Wednesday, September 6, 2017

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க கல்லூரிகளில் புகார் பெட்டி கலெக்டர் உத்தரவு



காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க, பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் புகார் மனு பெட்டி வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

செப்டம்பர் 06, 2017, 04:49 AM
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் பெரும்பாலானோர் ‘ராக்கிங்’ கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
இதை தடுக்க அந்தந்த கல்லூரி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ராக்கிங்’கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், புகார் அளிக்க தயங்குவதால் அந்த மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக கல்லூரிகளில் புகார் மனு பெட்டிகள் வைக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் புகார்களை ‘ஆன்-லைன்’ மூலமும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களையும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் இடையே ‘ராக்கிங்’ கொடுமையால் ஏற்படும் பாதிப்புகள், விபரீத நிகழ்வுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களிடமும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன், சகோதர மனப்பான்மையுடன், அன்புடன் பழக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ‘ராக்கிங்’ நடைபெறாமல் தடுப்பதற்கு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தவறு செய்யும் மாணவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீசாருக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரிகளிடம், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தும் போது போலீஸ் அதிகாரிகளையும் அழைக்க வேண்டும். விடுதிகளிலும், கல்வி நிறுவன பஸ்களிலும் கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மதுராந்தகம் சப்-கலெக்டர் கில்லி சந்திரசேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரமணி, தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முகிலன்(காஞ்சீபுரம்), அண்ணாதுரை(வண்டலூர்) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024