Thursday, September 21, 2017

உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பலி



மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செப்டம்பர் 21, 2017, 05:30 AM

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. இதன் மத்திய பகுதிகளில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டி, பெபுலா, மோர்லோஸ், மெக்சிகோ மாநிலம், குவரெரோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினருடன், ராணுவமும் இணைந்து மீட்பு பணிகளில் இறங்கினர். அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றக்கூடிய ராட்சத எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் காயமடைந்தவர் களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

மெக்சிகோ சிட்டியின் புறநகர் பகுதி ஒன்றில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்று இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. 3 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 21 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சுமார் 40 பேர் வரை அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 20 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 1985-ம் ஆண்டுக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 248 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போர் இன்னும் முழுமையாக மீட்கப்படாததால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024