Wednesday, September 27, 2017

ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்



ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவர் குணமடைய வேண்டி 20 மாணவர்களுக்கு அலகு குத்திய சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

செப்டம்பர் 27, 2017, 05:30 AM
புதுடெல்லி

நோட்டீஸ்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவர் குணமடைய வேண்டி சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் 20 மாணவர்களை கட்டாயப்படுத்தி அலகு குத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

வன்முறை செயல்

கடந்த ஆண்டு (2016) அக்டோபர் மாதம் 3-ந் தேதி ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, சென்னை ஆர்.கே.நகரில் 20 மாணவர்களை கட்டாயப்படுத்தி, 2 மீட்டர் நீள அலகுகளை அவர்களது கன்னங்களில் குத்தி வேண்டுதல் செய்யும் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை.

எங்களுக்கு கிடைத்துள்ள புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 7-ந் தேதி தமிழக அதிகாரிகளிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

போலீஸ் கமிஷனர் பதில்

இதற்கு பதில் அளித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மாணவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துக்கு பிறகே பிரார்த்தனையில் பங்கேற்றனர். சம்பவத்தின்போது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்து இருந்தார்.

பெற்றோர் சம்மதத்தின் பேரிலேயே இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது என்று கூறினாலும் மாணவர்களின் கன்னங்களில் இரண்டு மீட்டர் நீள இரும்பு அலகுகளை குத்தும் இந்த குற்றச்செயல் எந்த அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகிறது என்பது புரியவில்லை. இதனை வேடிக்கை பார்த்த போலீசாருக்கு வெறுமனே எச்சரிக்கை விடுத்தது மிகவும் குறைந்த அளவிலான நடவடிக்கையாகும்.

வழக்குப்பதிவு

எனவே, இதுகுறித்து அலகுகளை குத்தியவர்கள் மீது வடசென்னை போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதுதவிர, தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரும் இதுபோன்ற சடங்குகளை தடுத்து நிறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024