Thursday, September 21, 2017

மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 449 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது


உலகத்தில் உள்ள முஸ்லிம்கள், தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

செப்டம்பர் 21, 2017, 04:30 AM


ஆலந்தூர்,


இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 3,444 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் சென்னையில் இருந்து கடந்த மாதம் 12–ந் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்தநிலையில் புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியாவில் இருந்து முதல் விமானம் 222 பெண்கள் உள்பட 449 பேருடன் நேற்று சென்னை திரும்பி வந்தது.

புனித ஹஜ் பயணம் முடிந்து சென்னை திரும்பிய ஹாஜிகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுத்தீன், தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறுகையில், ‘‘ஹஜ் பயணிகள், எந்தவித சிரமமும் இன்றி தங்கள் கடமையை நிறைவேற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. இதற்காக ஹஜ் பயணிகள் மத்திய–மாநில அரசுகளுக்கும், ஹஜ் கமிட்டிக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்த பயணத்தின் போது தமிழகத்தில் இருந்து சென்ற 11 பேர் வயது முதிர்வு காரணமாக இறந்து உள்ளனர்’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024