Saturday, February 7, 2015

பாகிஸ்தானில் முதல் முறையாக 'ஷோலே' திரைப்படம் ரிலீஸ்

கராச்சி: அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, 'ஷோலே' இந்தி திரைப்படம், முதல் முறையாக, பாகிஸ்தானில் உள்ள தியேட்டர்களில் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது.

கடந்த, 1975ல், ரமேஷ் சிப்பி இயக்கத்தில், 'ஷோலே' இந்தி திரைப்படம் வெளியானது. அப்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுக்கு ஜோடியாக ஜெயா பச்சன், ஹேமமாலினி நடித்திருந்தனர்.

இனிமையான பாடல்கள்:

இதில் வில்லனாக நடித்த அம்ஜத்கான், மிகவும் பிரபலமானார். அதிரடி சண்டை காட்சிகளும், இனிமையான பாடல்களும் நிறைந்த இந்த படம், வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலும் பெரும் வெற்றி பெற்று, வசூலை வாரி குவித்தது. அண்டை நாடான பாகிஸ்தானில், இந்தி திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், 'ஷோலே' படம், இங்குள்ள தியேட்டர்களில் இதுவரை வெளியாகவில்லை. திருட்டு வீடியோவில் தான், இந்த படம் அங்கு பார்க்கப்பட்டது. இந்நிலையில், 'பாகிஸ்தானில் உள்ள மாண்ட்விவெல்லா' என்ற திரைப்பட வினியோக நிறுவனம், முதல் முறையாக இந்த படத்தை, அடுத்த மாதம், 23ல், அங்குள்ள தியேட்டர்களில் வெளியிட உள்ளது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நதீம் கூறியதாவது:

வித்தியாசமான அனுபவம்:

'ஷோலே' படம், இந்தியாவில் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை, தியேட்டர்களில் பார்ப்பது, புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை தரும். பாகிஸ்தான் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த அனுபவத்தை ஏற்படுத்துவதற்காகவே, இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024