Thursday, September 21, 2017

காரைக்குடி ரெயில் நிலையம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் பயணிகள் கோரிக்கை


காரைக்குடி ரெயில் நிலையம் முன்பு மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 20, 2017, 04:45 AM

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்குவது காரைக்குடி. இங்குள்ள ரெயில் நிலையம் ஜங்‌ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. காரைக்குடி ரெயில் வழித்தடத்தில் 10–க்கும் மேற்பட்ட ரெயில்களும், வாராந்திர மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் சென்று வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே அகல ரெயில் பாதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் மீண்டும் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து நடைபெற உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காரைக்குடி ரெயில் நிலையம் கடந்த 2007–ம் ஆண்டு நவீன மையமாக்கப்பட்டு தற்போது புதிதாக காட்சியளிக்கிறது. மேலும் ரெயில் நிலையம் முன்பு அழகிய வேலைப்பாடுகள், டிஜிட்டல் அறிவிப்பு போர்டுகள் உள்ளிட்ட வசதிகளும், ரெயில் நிலையத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சமீப காலமாக மழை பெய்யும்போது காரைக்குடி ரெயில் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பது வழக்கமாகி வருகிறது. போதிய வடிகால் அமைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரெயில் நிலையம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்குவதால், அங்கு பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீர் நாளடைவில் சாக்கடை நீராக மாறி, நோய் பரப்பி வருகிறது. மேலும் தண்ணீர் தேங்குவதால், அங்கு பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் சேதமடையும் நிலையும் உள்ளது.

இதுபோக காரைக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை உள்பகுதியிலும் இந்த மழைநீர் அப்படியே குளம்போல் தேங்கி நிற்பதால், அவ்வழியாக வாகன போக்குவரத்து செய்யமுடியாமல் போகிறது. எனவே ரெயில் நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் குழாய் பதித்து தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று சமூக ஆர்வலர்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024