‘ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி’
தன்னுடைய மகனின் எல்லாக் குற்றங்களையும் மன்னிக்கும் அவனை ஈன்ற தாயே, அவன் மது போதையில் இருப்பதை மன்னிக்க மாட்டாள் என்பதே மேற்சொன்ன குறள் விளக்கும் செய்தி.
ஒரு காலத்தில் மாணவர்களைப் பார்த்து, "நீ நாட்டுக்கு நல்ல குடிமகனாக வரவேண்டும்!" என்று பாராட்டிய ஆசிரியப் பெருமக்கள், தற்போது ஓய்வு பெறும் முன்னரே அவர்களின் சில மாணவர்கள், பள்ளியிலேயே நல்ல ‘குடி’மகன்களாக உருவாகி இருப்பதைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்கின்றனர்.
தலைமுறை மாற்றம் இதுதானோ?
ஒரு காலத்தில் குடித்துவிட்டு வந்த அப்பா, அம்மாவை அடித்து துவைப்பார்..பிள்ளைகள் அதனைக் கண்டு வெம்பி தன் அப்பாவைப்போல் தானும் இருக்கக் கூடாது என்று சபதம் எடுத்து முடிந்தவரை மதுவின் பக்கம் சாயாமல் இருப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது போலும்.நிலைமை அப்படியே ‘உல்டா’ ஆகிவிட்டது. அப்பனுக்கு ஈகுவலாக உட்கார்ந்து மது அருந்துகிறான் மகன். நமக்கென்ன மரியாதை இருக்கிறது எனப் புலம்பி, மதுவை துறந்த அப்பாக்களை சமீப காலங்களில் காண முடிகிறது.
இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்?
புத்தாண்டு தினத்துக்கு மறுநாளோ, தீபாவளி, பொங்கலுக்கு மறுநாளோ பத்திரிகைகளில் காணக்கிடைக்கும் முக்கியச் செய்தி... 'மது விற்பனை ஜோர்"!, “100 கோடிக்கு மது விற்பனை".ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல, ஆங்காங்கே குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்தாகி பரலோகத்துக்கு பார்சல் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள், நிமிடத்துக்கு நிமிடம், மது அருந்திய ஒருவனால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைப்பற்றிய கவலையைக் காணோம். புள்ளி விவரம் முக்கியம் அமைச்சரே என்று அட்டென்டன்ஸ் போடுபவர்களைப் பற்றி என்னத்த சொல்ல?
400 பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுபா...
ஊர் திருவிழாவுக்கு வருடம் தவறாமல் அழைக்கும் நண்பன், இந்த வருடம் போன் செய்து, 'மச்சி...பீர் திருவிழாவுக்குப் போலாமா?' என்கிறான். வரமுடியாது என்று சொன்னதும், பீர் குடிப்பதன் நன்மை - தீமைகளைப் பட்டியலிட்டு, நன்மைகளை மட்டும் ஹைலைட் செய்கிறான். இந்த அளவு ஆர்வத்தை அவன் படிப்பில் காட்டி இருந்தால், ஒருவேளை பத்தாங் கிளாஸில் பாஸாகி இருப்பானோ என்னவோ? பாவம்... டாஸ்மாக் அவன் வாழ்வில் விளையாடிவிட்டது.
காதல் vs டாஸ்மாக்
'வசந்த மாளிகை' சிவாஜி முதல் 'ஓகே ஓகே' சந்தானம் வரை காதல் தோல்விக்கு ஒரே பைபாஸ்‘குடி’தான். அட அப்ரசென்ட்டிகளா... காதல்ல தோக்க நீங்க என்ன உலகத்தோட கடைசி பொண்ணையா காதலிச்சீங்க? உங்களுக்கு குடிக்க ஒரு காரணம் வேணும். அதுவும் மனச கசக்கி பீல் விடற மாதிரி ஒரு காரணம் இருந்துட்டா போதும்... உட்றா தம்பி வண்டியனு சொல்லி டாஸ்மாக் வாசல்ல தேவுடு காக்குறிங்க. வன்முறைய வன்முறையால ஜெயிக்க முயற்சிக்கக் கூடாது பாஸு... அஹிம்சைய கடைப்பிடிங்க..அடுத்த பொண்ணப பாருங்க.ரைட்டா!
இது அட்வைஸ் இல்லிங்கோ... ஆதங்கம் ஒன்லி!
இந்தியாவுல வாழ்றதுக்கும் குடியுரிமை இருக்கு... குடிக்கவும் ‘குடி’யுரிமை இருக்கு.யாருக்கும் இதைச் செய் என்று சொல்ல முடியாது. இரண்டு வாரத்துக்கு முன்பு கரூரில் குடித்துவிட்டு பள்ளி சீருடை அணிந்துகொண்டு சாக்கடையில் விழுந்து கிடந்த மாணவர்களைப் பார்த்து பதறி எழுதிய கட்டுரை இது. இதைப் படிக்கும் சகோதரர் யாராக இருப்பினும், அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மதுவை விலக்குங்கள்... அல்லது,குறைந்தபட்சம் உங்கள் மது அடையாளத்தையாவது மற்றவர்க்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்யுங்கள்.
மதுவைப் பற்றி பெருமை பேசுதலை விட்டொழியுங்கள். உங்கள் சகோதரனுக்கோ, பிள்ளைக்கோ தவறான முன்னுதாரணமாகி விடாதீர்கள். ஏனென்றால், “முன் ஏர் நன்றாக சென்றால்தான் பின் ஏரும் சரியாய் செல்லும்” என்பது பழமொழி. எனவே எஞ்சி இருக்கும் கொஞ்சநஞ்ச பேரையாவது நஞ்சுக்கு அடிமையாகாமல் காப்போம் என சூளுரைப்போம்.
- மஹபூப்ஜான் ஹுசைன் (காரிமங்கலம்).
No comments:
Post a Comment