Wednesday, September 27, 2017

தீபாவளிக்கு 4,820 சிறப்பு பஸ்கள்!
பதிவு செய்த நாள்26செப்
2017
23:52

சென்னை: ''தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து, 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்தது. அதில், அமைச்சர், போக்குவரத்து துறை செயலர், டேவிதார், இணை ஆணையர், வேலுச்சாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: அடுத்த மாதம், 18ம் தேதி, தீபாவளி வருவதை முன்னிட்டு, அக்., 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும், சென்னை மற்றும் முக்கிய மாவட்டங்களில் இருந்து, சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து வழக்கமாக, தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

அதனுடன் சிறப்பு பஸ்களாக, 4,820 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்., 15 முதல், 17ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும், 7,095 பஸ்கள், சென்னையில் இருந்து இயக்கப்படும்.

சிறப்பு பஸ் நிலையங்கள் : சென்னையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு தீபாவளிக்கு, ஐந்து இடங்களில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பஸ்கள் பிரித்து இயக்கப்பட்டன. இந்த ஆண்டும், கோயம்பேடு, தாம்பரம் சானிட்டோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கே.கே.நகர் அல்லது கிண்டி ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பகுதிவாரியாக பஸ்கள் இயக்கப்படும். சென்னை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், புறநகர் பகுதிகளில் நிறுத்தப்படும். 'ஆன்லைனில்' இதுவரை, 32 ஆயிரத்துக்கும் அதிகமான பயணியர், தீபாவளிக்காக முன்பதிவு செய்துள்ளனர்.சென்னையில், முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கும் தேதியும், 'கவுன்டர்' எண்ணிக்கையும், விரைவில் அறிவிக்கப்படும்.வழக்கமான கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கும், 'ஆம்னி' பஸ்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தீபாவளிக்கு, அதிக கட்டணம் வசூலித்த, 57 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து, மூன்று நாட்களுக்கு, தலா, 6,483 பஸ்கள் இயக்கப்பட்டன. 5.44 லட்சம் பேர் பயணித்தனர்; 1.38 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கெங்கு?

= செங்குன்றம் வழியாக, ஆந்திரா செல்லும் பஸ்கள், அண்ணா நகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

= கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள், கே.கே.நகர் அல்லது கிண்டியில் இருந்து புறப்படும்

= திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக, கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள், தாம்பரம் சானிட்டோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

= வேலுார், தர்மபுரி செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

= தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில்
இருந்து புறப்படும்

= அனைத்து பஸ் நிலையங்களுக்கும், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மாநகர பஸ்கள் இயக்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024