Saturday, January 7, 2017

காதற்ற ஊசியும் வாராது.

அணைக்கட்டுகளையும் கோபுரங்களையும் பிரமிடுகளையும் எழுப்பிய மாமனிதர்கள் இன்றைக்கு இல்லை. பிரமிடுகளை எழுப்பியவர்கள் அதற்குள்ளே அடக்கமாகிப் போனார்கள். பிரமிடுகள்தாம் இன்றைக்கும் இருக்கின்றன. இதனால் தெரிய வருவது, மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதே ஆகும். அதனால், கொடுக்கப்பட்ட வாழ்நாளை, அர்த்தமுள்ளதாக ஆக்குவதே மானுடத்தின் மாண்பாகும்.
பணத்திற்குப் பதிலாகப் பண்டமாற்றுமுறை நடப்பில் இருந்த காலத்து விற்பவனும் சிறப்பாக வாழ்ந்தான், வாங்குபவனும் சீராக வாழ்ந்தான். கருவேப்பிலை கொத்தமல்லிக்கு, அரிசியைக் கொடுத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். பழைய இரும்பைப் போட்டுவிட்டுப் பேரீச்சம் பழம் வாங்கியவர்கள்தாம் நாம்.
சங்க காலத்தில் ஒரு தந்தை விற்கக்கொடுத்த மீனைக் கள்ளுக்கடைக்காரனிடத்து பண்டமாற்றுச் செய்யாமல், முத்து வியாபாரியிடம் கொடுத்து முத்தை வாங்கி வருகிறாள், நெய்தல் நிலப்பெண். பண்டமாற்று முறையில் தனிமனிதனும் நாணயமாக இருந்தான் சமுதாயமும் நேர்மையோடு இருந்தது. ஆனால், பாழும் பணம் வந்தபிறகு ஒட்டுமொத்த சமுதாயமே குப்புறப்படுத்துக் கிடக்கிறது.
ஊர்களை அறிவதற்கும், பயணிக்கும் தொலைவை அறிவதற்கும் பயன்படும் கருவிகள் கையகத்தே இருந்தாலும், பத்து கிலோ மீட்டருக்கு ஒரு எல்லைக்கல்லையும், தகவல் பலகையையும் நட்டு வைத்திருக்கிறார்கள், நெடுஞ்சாலைத் துறையினர் அதுபோல வாழ்க்கைப் பயணத்திலும் தடுமாறிப் போகாமல் இருப்பதற்கு நம்முடைய அருளாளர்களும் ஞானிகளும் எச்சரிக்கைப் பலகைகளை அச்சடித்து வைத்திருக்கிறார்கள்.
மனித வாழ்க்கையை எளிமையாக்குவதற்காக வந்த பணத்தைத் தேடுவதிலேயே, பலர் வாழ்க்கையைத் தொலைத்து விட்டார்கள். மூன்று தலைமுறைகளுக்குப் பயன்பட வேண்டுமென்று ஊரை அடித்து உலையிலே போட்டவர்கள் இன்று, மானம் - மரியாதையை இழந்து திகம்பர சாமியார்களாகத் திரிவதைப் பார்க்கிறோம்.
தரைதளத்திலிருந்து மேல்மாடிக்குச் செல்வதற்கு மாடிப்படிகளைக் கட்டுகிறோம். நடப்பதற்கும் கடப்பதற்கும்தான் மாடிப்படிகளே தவிர, அவற்றில் படுத்து உறங்குவதற்கும், வாழ்வதற்கும் அல்ல. அதுபோல பணமும் ஒரு பண்டமாற்றுக் கருவியே தவிர, வாழ்க்கையை அதற்குள் புதைப்பதற்காக அன்று.
பணத்தாசையால் பாழ்பட்டுப் போகின்றவர்களை முதன் முதலில் எச்சரித்தவர், திருவள்ளுவப் பெருந்தகையே. "வஞ்சனையான வழியில் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், சுடாத பச்சை மண்கலத்துள் நீரைவிட்டுக் காப்பாற்றுவது போன்றதாகும்' (குறள் 669) என்றார்.
மேலும், "அருளொடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தைப் பெற்று மகிழாமல், அதைத் தீமை என்று நீக்கிவிட வேண்டும்' (குறள் 755) எனவும் கடிந்துரைத்தார். இவற்றை எல்லாம் பின்பற்றாத காரணத்தால், இன்றைக்கு மத்திய அரசாங்கத்தின் கஜானாவுக்கு ரூ.67,382 கோடி கணக்கில் இல்லாத பணம் வந்து சேர்ந்திருக்கிறது.
