Tuesday, September 19, 2017

காவிரியில் புனித நீராட அலை மோதும் பக்தர்கள் : 'இன்று மஹாளய அமாவாசை'
பதிவு செய்த நாள்18செப்
2017
23:41



காவிரி மகா புஷ்கரம் விழா, 12 குருப்பெயர்ச்சியை கடந்து, 144 ஆண்டுகளுக்கு பின் கொண்டாடப்படுகிறது. குரு பகவான், கன்னி ராசியிலிருந்து, காவிரி நதிக்கு உரிய, துலாம் ராசிக்கு மாறும்,
குரு பெயர்ச்சி காலத்தில் இவ்விழா கொண்டாடப்படும். இந்த கால கட்டத்தில் காவிரியில் நீராடுவதால், பல தோஷங்கள் நீங்கி, பஞ்சம் அகன்று, உலகம் சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை.

புஷ்கரம் என்றால் ஜலதேவதை : குரு கிரகம், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் நுழையும் போது, சில குறிப்பிட்ட நதிகள், அனைத்து தேவதைகளின் சக்தியை பெற்று கொள்ளும். இதுவே 'புஷ்கரம்' எனப்படுகிறது. புஷ்கரம் என்றால் 'ஜல தேவதை' என்று அர்த்தமாகும்.

ஸ்ரீ ரங்கபட்டணாவில் அலை மோதும் பக்தர்கள் : மைசூரு மாவட்டம், ஸ்ரீ ரங்கபட்டணாவில், நடந்து வரும் புஷ்கரத்தில், காவிரி நதியில் புனித நீராட, பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கப்பட்டணாவில், காவிரி புஷ்கரம் நடந்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்தும், கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீரங்கப்பட்டணா வருகை தந்து, காவிரி நதியில் புனித நீராடி மகிழ்கின்றனர். பக்தர்கள், நதிக்கரையில் அமர்ந்து தியானம், யாகம், மந்திரம் பாராயணம் செய்வது, மூதாதையர்களுக்கு தர்ப்பணம், கோதானம் என பல வித வழிபாடுகளை செய்கின்றனர். காவிரி புஷ்கரணிக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஸ்ரீ ரங்கபட்டணாவின் ராஜ வீதி, காவிரி ஆற்றுக்கு செல்லும் ரோடுகளில், வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்தை நிர்வகிக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர். காவிரியில் நீராடும் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீரங்கநாதசுவாமியை தரிசித்தனர். நேற்றும் கூட, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காவிரியை வரவேற்கும் முதல் புண்ணிய ஸ்தலம் : ஹாசன் மாவட்டம், ஹரகலகூடு தாலுகா, ராமநாதபுரத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீராமேஸ்வரர் கோவில் உள்ளது. கிருத யுகத்தில், அக்னி தேவன், இங்குள்ள வகினி புஷ்கரணியில், நீராடி, சிவலிங்கத்தை பூஜித்தார். அதே போன்று, புராணத்தில், வாசவபுரி என்று அழைக்கப்பட்ட, ராமநாதபுரத்தின் ஸ்ரீராமேஸ்வர் கோவில் அருகில் பாய்ந்து ஓடும் காவிரியின் வகினி புஷ்கரணியில் புனித நீராடிய ராமர், தானாக உருவாகியிருந்த சிவலிங்கத்தை அர்ச்சித்ததால், இந்த ஸ்தலத்துக்கு ராமநாதபுரம் என்று பெயர் வந்தது. இப்படியாக, வாசவபுரி, ராமநாதபுரமாக மாறியதாக ஐதீகம்.
குடகு தலைக்காவிரியின் பிரம்மகிரியில் பிறந்து, பாயும் காவிரி நதியை வரவேற்கும் ராமநாதபுரம், முதல் புண்ணிய ஸ்தலமாகும். இந்த கோவில் அருகில் பாய்ந்து ஓடும் காவிரி நதிக்கரையில், இம்மாதம் 12 ம் தேதி துவங்கிய மகா புஷ்கரம், இம்மாதம் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது.

காவிரி ஆரத்தி : வாரணாசியில் கங்காரதி செய்வது போன்று, ராமநாத புரத்தில், முதன் முறையாக, ஒவ்வொரு நாள் இரவும், காவிரி ஆரத்தி பூஜைகள் நடக்கிறது. இந்த பூஜைகள், பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

தானம், தர்ப்பணம் : காவிரி ஆற்றில் புஷ்கரம் நடக்கும் போது, மேற்கொள்ளும் பூஜைகள், யாகம், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வது, கோ தானம் போன்றவைகளை செய்தால், பெரும் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எந்த ராசிக்கு எந்த நதியில் புஷ்கரம் :
'குரு கிரகம்' மேஷம் -'கங்கை'
ரிஷபம் - 'நர்மதா'
மிதுனம் - 'சரஸ்வதி'
கடகம் - 'யமுனா'
சிம்மம் - 'கோதாவரி'
கன்னி - 'கிருஷ்ணா'
துலாம் - 'காவிரி'
விருச்சிகம் - 'பீமா'
தனுசு - 'தபசி'
மகரம் - 'துங்கபத்ரா'
கும்பம் - 'சிந்து'
மீனம் - 'மகாநதி'
12 ராசிகளில், குருபகவான் நுழையும் நாளிலிருந்து 12 நாட்கள், புண்ணியகாலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில், மகரிஷிகள், தேவதைகள், சப்தரிஷிகள், நதிகளில் நீராடுவர் என்ற ஐதீகம் உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024