Saturday, January 7, 2017

சாதனை நாயகன்!

By மணிகண்டன்  |   Published on : 06th January 2017 01:31 AM  |
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இந்திய ரயில்வேயில் பயணச் சீட்டு பரிசோதகராக பணிபுரிந்து அந்த வாழ்க்கை தேவையில்லை என உதறிவிட்டு தனது லட்சியமான கிரிக்கெட் நோக்கி பயணப்பட்டார் அந்த இளைஞர்.
இளம் வயதில் கால்பந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வமிக்கவராக இருந்த அந்த இளைஞர் தனது அணியில் கோல் கீப்பராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் வாய்ப்பு வர அன்றிலிருந்து கிரிக்கெட்டை முழுமையாக நேசிக்கத் தொடங்கினார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த அந்த இளைஞர், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
யார் இந்த இளைஞர் என்று ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் 148 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்து ரசிகர்களை மட்டுமல்ல, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதுவரை எந்தவொரு விக்கெட் கீப்பரும் அத்தனை ரன்கள் எடுத்ததில்லை.
அடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது முந்தைய சாதனையை முறியடித்து, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். அதிலிருந்து தொடர்ந்து பல சாதனைகளை புரியத் தொடங்கினார். அந்த இளைஞருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அவருடைய தொடர் சாதனையைக் கண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி அவரைத் தேடி வந்தது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை வெறும் கனவாகவே இருந்து வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, 2011-ஆம் ஆண்டில் மீண்டும் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்து கனவை நனவாக்கினார் அந்த சாதனை இளைஞர்.
20 ஓவர் உலகக் கோப்பையையும் அவர் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதுமட்டுமல்ல, சிறுவயதில் இருந்து தான் மிகவும் நேசித்தவரும், கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான சச்சின் தெண்டுல்கருக்கு அந்த வெற்றியை சமர்ப்பித்தார் அந்த இளைஞர்.
கடைசி ஒரு பந்துக்கு 4 ரன் எடுக்க வேண்டும். கடைசி ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற மிக இக்கட்டான சூழ்நிலைகளில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு பந்தையும் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் சிக்ஸராக மாற்றி அநாயாசமாக அணிக்கு வெற்றியைத் தேடி தந்தவர்; தருபவர்.
வெற்றிக் கோப்பையை வைத்துக் கொண்டு சக அணியினர் கேமராவுக்கு முன்பு நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தனக்கும் அந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒரு ஓரத்தில் நின்றுகொள்ளும் தன்னடக்கம் நிறைந்தவர்.
எண் கணிதத்தில் 7 என்ற எண் ராசி இல்லாதது என்ற கருத்து உண்டு. ஆனால், 7-ஆம் தேதி பிறந்த அந்த இளைஞர் அந்த எண்ணையே தனது டீ ஷர்ட்டில் பதிந்து கொண்டு, அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருந்தவர்களின் எண்ணத்தை மாற்றினார்.
சக அணியினர், எதிர் அணியினர், மைதானத்தில் திரண்டிருக்கும் ரசிகர்கள், தொலைக்காட்சியை கண்சிமிட்டாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் என்று அனைவரும் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்திலும் ஸ்டம்ப்புக்கு பின்னால் நிதானத்துடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார் அந்த இளைஞர்.
இப்படி தன்னகத்தே பல்வேறு நல்ல குணநலன்களைப் பெற்று, மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அந்த இளைஞர் வேறு யாருமில்லை உலகமே அறிந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக 2014-ஆம் ஆண்டு அறிவித்த தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இவரது முடிவைக் கேட்டு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
"உன் தலைமை இல்லா ஆடுகளம் வெறும் ஆடாகளம்'. "கடைசி பந்தில் நீங்கள் சிக்ஸர் அடித்தபோது கண்ணீர் மல்க ஆடிப் பாடிக் கொண்டாடியதை இன்னும் மறக்கல' என்று ரசிகர்களின் குமுறல்களை சமூக வலைதளங்களில் படிக்க முடிகிறது.
தோனி எப்போதும் ஒரு முடிவை ஆழ்ந்து யோசித்த பின்னரே எடுக்கக் கூடியவர்.
அவரது இந்த திடீர் முடிவை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
"அவரது முடிவைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல், தனக்கு தோன்றுவதை தானே தீர்மானிக்கும் தோனியின் முடிவை எப்போதும் வரவேற்பேன்' என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முதலில் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கபில்தேவ் கூறியிருக்கிறார்.
தோனியின் இடத்தை இனி யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அவரின் முடிவை வரவேற்போம். தோனி தொடர்ந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிய வாழ்த்துவோம்.
பதினொன்றில் ஒன்றல்ல தோனி. கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்துக்கொண்டுள்ள அவரை ஒரு சாதனை நாயகன் என்று கூறுவதே சரி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024