Thursday, September 7, 2017

'ப்ளூ வேல்' மாணவர்கள் 5 பேர் மீட்பு

பதிவு செய்த நாள்07செப்
2017
00:02

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, 'ப்ளூ வேல்' விளையாடிய, அரசு பள்ளி மாணவர்கள், ஐந்து பேர் மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, எலவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், ப்ளூ வேல் விளையாடுவதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது. சின்னதாராபுரம் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், பிளஸ் 1 மாணவர்கள், நான்கு பேர், பிளஸ் 2 மாணவர் ஒருவர் என, ஐந்து பேர், ப்ளூ வேல் விளையாடியதாக, பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
மாணவர்களின் பெற்றோரை அழைத்து, டாக்டர்கள் உதவியுடன், பள்ளியில் நேற்று முன்தினம் மாலை, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
ஐந்து மாணவர்களையும், சில நாட்கள், வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுமாறு, பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

13 மாணவியர் மீட்பு : வேலுார் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 17 வயது மாணவி, பிளஸ் 2 படித்து வருகிறார். சில நாட்களாக, மாணவி சோர்வுடன் காணப்பட்டார். அவரை அழைத்து, ஆசிரியர்கள் விசாரித்தனர்.இதில், அவர், இரண்டு வாரங்களாக, ப்ளூ வேல் விளையாடியது தெரியவந்தது. மேலும், கையில் அந்த சின்னத்தை பச்சை குத்தி இருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவியை, வேலுார் மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர். மாணவிக்கு, மருத்துவர்களால் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளியில் சென்று விசாரித்தார். இதில், மேலும், 12 மாணவியர், ப்ளூ வேல் விளையாடுவது தெரியவந்தது. அந்த மாணவியரை அழைத்து விசாரித்தார். அவர்கள், இப்போது தான் விளையாட துவங்கியிருப்பது தெரிந்தது. அவர்களை எச்சரித்து, அனுப்பி வைத்தார்.

மாணவர், 'அட்மிட்' : 'ப்ளூ வேல்' விளையாட்டுக்கு அடிமையான பாலிடெக்னிக் மாணவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், துறையூரில் உள்ள பாலிடெக்னிக்கில், முதலாண்டு டிப்ளமா படித்து வருகிறார். இவர் கல்லுாரியில் எப்போதும் மொபைல் போனுடன் இருந்துள்ளார். கல்லுாரி நிர்வாகம், மாணவரை கண்டித்துள்ளது. இதனால், கல்லுாரிக்கு செல்வதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே, மொபைல் போனில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். மேலும், தந்தையிடம் கல்லுாரியில், 'டிசி' வாங்கி வருமாறும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தந்தை, நேற்று காலை மொபைல் போனை பிடுங்கி உடைத்து விட்டார். ஆத்திரமடைந்த மாணவர், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனை ஒரு அறையில் வைத்து பூட்டி, போலீசாருக்கு தெரிவித்தார். துறையூர் போலீசார், மாணவனை மீட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர், ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையானது தெரியவந்தது. மாணவரை, நேற்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024