Wednesday, September 6, 2017


பித்ருக்களின் ஆசி கிடைக்கும் : மகாளய பட்சம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்05செப்
2017
23:49




முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான, மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. மகாளய பட்சம் என்பது, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம், அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதுகுறித்து, காஞ்சி சங்கரமட ஆஸ்தான வித்வான், சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது:புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இந்த புண்ணிய தினங்களில், பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்தது. 

மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில், தர்ப்பணம் செய்வதும் அவசியம்.மற்ற அமாவாசையில், நம் உறவினர்கள், 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில்தான் அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம், மஹாபரணி என்றும், அஷ்டமி திதி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் அழைக்கப்படுகிறது.

கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற, தெய்வீக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில், நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து, அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகம் வருவதாக நம்பப்படுகிறது.மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. இதில், வரும், 10ம் தேதி மகா பரணி; ௧3ம் தேதி, மத்தியாஷ்டமி; 19ம் தேதி மகாளய அமாவாசையும் தர்ப்பணம் செய்ய விசேஷ நாட்கள். மகாளய பட்சம் துவங்கும் நாள், யசூர்வேதிகளுக்கு ஆவணி அவிட்டம் வருகிறது. எனவே, முதலில் ஆவணி அவிட்டத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024