Wednesday, September 27, 2017

கோரக்பூர் சம்பவம் கற்றுத்தரும் பாடம்!

Published : 26 Sep 2017 10:10 IST

பிரியங்கா சதுர்வேதி, உம்மன் சி. குரியன்




உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டதால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், பிஹாரின் லக்னோவில் ‘அப்செர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தர பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் உரையாற்றினார். உத்தர பிரதேசத்தின் சுகாதார அமைப்பு ‘ஐசியூ’வில் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், நிலைமையைச் சரிசெய்ய முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அந்தச் செய்தி உள்ளூர் ஊடகங்களில் மட்டும்தான் இடம்பெற்றது. உண்மை இதுதான்: உத்தர பிரதேசத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட கடுமையான மூளைக்காய்ச்சல் பாதிப்புகளுக்காகச் (ஏஇஎஸ்) சிகிச்சை பெற்றுவந்த பல குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

வெளிச்சத்துக்கு வந்த விபரீதம்

800 படுக்கைகள் கொண்ட பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, கோரக்பூருக்கும் அண்டை மாவட்டங்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனை ஆகும். 300 கிலோ மீட்டர் சுற்றளவில் சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட ஒரே மருத்துவமனை அதுதான். 2016 செப்டம்பர் 4-ல் மட்டும் அந்த மருத்துவமனையில் 224 குழந்தைகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இது தேசிய அளவில் பெரிய செய்தியாக ஆகவில்லை. அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்தான் முக்கியக் காரணம் என்பது தெரியவராதிருந்தால், தேசிய அளவிலான ஊடகங்களும் கொள்கை நிபுணர்களும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்றைக்கு விவாதித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுதான்.

உத்தர பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் 1978 முதல் 2007 வரைம் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவந்திருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் சிகிச்சைக்கு என்று சிறப்பு வார்டுகளை அமைத்ததுடன், சிறப்பு மருத்துவர்களையும் நியமித்தன. 2010-ல் ஒரு லட்சம் பேரில் 1.9% என்று இருந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பு 2012-ல் 0.5%-ஆகக் குறைந்தது. அதேசமயம், கடுமையான மூளைக்காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் குறையவே இல்லை.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் 2006-லிருந்து தடுப்பூசித் திட்டங்களை மத்திய அரசு நடத்திவருகிறது. 2011-ல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசித் திட்டமானது அனைவருக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தில் (யு.ஐ.பி.) சேர்க்கப்பட்டது. 2013-ல் உள்நாட்டுத் தடுப்பூசிக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில், விலை காரணமாக சீனத் தயாரிப்பு மருந்துகள் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றன. அனைவருக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தின்படி, ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்காக இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், நான்கில் மூன்று குழந்தகளுக்கு மட்டும்தான் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழ் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரியவருகிறது.

என்ன செய்ய வேண்டும்?

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், இந்தப் பாதிப்பு குறித்தும் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்தும் வீடுதோறும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வது மிக அவசியம். கோரக்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கழிவுநீரால் மாசுபட்ட தண்ணீர் மூலம் இந்த வைரஸ் பரவியிருப்பது தெரியவந்திருக்கிறது. துப்புரவுப் பணிகள், கொசு ஒழிப்பு, திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, சுத்தமான குடிநீர் வசதி போன்றவற்றால் இந்த ஆபத்தைத் தவிர்க்க முடியும். மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு உத்தர பிரதேச அரசு அதிகபட்ச நிதி ஒதுக்க வேண்டும். கோரக்பூரில் மருத்துவ வசதிக் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். குறைந்த செலவில் அரசு – தனியார் கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் பலன்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மரணத்தில் ‘ஸ்க்ரப் டைஃபஸ்’ எனப்படும் உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும் ஒருவகை நச்சுக்காய்ச்சலுக்கும் தொடர்பு இருப்பதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்படுத்தப்படாத நிதி

இதற்கெல்லாம் பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். துரதிருஷ்டவசமாக, தொற்றுநோய்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 68% மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அதில் மிகக் குறைந்த சதவீதம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத் துறையில் செலவிடப்படும் தொகையைப் பொறுத்தவரை உத்தர பிரதேச அரசு மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சி தருகிறது. 2015-16-ல் மட்டும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய ஊரகச் சுகாதாரத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 58% மட்டுமே உத்தர பிரதேச அரசால் செலவிடப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மழைக் காலங்களில் மூளைக்காய்ச்சல் தொற்று அதிகரிக்கிறது. நெல் பயிரிடப்படும் பகுதிகளில் அறுவடைக்கு முந்தைய காலத்திலும் இந்தப் பாதிப்பு அதிகரிக்கிறது. வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதிகளிலும் இந்தத் தொற்று அதிகம் காணப்படுகிறது. மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் பிற மாநிலங்களிடமிருந்து உத்தர பிரதேச அரசு நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ.சந்திரமோகன்

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...