Saturday, September 9, 2017


'நீட்' தேர்வுக்கு எதிராக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களை உடனே நிறுத்தச் சொல்லி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017,23:27 IST



'சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து, 'உள்ளே' தள்ள வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த குழப்பங்களுக்கு, முடிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்கு பின் நடத்தப்பட்டது; 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கூட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில், போதுமான அளவு மதிப்பெண் எடுக்காத, அரியலுாரைச் சேர்ந்த, அனிதா என்ற மாணவி, அத்தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்; மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று, தற்கொலை செய்தார்.இதனால், தமிழகம் முழுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், சில நாட்களாக

போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர், ஜி.எஸ். மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

நீட் எதிர்ப்பு போராட்டங்களால், தமிழகத்தில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் என்று,அரசியல் கட்சிகள்,மாணவர்கள், சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக, தி.மு.க., போராட்டங்கள் நடத்தியபோது, அதை நிறுத்தும்படி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தால், உறுதி செய்யப்பட்டுள்ள, நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும். தற்போது தமிழகத்தில், அசாதாரணசூழ்நிலை உள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசு திணறுகிறது.

அரசியல் காரணங்களுக்காக, இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை கொண்டு வரும்படி மாநில அரசை வலியுறுத்தாமல், போராட்டத்தில் ஈடுபடும்படி, மாணவர்களை, சில
அரசியல் கட்சிகள் துாண்டி விடுகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும், இந்த அரசியல் கட்சிகள்
நடத்தும்போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, போராட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது; அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்

இடைக்கால உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்த, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழக அரசின், தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலரின் கடமை.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறை யில் அடையுங்கள். 18ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும். அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி, எங்களுக்கு உதவ வேண்டும்.இந்த உத்தரவு களை செயல்படுத்தும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் உள்துறை முதன்மை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...