Wednesday, September 6, 2017

ஐகோர்ட்டு உத்தரவின்படி பல்லாவரத்தில் புராதன பகுதி குறித்து அதிகாரிகள் ஆய்வு


ஐகோர்ட்டு உத்தரவின்படி பல்லாவரத்தில் உள்ள புராதன பகுதி குறித்து தொல்லியல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

செப்டம்பர் 06, 2017, 03:00 AM

சென்னை,

சென்னை ஜமீன் பல்லாவரம், சுபம் நகரை சேர்ந்த ஆர்.எம்.பாவேந்தன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஜமீன் பல்லாவரம், பல்லாவரத்தில் சில பகுதிகள் உள்ளன. இதன் அருகே 100 மீட்டர் தூரத்துக்கு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 101-வது மீட்டரில் இருந்து 200-வது மீட்டர் வரையிலான பகுதிகளில், தொல்லியல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்னரே கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

என்னுடைய வீட்டுமனை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. எனினும் வீடு கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கிறது. எனவே, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கும்படி பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதேபோல மேலும் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பல்லாவரம், ஜமீன் பல்லாவரத்தில் எந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்பது தொடர்பாக தொல்லியல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இந்த ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட 57 ஏக்கரில், வெறும் 94 மீட்டர் அளவுக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய முடியவில்லை என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வு என்பது அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படவில்லை. அவர்களது வீடுகள் இடிக்கப்படாது. அவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற போவதில்லை.

பாதுகாப்பு

எனவே, இனி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை. எனவே பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தொல்லியல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் புராதன பகுதி குறித்து கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும். இதற்கு வடக்கு மண்டல சரக ஐ.ஜி., காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு, பரங்கிமலை துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும். ஆய்வு அறிக்கையை 14-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் போலீசாரின் உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் துண்டுபிரசுரங்களை நேற்று வினியோகம் செய்தனர். அதில், யாரையும் அச்சுறுத்துவதற்காக ஆய்வு நடைபெறவில்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்துவதற்காக அப்பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024