Tuesday, September 5, 2017

வன்சொற்களைத் தவிருங்கள்: 'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்து வைரமுத்து

Published : 04 Sep 2017 16:06 IST

ஸ்கிரீனன்




‘விவேகம்’ படத்தில் அஜித் மற்றும் வைரமுத்து | கோப்புப் படம்

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள் என்று 'விவேகம்' படத்தைப் பார்த்துவிட்டு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும், திரையுலகினர் பலரின் மத்தியில் மாறன் என்பவரது விமர்சனம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.


இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் பணிபுரிந்திருக்கிறார் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. இதனால் வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு தனியாக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது.

'விவேகம்' பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து கூயிறுப்பதாவது:

அஜித் ரசிகர்களின் பாலாபிஷேகத்திற்கும், சில விமர்சனங்களின் குருதியாடலுக்கும் மத்தியில் இருக்கிறது 'விவேகம்'. ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கதையாடலுக்கு முன்னெடுத்துச் சென்ற முதல் முயற்சிக்காக இயக்குநர் சிவாவைப் பாராட்டலாம். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களும் இதில் முயலப்பட்டுள்ளன.

அஜித்தின் உழைப்பு எனக்கு உடம்பு வலியை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு இயக்குநர் வெற்றி – கலை இயக்குநர் மிலன் இருவரின் திறமைகளும் என் கண்களை இமைக்கவிடவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படத்தை இடைவெளியில்லாமல் நிரப்புகிறது. கதை இல்லை என்கிறார்கள். இதில் பாகப்பிரிவினையையும், பாசமலரையுமா சொல்ல முடியும்? இதற்கு இது போதும். ஏதோ ஓர் அந்நியத் தன்மை பட்டாம்பூச்சியின் இறகளவுக்குச் சுவர்கட்டி நிற்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

கபிலன் வைரமுத்துவின் சில வசன வரிகளை என் மகன் என்பதற்காக நான் மறைக்க விரும்பவில்லை. 'நீ சமவெளியில் ஓடுகிறாய்; ஓடத்தான் முடியும்; ஒளிய முடியாது', 'ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதைவிட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்க்கை' போன்ற நல்ல வரிகளைக் காதுகள் மனப்பாடம் செய்துகொள்கின்றன.

பயம் கலந்த வீரம் தொனிக்கும் காஜல் அகர்வாலின் கண்கள், உறங்கிய பின்னும் முகத்துக்கு மேலே சில மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கின்றன. படம் சரியில்லை என்று சொல்கிறார்களே என்ற சலிப்போடுதான் போனேன். குறைகளைவிட நிறைகள் அதிகம் என்று கண்டு திரும்பினேன்.

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள். ஒரு தோல்விப் படம்கூட 20 மாதப் பிரசவம் என்பதை மறந்துவிடாதீர்கள்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024