Friday, January 13, 2017

இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்காதவர் டி.எம்.எஸ்!




'கௌரவம்' படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து "சுந்தரா கொஞ்சம் டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்..."
எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் "என்னண்ணே ஏதாவது பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...?
என்றார் பதறியபடி

. "இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்.அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்.இன்னொரு பரிமாணம்.என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்" என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.

உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.!

கவுரவம் படத்தில் இடம்பெற்ற " நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா..." என்ற அந்த பாடலில் சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 30-ம் தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே.

தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். "டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ" என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது. புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச் சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடிக் காண்பித்தான் சிறுவன். "சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு" என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.

சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடினார். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது.

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.

பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.

மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.

"டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.
ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார்.
அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து "முத்தைத் திருபத்தித் திருநகை" எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், "அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா" என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.

"வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்" என புகழ்ந்தார்.
" லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும் டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்" என இன்னும் ஒரு படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம்.

உண்மைதான், இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான் இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும் பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும் பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது.

தமிழை அட்சர சுத்தமாக அழகாக உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல்.

2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "செம்மொழியான தமிழ்மொழியாம்" என பாடியதுதான் இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன் இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ் தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும்.
- எஸ்.கிருபாகரன்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024