மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில்,1993ல் நடந்த, 257 பேரை பலி வாங்கிய, தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கானுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, தாதா அபு சலீமுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, 24 ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கில், தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. 1993ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் சரத்பவார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. முதல்வராக, சரத்பவார், மார்ச் 6ல், பொறுப்பேற்றார்.
மார்ச், 12ல், மும்பையின் பல இடங்களில், சங்கிலித் தொடராக, குண்டு வெடிப்புகள்நடந்தன. மொத்தம், 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, மஹாராஷ்டிர போலீசார்விசாரணை நடத்தினர்.
பின், இவ்வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.மும்பை தொடர் குண்டு வெடிப்பு, பிரதானவழக்கில், 2006, செப்., 12ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. நிழலுலக தாதா, டைகர் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர்,குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்; மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.மொத்தம், 12 பேருக்கு துாக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.இதில், டைகர் மேமனின்சகோதரர், யாகூப்மேமனுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, 2013ல், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதே சமயத்தில், மற்றவர்களின் துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதைத் தவிர, தண்டனை பெற்றவர்களில்,16 பேரின் ஆயுள் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த,தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான, யாகூப் மேமன், 2015, ஜூலை, 30ல் தூக்கிலிடப்பட்டான்.
* இரண்டாவது வழக்கு
இதைத் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய, அபு சலீம், தாஹிர் மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் மீதான வழக்கை, மும்பையில் உள்ள, தடா சிறப்பு நீதிமன்றம், தனியாக விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு, இந்தாண்டு, ஜூன், 16ல் வழங்கப்பட்டது.
இதில், மும்பையில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய முஸ்தபா தோசா, ஆயுதங்கள் சப்ளை செய்த அபு சலீம், தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கான், கரிமுல்லா கான், ரியாஸ் சித்திகி ஆகியோர்,
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. அப்துல் கயாம் என்பவர், விடுவிக்கப்பட்டார். இதனிடையில், சிறையில் இருந்த முஸ்தபா தோசா, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக் கான தண்டனை விபரத்தை, மும்பையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றம், நேற்று அறிவித்தது. தண்டனை விவரம் வருமாறு:
* தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கான் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
* அபு சலீம் மற்றும் கரிமுல்லா கானுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
* ரியாஸ் சித்திகிக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கிரிமினல் சதி திட்டம் தீட்டியது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, படுகொலை உள்பட பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த, 24 ஆண்டுகளாக நடந்து வந்த இந்தவழக்கில், நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
தனியாக நடந்த வழக்கு
மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர், 1993, ஏப்., 19ல் கைது செய்யப்பட்டனர். சஞ்சய் தத் உள்பட, 189 பேர் மீது, 10 ஆயிரம் பக்கங்களில், முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க பட்டது.அந்த நேரத்தில், அபு சலீம் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்ததால், அவர்களைத் தவிர மற்றவர்கள் மீதான முக்கிய வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டது.
தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லில் பதுங்கியிருந்த, அபு சலீம், நாடு கடத்தப்பட்டு, 2002ல் கைது செய்யப்பட்டான்; 2005ல் இந்தியா கொண்டு வரப்பட்டான்.வளைகுடா நாடான துபாயில் இருந்து டில்லி திரும்பியபோது, முஸ்தபா தோசா, 2003ல் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு தனித் தனியாக கைது செய்யப்பட்ட, ஏழு பேர் மீது, தனியாக வழக்கு தொடரப்பட்டு, நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.
257 உயிர்களை பலி கொண்டவழக்கில் 24 ஆண்டு விசாரணை
மும்பையில், குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை, 24 ஆண்டுகளாக நடந்து வந்தது. இவ்வழக்கு, கடந்து வந்த பாதை:
மார்ச், 12, 1993 - மும்பையின், 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் காயமடைந்தனர்
ஏப்., 12, 1993 - பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்
நவ., 4, 1993 - சஞ்சய் தத் உள்பட, 189 பேர் மீது, 10 ஆயிரம் பக்கங்களில், குற்றச்சாட்டு பதிவு
நவ., 19, 1993 - வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது
ஏப்., 19, 1995 - பிரதான வழக்கின், விசாரணை துவங்கியது
செப்., 18, 2002 - போர்ச்சுகல்லில், அபு சலீம் கைது செய்யப்பட்டார்
மார்ச் 20, 2003 - துபாயில் இருந்து டில்லிக்கு வந்தபோது, முஸ்தபா தோசா கைது செய்யப்பட்டார்.
செப்., 2003 - பிரதான வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
செப்., 12, 2006 - பிரதான வழக்கில், மும்பை தடா நீதிமன்றம், தீர்ப்பு அளித்தது
மார்ச், 16,2013 - சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், சஞ்சய் தத், சரணடைந்தார்
மார்ச், 21, 2013 - பிரதான வழக்கில், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஜூலை, 30, 2015 - யாகூப் மேமன், தூக்கிலிடப்பட்டார்டிச., 7, 2015 - இரண்டாவது வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை துவங்கியது
ஜூன், 16, 2017 - சலீம் உள்ளிட்டோரை, குற்றவாளிகள் என, தடா நீதிமன்றம் அறிவித்தது
செப்., 7, 2017 - சலீம் உள்ளிட்டோருக்கான தண்டனை அறிவிப்பு
தலைமறைவாக தாவூத் உள்பட 33 பேர்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் உள்பட, 3௩ பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், தலைமறைவாக உள்ள சில முக்கிய குற்றவாளிகள்:
தாவூத் இப்ராஹிம்: மும்பை தாதா இருந்த தாவூத், உள்ளூர் தாதாக் கோஷ்டிகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்தான். ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்தை ஒரு வர்த்தகமாக மாற்றிய தாவூத், 1984ல், நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மும்பை தாக்குதலின் மூளையாக கருதப்படும் தாவூத், பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்ராஹிம் அப்துல் ரசாக் மேமன் என்கிற, டைகர் மேமன்:
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, 1992ல் மும்பையில் நடந்த கலவரத்தில், மேமன் குடும்பம் பாதிக்கப்பட்டது. தாதாக்களுடன் இருந்த தொடர்புகளை பயன்படுத்தி, பழிக்கு பழி வாங்க திட்டமிட்டான். அதன்படி, துபாய் வழியாக, பாகிஸ்தானுக்கு சென்று, அங்கிருந்தபடியே திட்டமிட்டு, 1993ல், மும்பை தாக்குதலை நடத்தியதாக மேமன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, மேமன் குறித்து அதிகளவில் தகவல் எதுவும் இல்லை. இவன் பாகிஸ்தான் மற்றும் துபாயில், மாறி மாறி, தங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது உமர் அஹமது தோசா: மாரடைப்பால் உயிரிழந்த முஸ்தபா தோசாவின் சகோதரரான அஹமது தோசா, மும்பை தாக்குதல் சதி திட்டத்துக்கான சந்திப்புகளுக்கு, ஏற்பாடு செய்தவன். துபாயில், பல்வேறு போலி பெயர்களில், நகைக்கடைகளை நடத்தி வருகிறார்.
தண்டனை அனுபவித்த நடிகர் சஞ்சய் தத்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான அபு சலீம், மூன்று, ஏ.கே., - 56 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் கொடுத்து வைத்திருந்தார்.
பயங்கரவாதிகளுக்கு உதவியதாக, சஞ்சய் தத் மீது, தடா கோர்ட்டில் தனியாக வழக்கு நடந்தது. அதில், நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை காரணமாக, தண்டனை காலம் முடியும் முன்பே, சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment