அரசு குழந்தைகள் நலமருத்துவமனை முடங்கியது ! திடீர் மின் தடையால் விபரீதம்!
திடீர் மின்வெட்டு காரணமாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நேற்று மாலைமுதல் இரவுவரையில் பல மணி நேரத்துக்கு முடங்கியது. அரசு மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்திருந்த தாய்மார்கள், இந்த திடீர் மின்வெட்டால் பதறினர். சுகாதாரத்துறை மந்திரியான டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில், 'தற்காலிக கருத்தடை ஊசி' அறிமுக விழாவும் நேற்றுதான் இங்கு நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. மருத்துவமனையின் ஐந்தாம் தளத்தில் மந்திரி பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்த அதே இடத்தில்தான் தாய்-சேய் நலம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவும் இயங்கி வருகிறது. இதே ஐந்தாம் தளத்தில்தான் மின் தடையும் ஏற்பட்டது.இந்த திடீர் மின் தடை காரணமாக இன்குபேட்டரில் வைக்கப் பட்டிருந்த குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் நிலைகொள்ளாமல் தவித்தனர். இன்னொரு பக்கம், சுகாதாரத்துறை மந்திரிபங்கேற்கும் விழாவின் போது இப்படி ஆகி விட்டதே என்று மருத்துவமனை நிர்வாகமும் பதறியது. வேறுவழியில்லாமல் குழந்தைகளுடன் பெற்றோர்கள், மருத்துவமனையை விட்டு காற்றோட்டமான மரத்தடியில் தஞ்சம் புகுந்தனர்.
ஐந்தாம் தளத்தில் நடக்கவிருந்த விழாவும், மின் தடை காரணமாக வேறு தளத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டது. மின்தடையை உடனே சரிசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏதும் உடனுக்குடன் பலனளிக்கவில்லை.விழாவில் பங்கேற்க வந்திருந்த மந்திரி விஜயபாஸ்கர், அங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்ததும், மருத்துமனை அதிகாரிகளைக் கூப்பிட்டு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். மந்திரியை அருகில் பார்த்துவிட்ட,குழந்தைகளின் பெற்றோர்கள், "மருத்துவமனையில் எங்களைப் பாடாய்ப் படுத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் பணம் கேட்டு இங்குள்ள ஊழியர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். டாக்டர்களிடம் இது குறித்து சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... மின்சாரம் திடீரென்று போனதால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். ஜெனரேட்டர் வசதி கூட இல்லை" என்று வரிசையாகப் புகார்களை அடுக்கினர். 'கண்டிப்பாக இதை நான் கவனிக்கிறேன்" என்று உறுதியளித்த மந்திரி விஜயபாஸ்கர், இன்னொரு தளத்தில் ஏற்பாடு செய்திருந்த அதே அரசு விழாவில் பங்கேற்க கிளம்பி விட்டார். ஏழைகளுக்கு அரசு மருத்துவனைதான் நோய்க்காலங்களில் நிரந்தர ஆதரவு என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது... அதை உறுதியாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
No comments:
Post a Comment