Tuesday, September 19, 2017

முதுமை போற்றுவோம்


By கே.ஜி. இராஜேந்திரபாபு  |   Published on : 19th September 2017 01:23 AM  |   
மற்ற பருவங்களைப் போலவே முதுமைப் பருவமும் மகிழ்ச்சிக்குரிய பருவம்தான் என்பதை ஏனோ பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.
முதுமைப் பருவம் எய்திவிட்டாலே வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு விதிவழியே போகவேண்டியதுதான் என்று விரக்தியாய் பேசிக்கொண்டு, வந்து போகிறவர்களிடமெல்லாம் தன் துயரத்தைப் புலம்பி, கண்ணீரால் முகத்தை அலம்பி, மூலையிலே குந்தத்தான் தனக்குத் தகுதி, கூடத்திலே அமர அருகதையில்லை என்று தனக்குத்தானே கோடிட்டுக் கொண்டு, இனியென்ன வாழ்க்கை இருக்கிறது என்றும் என்னை யார் மதிக்கிறார்கள் என்ற சுயபச்சாதாபத்தோடும் காலம் தள்ளும் பருவம் என்று பலரும் எண்ணுகிறார்கள்.
முதுமை என்பது கலங்கும் பருவமல்ல; கம்பீரமான பருவம்.
முதியவர்கள் தங்கள் மனத்தில் தாழ்வு மனப்பான்மை அனுமதிக்க வேண்டாம். வயதை இழந்துவிட்டோம் அதனால் வாழ்க்கையில் ஒதுக்கப்படுவோமோ என்று வதங்க வேண்டாம்.
முதியவர்கள் இளைஞர்கள் போல் இயல்பாக இருக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். கம்ப்யூட்டரிலோ, லேப்-டாப்பிலோ இணையத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தினமும் புதிய புதிய நூல்கள் படிக்கலாம். இனி படித்து என்ன செய்யப்போகிறோம் என்ற விரக்தி மனப்பான்மை கூடாது. விரக்தி மனப்பான்மை வயதைக் கூட்டிவிடும்.
புதிய புதிய செய்திகளைப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லலாம். அவர்கள் வயதுக்குத் தக்கவாறு கதைகளையோ, தகவல்களையோ சொன்னால் பேரப்பிள்ளைகள் தாத்தாவை விரும்பி தினமும் எதிர்பார்ப்பார்கள்.
தனது வயது நபர்களுடன் நட்பு பாராட்டி ஒரு குழுவாக அமர்ந்து பேசலாம். குடும்பத்தில் உள்ள குறைகளையோ, மனக்குறைகளையோ சொல்லி அதிலேயே ஒரு சுகம் காணுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியான செய்திகளையே பேசலாம். 
ஏதாவது ஒன்றின் சார்பாக வாதிட்டுக் கொண்டு மனதிற்குள்ளேயே எதிர்ப்பலையை ஏற்படுத்திக் கொண்டு நிம்மதியை இழந்து விட வேண்டாம். குழுவாய் அமர்ந்து பேசுவதே மனத்தை மென்மைபடுத்தத்தானே!
வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் மகனோ மருமகளோ கொஞ்சம் கவனக் குறைவாக நடந்தால், உதாரணத்திற்கு, சாப்பிடும்போது கூப்பிட மறந்தால் - தான் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டோம், ஓய்வுபெற்ற உடனேயே ஒதுக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ண வேண்டாம்.
சொந்த வீட்டில் எப்போதும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதியவர்கள், ஒவ்வொன்றுக்கும் மரியாதையை எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஓய்வு பெற்றவுடன் தான் ஓரங்கட்டப்பட்டுவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்கெனவே மனத்தில் ஏற்படுத்திக் கொண்டதால்தான். அந்தக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்க்கும்போது அவர்களுக்கு அப்படித்தான் தெரியும். 
இன்னும் சிலர் தாங்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு தங்களை மதிக்கவில்லை என்று புலம்புவார்கள். ஒரு வாடிக்கையாளருக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை தங்களுக்குக் கொடுத்தால் போதும் என்று நினைத்தால் இந்த மன உளைச்சல் இருக்காது.
முதியவர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று இயன்றவர்கள் (ஓய்வு ஊதியமாகவோ பிற வடிவிலே வருமானம் உள்ளவர்). இன்னொரு வகையினர் இயலாதவர்கள்.
இயலாதவர்கள் வாரிசுகளை நம்பி வாழ்கிறவர்கள்.
இயலாத பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும். கெளரவத்தோடு நடத்த வேண்டும். சோறுபோட்டு துணி எடுத்துக் கொடுத்தால் மட்டும் போதாது. 
அவர்களின் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பெற்றோருடன் அளவளாவ வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அவர்கள் இயலாமையைச் சுட்டிக்காட்டி வேதனைப்படுத்தக்கூடாது. எந்தச் சூழலிலும் பெற்றோரை அலட்சியப்படுத்தக்கூடாது. 
பெற்றோர் கேள்வி கேட்டால் அதை காதிலே வாங்காத மாதிரி அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை மதித்து பதில் சொல்ல வேண்டும்.
குடும்பத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளை தங்களைக் கலந்தாலோசிக்கிறான் என்பதே பெற்றோர்க்குப் பூரிப்புத் தரும். 
வீட்டில் தாங்கள் உரிமையுள்ளவர்கள் என்ற உணர்வைப் பெற்றோர்களுக்கு ஊட்ட வேண்டும்.
குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி முதலிய பெரியவர்கள் என்ற அடுக்குள்ள குடும்பம் அழகாக இருக்கும். பிள்ளைகளைப் பெற்றோர் கண்டிப்பர். தாத்தாவும், பாட்டியும் செல்லம் கொஞ்சுவர். 
பிள்ளைகளுக்கு இரண்டுமே வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா பாட்டியிடம் கொட்டுவர். கூடுதலான சுதந்திரத்தோடு விளையாடுவர்.
பெற்றோர் சுமையென பிள்ளைகள் நினைத்தல் கூடாது. சிறு சிறு குறைகள் முதியவர்களிடம் இருந்தாலும் பொறுக்க வேண்டும். இளம் வயதில் தன்னுடைய குறைகளை பொறுத்தவர்கள்தான் என்பதை நினைவுகூர வேண்டும்.
பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பிள்ளைகளுக்குப் பெருமை மட்டுமல்ல; பாதுகாப்புமாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024