ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’: அன்பு வாசக நெஞ்சங்களே...
உங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நேசம் மிகுந்த வாசகர்களாகிய உங்களது ஊக்கமும் பங்களிப்பும்தான், நம் நாளிதழின் தனித்துவமான வெற்றிப் பயணத்துக்கு முக்கியமான காரணம். தொடங்கிய நாள் முதல் இன்று வரை, எழுத்துரு தொடங்கி எழுதும் உள்ளடக்கம் வரையில் அனைத்திலுமே உங்களின் அக்கறையான கருத்துகள் எதிரொலிக்கின்றன. அதுவே, தேவைக்கேற்ற மாற்றங்களுக்கு வித்திட்டு, கூடிச் செல்லும் பொலிவுக்கும் கிரியா ஊக்கியாக அமைந்துள்ளது.
தமிழால் இணைவோம் எனும் முழக்கத்துடன் தன் பயணத்தைத் தொடங்கிய நம்முடைய நாளிதழ் தமிழ் - தமிழர் முன்னேற்றப் பணியில் வரும் ஆண்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தலைநகர் சென்னையில் தொடங்கியிருக்கும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியும் தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றிவரும் பல்துறை வல்லுநர்களைக் கவுரவிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘தமிழ் திரு’ விருதுகளும் அதன் தொடக்கம்தான். ‘தி இந்து’ மொழிசார் பணிகளில் தன்னை மேலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம்முடைய வாசகர்களின் தொடர் வலியுறுத்தலின் வெளிப்பாடே இதுவும்!
139 வருஷங்களுக்கு முன் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகை தொடங்கப்பட்டபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஒவ்வொரு பிறந்த நாளிலும் நாங்கள் நினைவுகூர்கிறோம், “பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல; சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளை செழுமைப்படுத்தி, உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையை பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்”
அதனடிப்படையில்தான், அன்றாடச் செய்திகளை அளிப்பதே நாளிதழ்களின் பணி என்றிருந்த நிலையை இன்று நாம் தமிழிலும் வெற்றிகரமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் செய்திகளை அளிக்கும் அதே நேரம், நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் மதச் சார்பின்மை, சாதிய எதிர்ப்பு, மாநிலங்கள் உரிமை, பாலின சமத்துவம், சமதர்மம் உள்ளிட்ட உயர் விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதோடு மது ஒழிப்பு, நீர்நிலைகள் மேம்பாடு, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், அரசு நிறுவனங்கள் - பள்ளிகள் மேம்பாட்டுக்குத் துணை நிற்பது என்று சமூகத்தின் அடிப்படை வளர்ச்சி தொடர்புடைய ஒவ்வொரு விஷயங்களிலும் ஆழப் பயணிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு தமிழ்ச் சமூகத்தின் அறிவுக்கும் சிந்தனைக்கும் புதிய வாயில்களைத் திறந்து காட்டி வருகிறோம்.
நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள். அதற்கு உங்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பின் அடையாளம்தான், நான்கு ஆண்டுகளுக்குள் ’தி இந்து’ தமிழ் உங்கள் இதய சிம்மாசனத்தில் எட்டிப் பிடித்திருக்கும் இந்த உயரம்!
பெருமையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்பெருகிவரும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். உங்கள் நல்லாதரவோடு என்றும் தொடரும் இந்த அற்புதமான பந்தமும் பயணமும்!
- கே.அசோகன்,ஆசிரியர்
No comments:
Post a Comment