Thursday, September 21, 2017

கமல் அரசியல்: எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுப்பும் சில கேள்விகள்!


By எழில்  |   Published on : 20th September 2017 03:55 PM  |
kamal21
Ads by Kiosked

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல். இந்நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, கமல் அரசியல் - சில கேள்விகள் என்கிற தலைப்பில் தனது இணையத்தளத்தில் சில பதிவுகளை எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பு:
கமல் அரசியல் – சில கேள்விகள்
இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன் விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் கிடப்பார் போல் இருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மந்திரி சபையில் எப்படி உடம்பை வளைப்பார்களோ அப்படி வளைக்கிறார் சிநேகம். பார்க்கவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. இது ஏன் கமலுக்கு அசிங்கமாக இல்லை. ஜெயலலிதாவின் முன்னால் அம்பது மந்திரிகளும் கூழைக் கும்பிடு போட்டார்களே, அதேபோல் அத்தனை பேரும் அவர் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை நாலு கோடி பேர் – இப்போது ஓவியா போன பிறகு ஒன்றரை கோடி பேர் – பார்க்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரியாதா? இத்தனை படித்தவருக்கு இது ஒரு அசிங்கம் ஆபாசம் என்று தெரியவில்லையா? ஜெயலலிதாவுக்குக் கூழைக் கும்பிடு போட்டால் அசிங்கம். தனக்குப் போட்டால் ஜாலியா? என்னய்யா நியாயம் இது? இத்தனைக்கும் இவர் பகுத்தறிவுப் பகலவர் வேறு? பகுத்தறிவுக்காரர்கள்தானே தன்மானம் சுயமரியாதை எல்லாம் பேசினவர்கள்? இத்தனை பேர் கமலுக்கு முன்னால் சுயமரியாதையே இல்லாமல் காலில் விழுகிறார்கள். இதை கமல் எப்படி அனுமதிக்கிறார்? காலில் விழுந்தால் அந்த நிமிடமே தகுதி நீக்கம் செய்யப்படும் என்று பிக்பாஸை விட்டு அறிவிப்புக் கொடுத்தால் யாராவது இப்படிக் காலில் விழுவார்களா?
பொதுவாகவே சினிமாக்காரர்கள் தங்களைக் கடவுளாக நினைத்திருக்கிறார்கள். அவர்களை அப்படி நினைக்க வைப்பது பொதுஜனம். நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித் தங்களைக் கடவுள்களாக சூப்பர் மேன்களாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு அந்தக் காரணத்தினாலேயே அரசியலுக்கு வரும் தகுதி இல்லாமல் போகிறது. அதில் முதலில் வருபவர் கமல்.
என்றைக்காவது, கமல் அவர் வாழ்நாளில் மற்றவர் பேசுவதை ஐந்தே ஐந்து நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறாரா? இதை நான் கமலின் மனசாட்சியிடம் கேட்கிறேன். அஞ்சு வயதில் அம்மா பேசுவதைக் கேட்டேன் என்று சொல்லக் கூடாது. கடந்த இருபது ஆண்டுகளில் அவர் என்றைக்காவது ஒரு நாளாவது ஒரு தருணத்திலாவது அஞ்சே அஞ்சு நிமிடம் மற்றவர் பேசுவதைக் கேட்டிருக்கிறாரா? மனசாட்சியைத் தொட்டு அவர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும். நான் கேள்விப்பட்டவரை அவர் ஆறு மணி நேரம் கூடப் பேசுவார். மற்றவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட குணநலன் கொண்ட ஒருவர் அரசியலுக்கு எப்படி வர முடியும்?
மேலும், மோடி பற்றிய அவரது அரசியல் பார்வை என்ன? பண நோட்டுக்களைக் காணாமல் ஆக்கி கோடானுகோடி மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தாரே மோடி, அது பற்றி கமல் கருத்து என்ன?
மாட்டை இழுத்துக் கொண்டு போனவரெல்லாம் கொலை செய்யப்பட்டார்களே, அது பற்றி கமல் கருத்து என்ன? மோடியின் மாடு பாலிடிக்ஸ் பற்றி கமல் என்ன கருதுகிறார்?
சினிமாவில் ஆரம்பத்தில் தேசிய கீதம் போடுவது பற்றி கமல் கருத்து என்ன?
அடுத்த ஆட்சி, திமுக. அந்த வாக்குகளைப் பிரித்து, திரும்பவும் அதிமுகவின் பொம்மை ஆட்சி வருவதற்காக, மற்றும் பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவதற்காக மோடி போட்ட திட்டமே கமலின் அரசியல் எண்ட்ரி என்று பலர் நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். இது பற்றி கமல் கருத்து என்ன? நான் சொல்வது தவறாக இருந்தால் உங்கள் வாதத்தைச் சொல்லுங்கள். நான் ஏற்க முயல்கிறேன்.
கமல் ரஜினியை அழைக்கும் காரணம், ரஜினி மோடியின் காவி ஏஜெண்ட். கமல் மோடியின் கருப்புச் சட்டை ஏஜெண்ட். இதுவும் தவறு என்றால் என் கருத்தை மாற்றுங்கள். உங்களை ஒப்புக் கொள்ள முயல்கிறேன்.
*
அன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு,
வணக்கம்.  
மேலே கண்ட குறிப்பு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் சில விஷயங்களை இப்போதாவது வெளிப்படையாகப் பேசியாக வேண்டியுள்ளது. பொதுவாக என் கட்டுரைகளையும் முகநூல் குறிப்புகளையும் பற்றி உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் நண்பர் மேற்கண்ட குறிப்பு பற்றி வாயே திறக்கவில்லை. என்ன விஷயம் என்று கேட்ட போது, இதில் ஒன்றும் பெரிதாக இல்லை என்றார். ஆனால் நான் சொன்னேன், பெரிதான விஷயம் என்று.  புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் கமல் போன்ற ஒருவரை விமர்சிப்பதன் மூலம் கமலையும், சினிமாவில் கமலைச் சார்ந்திருக்கும் அத்தனை பேரையும் நான் பகைத்துக் கொள்பவன் ஆகிறேன். இது ரிஸ்க் இல்லையா, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலை பற்றி எழுதுவதற்கு இந்த ரிஸ்கைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். இனிமேல் பொது இடங்களில் தங்களிடம் கை குலுக்கித் தங்களுக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ண மாட்டேன். கவலை வேண்டாம். தனிப்பட்ட விருப்பு வெறுப்பை விட சமூக நலன் இப்போது எனக்கு மேலானதாகப் படுகிறது.
தமிழ்நாட்டு அரசியலை வாங்கு வாங்கு என்று வாங்கும் நீங்கள் இந்திய அரசியல் நிலவரம் பற்றி ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? உலகம் பூராவிலும் உள்ள அத்தனை புத்திஜீவிகளும் கவலைப்படுகிறார்கள். எழுதுகிறார்கள்.  நியூயார்க் டைம்ஸிலிருந்து நம் கடலூரில் வரும் லோக்கல் தமிழ் தினசரி வரை இந்தியா இப்போது போய்க் கொண்டிருக்கும் சர்வாதிகார அரசியல் பற்றித் தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024