சோமநாதபுரம் ஆலயத்தின்மீது 17 முறை படையெடுத்துக் கொள்ளையடித்துக் கொண்டு வந்த நவரத்தினங்களை எல்லாம் அரண்மனையில் குவிக்கச் செய்து, அதற்கு நடுவில் படுத்துக்கொண்டே, அதனைப் பார்த்துக்கொண்டே செத்தான், கஜினி முகம்மது.
அபரிமிதமான செல்வம் அழிவுக்கே அழைத்துச் செல்லும் என்பதை நம்மாழ்வார், "கொள்க என்று கூறிக்கொண்டே வரும் செல்வம், பின்னர் அவனை நெருப்புச் சூழ்ந்தது போல் சூழ்ந்து அழிக்கிறது. பேராசையால் அச்செல்வத்தை ஏற்றுப் பின் அழிகின்ற இவ்வுலகத்தின் இயற்கைதான் என்னே' (பாசுரம் 3322) எனத் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.
நம்மாழ்வாரைப் போலவே வில்லிபுத்தூராழ்வாரும் அளப்பரிய செல்வம் எவ்வாறு கெடுக்கும் என்பதை, "மிதமிஞ்சிய செல்வம் சிலரிடத்து வந்துவிட்டால், தெய்வமும் சிறிது பேணார் தாம் சொல்லும் சொற்களை ஆராய்ந்து சொல்லமாட்டார்கள், உறவினர் என்றும், நண்பர்கள் என்றும் இரக்கம் காட்டமாட்டார்கள் எப்படியும் வென்றுவிடலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள் விதி வலிது என்பதையும் எண்ணார்' எனும் விதுர நீதியால் உணர்த்துகின்றார்.
வள்ளற்பெருமானிடம் பொருளாசைப் பிடித்த உன்மத்தர்கள், இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்தைச் செய்யும்படி வற்புறத்துகின்றனர். அதற்குப் பெருமானார் "யான் படைத்த பணத்தை எல்லாம் கிணற்றிலே எறிந்தேன், ஆற்றினில் எறிந்தேன், குளத்தினில் எறிந்தேன். அன்பர்கள் வற்புறுத்திப் பொருளை என்பால் திணித்த போதெல்லாம், அவற்றைக் கொண்டுபோய் கொல்லைப்புறத்தே கொட்டினேன்.
பொருள் பெருகினால், மனம் அறியாமை இருளில் அழுந்தும். அதனால் என்னை வற்புறுத்தாதீர்கள்' என அவர்களைக் கண்டித்து அனுப்பினார்.
கூரத்தாழ்வாரும் சுவாமி வேதாந்த தேசிகரும் நாள்தோறும் காலையில் பிட்சைக்குப் (உஞ்சவிருத்தி) போவது வழக்கம். அப்போது தெருவிலுள்ளோர் வந்திருப்பவர்கள் மகான்கள் என்பதால், வெள்ளிக் காசுகளையும், தங்கக் காசுகளையும் அரிசியோடு கலந்தே கொண்டு வந்து போடுவார்களாம்.
ஆனால், இவ்விரண்டு அருளாளர்களும் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே வாசலில் தங்க, வெள்ளிக் காசுகளைக் கொட்டிவிட்டு, வெறும் அரிசியை மட்டும் உள்ளே கொண்டு போவார்களாம். நம்மாழ்வார் செல்வத்தைக் குப்பையாகக் கருதினார் என்பதை, "கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன செல்வத்தை' எனும் பாடலால் விளக்குவார்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித் எனும் ஆங்கிலக் கவிஞர் குவிந்து கிடக்கும் செல்வம் தனிமனிதனை மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிக்கும் என்பதை "டெசர்டட் வில்லேஜ்' எனும் நெடும்பாட்டின் மூலம் வரைந்து காட்டுகிறார்.
ஒரு கிராமத்தை ஓர் ஆசிரியர் செம்மைப்படுத்தி, மக்களை நல்வழியில் நடத்தி வருகிறார். ஆனால், அந்தக் கிராமத்தில் திடீரென முளைத்த சில பணக்காரர்கள், விவசாயிகளின் நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிடுகின்றனர்.
