தோசை, சப்பாத்தி என்று விதவிதமாக வீட்டில் சமைத்தாலும், பரோட்டாவை மட்டும் பெண்களால் வீட்டில் அத்தனை சுலபமாக செய்ய முடிவதில்லை. மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசை பிசை என்று பிசைந்து, சரியான பக்குவத்துக்குக் கொண்டு வருவதற்குள்... நாக்குத் தள்ளிவிடும். தோசைக்கல் எல்லாம் பரோட்டாவுக்கு சரிப்படாது. மேலும் கியாஸ் அடுப்பில் ஏறும் தோசைக்கல் சூடும் போதாது. பரோட்டா சுடுவதற்கு விறகு அடுப்புதான் சரி. இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆக, வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது!'' என்று சிரித்தபடியே சொல்கிறார் ஜெயலட்சுமி.

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏக பிரபலம் 'கோபால் பரோட்டா கடை’. அங்கே செம பிஸியாக இருந்த முகமது ரிலா, ''26 வருஷமா பரோட்டா கடை வெச்சுருக்கோம். கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, விருதுநகர் வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டை லாப்பா - இப்படி பல வெரைட்டீஸ் இருந்தாலும்... நாங்க பிளெயின் பரோட்டாதான் போடுறோம். எங்க கடை நூறு சதவிகிதம் சுத்த சைவம். சாப்பிட வர்றவங்க எல்லாருமே... முதல்ல நான் எப்படி பரோட்டா போடுறேன்ங்கிறத உத்து பாத்துட்டே இருப்பாங்க. இந்தப் பக்கமா வண்டிகள்ல போறவங்களும்கூட ஒரு நிமிஷம் திரும்பிப் பாக்காம போக மாட்டாங்க'' என்று வாய்கொள்ளா சிரிப்புடன் சொல்லும் பரோட்டா மாஸ்டர் முகமது ரிலா,

''எங்க கடைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கஸ்டமர்கள் வந்து போறாங்க. ஆச்சர்யம் என்னனா... இப்போ ஆண்களைவிட பெண்கள்தான் பரோட்டாவை விரும்பிச் சாப்பிடறாங்க. 'எத்தனை பரோட்டாம்மா..?’னு 'வீட்டுல’ போன்ல கேட்டுட்டே இங்க பார்சல் கட்டி வாங்கிட்டுப் போறவங்கதான் அதிகம்!'' என்கிறார் சின்னச் சிரிப்புடன்.

''ஆமாம்... எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பரோட்டானா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, வீட்டுல செய்றதுக்கு ரொம்ப மெனக்கெடணும். அதனால எப்பவெல்லாம் எங்க நாக்குக்கு பரோட்டா தேடுதோ, அப்போவெல்லாம் என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் பண்ணிட்டா போதும். 'அப்போ இன்னிக்கு உன் சமையல்ல இருந்து விடுதலையா..?’னு சிரிச்சுட்டே பார்சலோட வந்துடுவாரு'' என்று ஆமோதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாலா சங்கர்.

''ஆமாம்... பீட்ஸா, பர்கர்னு எத்தனை அயிட்டம் வந்தாலும் பரோட்டாவை அடிச்சுக்க முடியாது. நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து எப்படியும் மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் பரோட்டா வேட்டைக்கு கிளம்பிடுவோம். வாரத்துக்கு ஒரு முறை அடம் பண்ணி வீட்டுக்கும் பார்சல் வாங்கிட்டு வர வெச்சுடுவோம்!'' என்கிறார் கல்லூரி மாணவி மகாலட்சுமி.

''சும்மா நாலா பக்கமும் அடிச்சு லேயர் லேயரா இருக்குற பரோட்டாவோட... பாயா, சேர்வானு ஊத்தி அடிச்சுப் பாருங்க... செமசெம கிக்குதான்! நாலு பேர் ஒண்ணு சேந்துட்டா... பரோட்டா மாஸ்டரை உண்டு இல்லைனு பண்ணிடுவோம். 'பரோட்டா' சூரி மாதிரி நாங்க போட்டிப் போட்டுட்டு பரோட்டா சாப்பிட்டு, கடையையே காலி பண்றதெல்லாம்கூட அப்பப்ப நடக்கும்'' என்று ரசிக்க ரசிக்கச் சொல்கிறார் கல்லூரி மாணவர் ரத்னா!

இப்படி விஜய், சூர்யா, அஜீத்தைவிட பரோட்டாவுக்கு ரசிகர்கள் இருப்பதால்தான்... டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டேஷன் மாஸ் டர் (!!) வரிசையில், இன்று பட்டிதொட்டியெங்கும் 'ஹீரோ'வாக வலம் வருகிறார்கள்... 'பரோட்டா மாஸ்டர்'கள்! கொதிக்கும் அடுப்பு முன்பாக, கொசுவலை பனியன் அணிந்தபடி, பரோட்டா கல்லில் 'டன்டன்டன்டன்' என்று அவர்கள் எழுப்பும் இசைதான்... இன்று, தமிழகத்தின் 'தேசிய இசை'யாகவே மாறிக்கிடக்கிறது!

40 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை ஓரக்கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த இந்த பரோட்டா, இன்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலும் கிடைக்கிறது என்றால், அது பரோட்டாவுக்கு கிடைத்த 'பத்மபூஷண்' விருதுதான்!

- ஜி.பழனிச்சாமி, பொன்.விமலா

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், அபிநயா சங்கர்

'செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா!

''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி, பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.

''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க... கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,

''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சம அளவுகளில் அந்த மாவை உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து... சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன் கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து, இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச் சாப்பிட்டால், ருசியோ ருசிதான்!'' என்ற தாமு,

''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்... வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால், உள்புறம் வெந்திருக்காது. அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்'' என்று டிப்ஸ்களையும் தந்தார்!

நல்லதா... கெட்டதா?

''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார், சென்னை, டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.

''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.

மைதா மூலம் தயாராகும் பரோட்டாவில் உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள் ஏதும் இல்லை. பரோட்டாவுடன் சேரும் குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன் மற்றும் கலோரிகளை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது, துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.

பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். பெரிதாக பிரச்னை இல்லை. ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி, 'டெக்ஸ்’கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள்.

பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது. இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை தவிர்க்க வேண்டும்.

'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர வேண்டும்’ என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார் ஷைனி சந்திரன்.

பரோட்டா பிரியர்களே... உஷார்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024