Wednesday, September 6, 2017

மரண பயம் போக்கும் எமனேஸ்வரர்


மனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

செப்டம்பர் 05, 2017, 01:10 PM

மனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உயிரினங்கள், குறிப்பாக மனிதர்கள் அனைவருக்கும் வயது வேறுபாடின்றி ஏற்படுவது மரண பயம். நோயினாலோ, விபத்தினாலோ, எதிரிகளாலோ, முதுமையினாலோ, இயற்கை சீற்றங்களாலோ மரணம் வரும்.

ஒரு மனிதனின் தீர்க்க ஆயுள் என்பது 120 ஆண்டுகள். அவ்வளவு காலம் இல்லாவிடினும் 80, 90 வயது வரை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.

எப்படித்தான் உடலைப் பேணி பாதுகாத்தாலும், உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் போய்விடும் என்பது உலக நியதி. அதனைக் கவர்ந்து செல்வது எமன் என்பதும், தன்னை நாடியவர்களை எமனிடமிருந்து ஆலமுண்ட அண்ணல் காப்பார் என்பதும் இறையடியாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மிருத்யுஞ் ஜெயம்

அந்த நம்பிக்கைக்காகத்தான், தன்னிடம் சரணடைந்த பதினாறு வயது பாலகனைக் காப்பதற்காக, சிவபெருமான் திருக்கடவூரில் எமனைக் காலால் உதைத்தார்.

சுசரிதன் என்ற அந்தணச் சிறுவனின் ஆயுளைக் காப்பாற்றுவதற்காக, ஆட்கொண்டேசுவரராகத் தோன்றி திருவையாறில் எமனை விரட்டினார். திருவாஞ்சியத்தில் எமனுக்குத் தனி சன்னிதி இருக்க, அங்கே இறைவன் வாஞ்சிநாதராக வீற்றிருந்து எமபயம் போக்குகிறார்.

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற ஊரில் முக்கண்ணன் ‘எமனேஸ்வரமுடையார்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

இவைகள் அனைத்தையும் மிருத்யுஞ் ஜெய தலம் என்கிறார்கள். ‘மிருத்யுஞ்’ என்றால் ஆயுட்குறைப்பு, பாவ வினைகள், தோஷங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவைகளை ஜெயிப்பதுதான் மிருத்யுஞ் ஜெயம் என்பதாகும்.

அந்த அற்புத சக்தி கொண்ட இறைவனை, மிருத்யுஞ்ஜெய மந்திரங்களும், யாகங்களும் செய்து எமபயத்தையும், தீவினைகளையும் போக்கிக் கொள்கிறார்கள். மரணபயம் போக்கும் வழிபாட்டை அதற் குரிய தலங்களில் நிறைவேற்றுவது கூடுதல் பலனைத் தரும்.

நரிக்குடி எமனேஸ்வரர்

ஆலங்குடி என்னும் குரு பரகாரத் தலத்துக்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது நரிக்குடி என்ற ஊர். இந்த தலத்தில் எமன் தர்ம நெறிப்படி ஆண்டு, சிவபிரானை வழிபட்டதால் ‘நெறிக்குடி’ என்று பெயர் பெற்றதாகவும், அதுவே மருவி நரிக்குடி என்றானதாகவும் கூறுகிறார்கள். பண்டைக் காலத்தில், யமபுரி, யமபட்டினம், யமனேஸ்வரம், யமதர்மபுரம், யதர்மபுரயி, தர்மதேசம் என்ற பெயர்களுடன் விளங்கியது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களானது சூரிய சந்திரர்கள் சாட்சியாக எமதர்மராஜா முன்னிலையில் சித்ரகுப்தரால் ‘அகர சந்தானி’ என்ற ஏட்டில் பதியப்பட்டு வருவதாக ஐதீகம். இத்தகைய சித்ரகுப்தப் பதிவேடு அர்ப்பணிப்புத் தலங்களில் ஒன்றாக நரிக்குடியும் சொல்லப்படுகிறது.

இத்தலத்தில், கல்லால மரத்தடியில் சிவபெருமான் எழுந்தருளியிருந்த பண்டையக் கோவில் சிதிலமடைந்து விட்டதால், புதிதாக சுவாமி எமனேஸ்வரருக்கும், அம்பாள் எமனேஸ்வரிக்கும் தனித்தனி கருவறைகளுடன் விமானங்கள் கட்டி வழிபாடு நடைபெற்றது.

தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மூர்த்தங்களும் உள்ளன. முன்பு எமனுக்கு தனிச் சன்னிதி இருந்ததாகவும் தற்போது புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இங்கே உள்ள எம தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. நேபாள நாட்டில் ஓடும் புனித கண்டகி நதியின் சூட்சுமமான நீரோட்டப் பிணைப்பைக் கொண்டதால், எமனேஸ்வர ஆலய திருக்குளத் தீர்த்தத்துக்கு ‘கண்டகி தீர்த்தம்’ என்ற வேறு பெயரும் உண்டு.

சாளக்கிராம வடிவங்களை வைத்து பூஜை செய்வோர், இத்தல கண்டகி தீர்த்தத்தை எடுத்து எமனேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு என்று சொல்கிறார்கள்.

‘த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
வர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்’

என்ற மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உச்சரித்தபடி அமாவாசை, பவுர்ணமி தினங் களில் எமதீர்த்தக் குளத்தை வலம் வந்து, எமனேஸ்வர சுவாமி, எமனேஸ்வரி அம்பிகைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். மரணபயத்தைக் களையவும், விபத்தினைத் தடுக்கவும், தற்கொலை எண்ணத்தைப் மாற்றவும் இந்த வழிபாடு பெருந்துணை புரிவதாக சொல்லப்படுகிறது.

தெற்கு திசை தேவதையான எமதர்மராஜனுக்கு, அவருக்குரிய நீலநிற பருத்தித் துணியில், காய்ந்த கண்டங்கத்திரி வேர், அதிமதுரம், வசம்பு, சுக்கு துண்டுகளை வைத்து முடிச்சு போட்டு, எள்தீபத் திரிபோல உருவாக்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலப்பில் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. இவ்வாறு செய்தால், கண் திருஷ்டி, மன உளைச்சல், எமபயம் ஆகியவை அண்டாது என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.

அமைவிடம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திற்கு வடக்கில் 3 கி.மீ தொலைவிலும், குடந்தையிலிருந்து ஆலங்குடி என்னும் குருஸ்தலம் தாண்டி 4 கி.மீ தூரத்திலும் உள்ளது நரிக்குடி திருத்தலம்.

-டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024