Thursday, September 7, 2017

கோடிக்கணக்கில் லஞ்சம்: முறைகேடுகளுக்கு துணைபோன வருமானவரித் துறை உயரதிகாரிகள்


By யத்தீஷ் யாதவ்  |   Published on : 07th September 2017 04:46 AM  
வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களிடம் வரியுடன் அபராதத்தையும் வசூலித்து அரசுக் கருவூலத்தில் சேர்ப்பதுதான் வருமான வரித் துறையின் முதன்மையான பணியாகும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக வருமான வரித் துறை மூத்த அதிகாரிகள் சிலர் தனியார் நிறுவனத்திடம் இருந்து கோடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, முறைகேடுகளுக்கு துணைபோனது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டைரியில் சிக்கிய அதிகாரிகள்: வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் எஸ்.கே. ஓஜா, சுபாஷ் சந்திரா, எம்.எஸ்.ராய் உள்ளிட்ட சில அதிகாரிகள் மற்றும் வதோதரா நகரைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மீது சிபிஐ கடந்த மாதம் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, அவர்களின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர் என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம்.
வரி ஏய்ப்புக்கு துணைபோன இந்த அதிகாரிகளால் அரசின் கருவூலத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வதோதராவில் உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தங்கள் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுள்ளனர் என்பதற்கு ஆதாரமான டைரி, கணினியில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 ஆண்டுகள் புதைந்த உண்மை: வருமான வரித்துறைக்குள் நடைபெற்ற சில ரகசிய சமரச நடவடிக்கைகளால் 4 ஆண்டுகளாக இந்த உண்மைகள் புதைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் வந்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ-யின் கைகளில் ஆதாரம்: வருமான வரித்துறையினர் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றார்கள் என்பதற்கு ஆதாரமான டைரி உள்ளிட்ட ஆவணங்கள், வருமான வரித்துறையிடம் இருந்து சிபிஐ-யின் வசம் சென்றுள்ளது. இந்த முக்கிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் பல நமது பத்திரிகைக்கு கிடைத்துள்ளன.
போலி நிறுவனங்களும், பினாமிகளும்... ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் கருப்புப் பணத்தை பதுக்குவதற்காக பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், செஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள், அமைப்புகளை ரகசியமாக வைத்திருந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை ஏற்படுத்தி, ஸ்டெர்லிங் பயோடெக், ஸ்டெர்லிங் இண்டர்நேஷனல் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அவற்றிடம் உள்ளன என்று மோசடி செய்துள்ளனர். இரு நிறுவனங்கள் மூலம் கிடைத்த லாபம் பினாமிகள் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டெர்லிங் நிறுவனத்தின் கொள்முதல், விற்பனை தொடர்பாகவும் பல போலி ஆவணங்களை தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தபோது அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற முறைகேடுகளில் நிறுவனங்கள் ஈடுபடுவது தெரியவந்தால் வருமான வரித் துறையினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லிங் நிறுவன விவகாரத்தில் இந்த முறைகேடுகள் அனைத்தும் தெரிந்திருந்தும் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் மூவரும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரமும் அந்த நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி, கணினி தகவல்கள் மூலம் வெளிப்பட்டுள்ளதுதான் வழக்கின் முக்கிய ஆதாரமாகும்.
கோடிகளில் லஞ்சம்: அந்த ஆவணங்களில் உள்ள தகவலின்படி வருமான வரித்துறை மூத்த அதிகாரி எஸ்.கே. ஓஜாவுக்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 500 லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இது, 2007 ஏப்ரல் 13, 2008 ஏப்ரல் 7, 2008 ஏப்ரல் 9, 2009 நவம்பர் 27 ஆகிய தேதிகளில் தவணை முறையில் பணமாகவும், கேட்பு வரைவோலைகளாகவும் (டிமாண்ட் டிராஃப்ட்) வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஓஜாவின் பல்வேறு பயணச் செலவுகளையும், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான செலவையும் அந்த நிறுவனமே மேற்கொண்டுள்ளது.
ஓஜாவுக்கு கொடுத்த பணத்துக்கான செலவுக் கணக்கை அந்த நிறுவனம் தனது தனிப்பட்ட பதிவேட்டில் 'ஓஜாவுக்கு கொடுத்த வட்டி' என்ற பெயரில் பதிவு செய்து வைத்துள்ளது. ஓஜா குஜராத்தில் 1987 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்திலும், மும்பையில் 1996 முதல் 2005, 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றியுள்ளார். ஸ்டெர்லிங் நிறுவனத்துடன்அவர் நீண்டகாலம் தொடர்பில் இருந்துள்ளார். ஓஜாவின் குடும்பத்தினருக்கு பல்வேறு விமானப் போக்குவரத்து செலவுகளையும் அந்த நிறுவனம் செய்து தந்துள்ளது.
மேலும் இரு அதிகாரிகள்: இது தவிர சிபிஐ வசமுள்ள டைரியின் 8-ஆவது பக்கத்தில் 2011-ஆம் ஆண்டு ஜனவரியில் மூத்த வருமான வரித் துறை அதிகாரி சுபாஷ் சந்திராவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அந்த டைரியின் 14-ஆவது பக்கத்தில் அவருக்கு மேலும் ரூ.2 லட்சம் வழங்கியதாக குறிப்பு உள்ளது. இது தவிர நிறுவனத்தின் கணினிப் பதிவில் சுபாஷ் சந்திராவுக்கு ரூ.11 லட்சம் வழங்கியதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.
மேலும், சுபாஷ் சந்திரா, வருமான வரித் துறையின் மற்றொரு மூத்த அதிகாரியான ராய் ஆகியோருக்கு 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் தலா ரூ.75 லட்சம், ரூ.30 லட்சம் மற்றும் ரூ.1 கோடி அளிக்கப்பட்டதாக அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது.
விரைவில் கைது: இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், 'டைரியில் உள்ள தகவல்கள் மூலம் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகளில் யாரெல்லாம் லஞ்சம் பெற்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் ஏதுவும் ஏற்படவில்லை. அவர்களும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களும் உரிய நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இப்போது வெளிப்பட்டுள்ள விவரங்கள் மிகப்பெரியதொரு ஊழலின் சிறு பகுதிதான். வருமானத் துறையில் ஊழலின் வேர் அடி வரை பரவியுள்ளது. அந்த நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு பல்வேறு நிலைகளில் வருமான வரித்துறை துணை போயுள்ளது' என்று தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்டவை வெளிப்பட்டபோது பெரும் அதிர்ச்சி அலைகள் நாட்டில் ஏற்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள வருமான வரித்துறையின் உயரதிகாரிகள் மீது லஞ்ச-ஊழலின் கரிய நிழல் படரத் தொடங்கியுள்ளது. 
அரசு நிர்வாகத்தின் கீழ் மட்டம் முதல் உச்சி வரை லஞ்சமும், ஊழலும் புரையோடித்தான் கிடக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இந்த முறைகேடு தொடர்பான அடுத்தக் கட்ட விசாரணைகளில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ-யிடம் சிக்கிய டைரியில் பரபரப்பு தகவல்
கடந்த காலங்களில் 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்டவை வெளிப்பட்டபோது பெரும் அதிர்ச்சி அலைகள் நாட்டில் ஏற்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள வருமான வரித்துறையின் உயரதிகாரிகள் மீது லஞ்ச-ஊழலின் கரிய நிழல் படரத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024