Friday, January 13, 2017

50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்... தமிழக அரசியலை மாற்றி அமைத்த 'அந்த சம்பவம்' !

ந்த சம்பவம் நடந்து 50 வருடமாகி விட்டது. ஆனால் இன்றளவும் அதை எளிமையாக கடந்து விட முடியாது. அந்தளவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் அது.

திரைப்படங்களில் கதாநாயகனாக வருபவர்தான் வில்லனைச் சுடுவார். ஆனால் வில்லன் நடிகராக திகழ்ந்தவர் கதாநாயகனை சுட்ட சம்பவம் தான் அது. அதுவும் நிஜத்தில். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும், ஏழைகளின் தோழனாகவும், நல்லதை மட்டுமே செய்பவராகவும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு பாமர மக்களின் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த தி.மு.க.வின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
மக்கள் மனங்களிலும் அரசியல் அரங்கிலும் அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்ந்த எம்.ஜி.ஆரை ஒரு தோட்டாவின் மூலம் சாய்த்த சம்பவம்தான் அது. எம்.ஜி.ஆரை சுட்டவர் எம்.ஆர்.ராதா. "எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். கத்தி இருந்தா கத்திச்சண்டை போட்டிருப்போ, துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்' என சாதாரணமாக பதிலளித்தார்

1967-ம் ஆண்டு நடக்க இருந்த பொது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நடந்தது அந்த அதிர்ச்சி சம்பவம். எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் திரை உலகில் கொடி கட்டி பறந்த காலம் அது. 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற படத்துக்காக பட அதிபர் வாசு நடிகர் எம்.ஆர்.ராதாவிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றிருந்தார். படம் வெளியான பின் அந்த பணத்தை திருப்பி கொடுப்பது எனவும், அதற்கு எம்.ஜி.ஆர் பொறுப்பேற்று இருந்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக பேச ஜனவரி 12-ம் தேதி ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எம்.ஆர்.ராதா சென்றிருந்தார். உடன் பட அதிபர் வாசுவும் சென்றிருந்தார். இருவரும் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசி கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. அந்த நேரத்தில் ராதா தன் மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார்.

 இதனை சற்றும் எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர் சமயோசிதமாக குனிய துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா எம்.ஜி.ஆரின் இடது பக்க காதின் அருகாமையில் கண்ணத்தில் பாய்ந்தது. இதனை தொடர்ந்து எம்.ஆர்.ராதா துப்பாக்கியை தன் தலையில் வைத்து இயக்க அதிலிருந்து வெளியான தோட்டா ராதாவின் நெற்றியில் பாய்ந்தது.

துப்பாக்கியால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராதாவும் அங்கே அனுமதிக்கப்பட்டார். ராதாவின் நெற்றியில் பாய்ந்த தோட்டா அகற்றப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரி கண்ணத்தில் பாய்ந்த தோட்டா அவரது கழுத்தில் 3 முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதனை அகற்றினால் எம்.ஜி.ஆரின் உயிருக்கே ஆபத்து ஏற்படாலாம் என மருத்துவர்கள் கருதினர். இதனால் தோட்டாவை அகற்றாமலேயே தையல் போடப்பட்டது.
இந்த நிலையில் நடக்க இருந்த தேர்தலில் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியாத நிலையில் அவர் மருத்துவமனையில் கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது.

தேர்தல் பிரசாரத்துக்கு தொகுதிக்குச் செல்லாமலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணமடைந்த நிலையில் ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. எம்.ஜி.ஆரின் சாட்சியத்தை கேட்டறிந்த சைதாப்பேட்டை நீதிமன்றம் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் துப்பாக்கி தோட்டாவிடம் இருந்து உயிர் தப்பியது மட்டுமல்ல தேர்தலில் படுத்து கொண்டே ஜெயிக்கவும் செய்தார்.

அதனால் தான் காலத்தை வென்றவன் எனவும், காவியமானவன் எனவும் அழைக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
- இரா.மோகன்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024