அதனால், வாழ்க்கையை வெறுத்த விவசாயிகள், காலம் காலமாக வாழ்ந்த அம்மண்ணை வெறுத்து நகரத்திற்குக் குடியேறுகின்றனர். அக்கவிதையை முடிக்கும்போது கோல்ட்ஸ்மித் Where the wealth accumulates, there men decay   (அபரிமிதமான செல்வம் எங்கே கொழிக்கின்றதோ, அங்கு மனிதனும் மானுடமும் அழியும்) என முடிப்பார்.
"தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப் போனால், எட்டடிதான் சொந்தம்' என எல்லாருக்குமாகப் பாடி வைத்திருக்கிறார் பட்டுக்கோட்டையார்.
பிகார் பூகம்பத்திற்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகக் காந்தியடிகள், முஜாபர்பூர் மகாராஜா மகேஷ் பிரவித் சிங்கின் அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு வெள்ளாட்டுப் பாலையும், வேர்க்கடலையையும் மகாராணி பரிமாறுகிறார். மகாராணி தங்க வளையல்களோடும், வைர மாலைகளோடும் நின்றார்.
அதனைக் கண்ட காந்தியடிகள், பாலைக் கையில் வைத்துக்கொண்டே, "மகாராணியே இந்தத் தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை. தங்கமும் வைரமும் இல்லாமலே நீ அழகாய் இருக்கிறாய். அவற்றையெல்லாம் என்னிடம் கழற்றிக்கொடுத்துவிடு அவற்றைப் பேரிடரில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்' என்கிறார்.
மகாராணியும் தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டு, "தாங்கள் எங்கள் மாளிகையில் விருந்தினராகத் தங்கியதே நாங்கள் செய்த பெரும் பாக்கியம். நகைகளைத் தங்களிடம் கொடுத்த பிறகு நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன்' என்றார்.
முறையற்ற செல்வம் நாட்டையும், வீட்டையும் கெடுக்கும் என்பதைப் பல அருளாளர்களும் ஞானியரும் எடுத்துரைத்திருக்கின்றனர் என்பதன்றி, திருவிடைமருதூர் ஆண்டவனே காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு குமாராக அவதரித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அவ்வூரில் திருவெண்காடர் குடும்பம், செல்வம் படைத்த குடும்பம். அக்குடும்பத்தில் ஒரு குழந்தையாக திருவிடைமருதூர் மகாலிங்கம், மருதவாணன் எனும் பெயரில் அவதரிக்கின்றார். சிறு வயது பையனாகிய மருதவாணரை, "திரைகடலோடி திரவியம் தேட' குடும்பத்தார் அனுப்பி வைக்கின்றனர்.
தேடிய செல்வம் அனைத்தையும் திருக்கோயில் பணிகளுக்குச் செலவிட்டுவிட்டார் மருதவாணன். அவர் கப்பலில் ஊருக்கு திரும்பியபொழுது எரு முட்டைகளாக இருக்கின்றன. அதோடு ஒரே ஒரு பெட்டியில் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' எனும் துண்டுச்சீட்டும் இருக்கின்றது. அதைப் படித்த பட்டினத்தார் தம் செல்வம் அனைத்தையும் நாட்டு மக்களுக்கு வாரி வழங்கிவிட்டு, துறவறம் மேற்கொள்கிறார்.
பட்டினத்தார் செல்வம் அனைத்தையும் வாரி வழங்குவதைக் கண்ட பேராசை பிடித்த அவருடைய தமக்கையார் அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டுகிறார். பட்டினத்தாரை வீட்டிற்கு அழைத்து நஞ்சு கலந்த ஆப்பத்தை அவருக்குப் படைக்கிறார். உண்மையை உணர்ந்து கொண்ட அந்த ஞானி, அந்த ஆப்பத்தைப் பிட்டு அக்காள் வீட்டின் கூரையில் மேல் எறிந்தார்.
கூரை பற்றி எரிந்தது. அப்பொழுது பட்டினத்தார், "தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும்' எனப் பாடிப் போனார்.
இன்றும் சில பேருடைய பணத்தாசை வீட்டைச் சுட்டது மட்டுமல்லாமல், அவர்கள் பெற்ற பேற்றினையும் புகழையும் சுட்டுக் கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர்:
தி. இராசகோபாலன்  
பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024