Wednesday, September 27, 2017

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க வேண்டியது அவசியம்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி


“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அ.தி.மு.க.வை மக்கள் மறந்து விட்டனர்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

செப்டம்பர் 27, 2017, 05:00 AM
சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“நான் அரசியலுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். இது முக்கியமான பயணம் என்பதால் அதற்கான நிலைப்பாடுகள், திட்டங்கள் குறித்து பெரியவர்களிடமும், அனுபவஸ்தர்களிடமும், எனது நண்பர்களிடமும் ஆலோசித்து வருகிறேன். எனது நற்பணி இயக்க தொண்டர்களிடத்திலும் கலந்து பேசுகிறேன். இந்த ஆய்வுகள் முடிந்த பிறகு அறிவிப்பேன்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஒரு முதல்வராக அவரை பார்க்காமல் சாதாரண பெண்ணாக பார்த்தலும் கூட அந்த பெண்மணியின் மரணத்தில் நிறைய ரகசியங்களும், குழப்பங்களும் இருப்பதாக கூறுகின்றனர். அவரது மரணம் சர்ச்சைக்குரியதுதான்.

எனவே ஜெயலலிதா மரணம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்ய வேண்டியது அவசியம். என்னை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக சொல்வதில் உண்மை இல்லை. என்னை யாரும் இயக்க முடியாது. நான் யாருடைய பின்னாலும் செல்ல மாட்டேன். மற்றவர்களோடு சேர்ந்துதான் நடப்பேன். எல்லோரும் ஒன்றாக ஒரே இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஊழலை ஒழிப்பதற்காகவே அரசியலுக்கு வர விரும்புகிறேன். ஊழலை ஒழித்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். ஊழலை ஒழிக்காமல் வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது. எனது கட்சி மக்களுக்கானது. மக்கள் நலனும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கொள்கையாக இருக்கும். சாதிய விளையாட்டுகள் இருக்காது.

அ.தி.மு.க.வை மக்கள் மறந்து பல நாட்கள் ஆகி விட்டது. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம் கொள்கைகளில் இருக்கும் நல்ல விஷயங்களை நானும் எடுத்து பயன்படுத்திக் கொள்வேன். ஆனாலும் தனி கட்சி தொடங்குவதுதான் எனது நோக்கமாக இருக்கிறது. ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நான் அரசியலில் ஈடுபடப்போவதை தெரிவித்து விட்டேன். அவரும் எப்போது முடிவு செய்தீர்கள் என்று கேட்டார். ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து விட்டதாக கூறினேன்.

விஜய் அரசியலுக்கு வந்தால் போட்டியாக இருப்பாரா? என்று கேட்கப்படுகிறது. இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான விமர்சனங்கள் வைக்கப்படும். வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். தம்பி விஜய்யும் அதுபோல் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை”.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024