Tuesday, January 10, 2017

வேட்டி தினத்தில் வேட்டி கட்டிய பயணிகளுக்கு இலவச சவாரி வழங்கிய ஆட்டோ டிரைவர்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 09th January 2017 04:10 PM
 
சிலவருடங்களுக்கு முன் ஜனவரி 6 ஆம் தேதியை வேட்டி வாரமாக கொண்டாடலாம் என கோ ஆப்டெக்ஸ் முடிவு செய்தது. அதிலிருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேட்டி வாரம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6 ல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மென்பொறியாளர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நாளில் வேட்டி உடுத்தி தங்களது அலுஅவலகம் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று வருவதை ஒரு குதூகலம் மிக்க நிகழ்வாகக் கருதுகிறார்கள். அப்படி கடந்த வெள்ளியன்று வேட்டி தினத்தில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வேட்டி உடுத்திக் கொண்டு பேருந்து நிலையம் வந்தவர்களில் சிலருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன தெரியுமா? சென்னை தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டும் குபேந்திரன் என்பவர் வேட்டி கட்டிக் கொண்டு ஆட்டோவுக்காக காத்திருந்த சிலரை கட்டணம் எதுவுமின்றி இலவசமாக தனது ஷேர் ஆட்டோவில் சவாரி அழைத்துச் சென்றார்.

நாளொன்றூக்கு 500 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டக்கூடிய ஷேர் ஆட்டோ டிரைவர். வேட்டி தினத்தில் இப்படி இலவச சவாரி விட்டால் வருமானம் பாதிக்காதா? என்ற கேள்விக்கு குபேந்திரன் அளித்த பதில்; ‘வருமானம் முக்கியம் தான் ஆனால் அதை விட முக்கியம் மனதிருப்தி! சிறு வயது முதலே எனக்கு ஆரோக்கியமான விசயங்களுக்கான சமூகப் பங்களிப்பில், சமூக  சேவைகள் செய்வதில் ஆர்வம் அதிகம். வேட்டி நமது பாரம்பரிய உடை. மேலும் வேட்டி அணிவது தான் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. அதை வலியுறுத்தி இப்படி ஒரு நாள் கடைபிடிக்கப்படும் போது. அதில் என்னுடைய பங்காகவும் ஏதாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவு தான் ‘வேட்டி கட்டியவர்களுக்கு இலவச ஆட்டோ சவாரி’ இதனால் என்னுடைய ஒருநாள் வருமானம் போனாலும் எனக்கு கவலை இல்லை. சந்தோசம் தான். என்கிறார். வேட்டி தினத்தில் மட்டுமல்ல கடந்த 2015  கடும் வெள்ள அபாய நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் குபேந்திரன் இலவசமாக ஆட்டோ ஓட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல கோடை காலத்தில் தனது ஆட்டோவில் பயணிப்பவர்கள் சங்கடப் படக்கூடாது என ஃபேன் பொருத்தி ஓட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஆக மொத்தத்தில் ‘நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ என வள்ளுவர் சொன்னது இந்த ஆட்டோ டிரைவர் மாதிரியான மனிதர்களை மனதில் வைத்துத் தான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024