Monday, September 18, 2017

மாவட்ட செய்திகள்

மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுது: விருதுநகர் ரெயில் நிலையத்தில் நெடுந்தூர ரெயில் பயணிகள் தவிப்பு
விருதுநகர் ரெயில் நிலையத்தில் நெடுந்தூர ரெயில்களின் இணைப்பு பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதற்கான மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுதாகி உள்ளதால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2017, 04:00 AM
விருதுநகர்,

விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையம் மாதிரி ரெயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான வகையில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எனினும் ஒரு சில வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த வசதிகளை ரெயில் பயணிகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் அதற்கான சாதனங்கள் பழுதான நிலையில் உள்ளன.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் நெடுந்தூர விரைவு ரெயில்கள் விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாகத்தான் வந்து செல்கின்றன. மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் நெடுந்தூர ரெயில்களில் செல்ல விருதுநகருக்கு வந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. விருதுநகர் வழியாக செல்லும் நெடுந்தூர விரைவு ரெயில்கள் விருதுநகர் ரெயில் நிலையத்தில் அதிகபட்சமாக 3 நிமிடங்கள் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரெயில் நிலைய 2–வது பிளாட்பாரத்தில் தான் அனைத்து நெடுந்தூர ரெயில்களும் வந்து செல்வதால் ரெயில் பயணிகளுக்கு அவர்கள் முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிந்து கொள்ள மின்னணு அறிவிப்பு பலகை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீண்ட நாட்களாக இந்த மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுதாகி உள்ளதால் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்து நிற்கும் பயணிகள் ரெயில் வந்தவுடன் தாங்கள் ஏற வேண்டிய ரெயில் பெட்டி எந்த இடத்தில் உள்ளது என தெரியாமல் பெரும் தவிப்பிற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக முதியவர்களும், பெண்களும் தாங்கள் முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டிகளில் ஏறுவதற்கு ஓடிச் சென்று ஏற வேண்டியதுள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பல சந்தர்ப்பங்களில் ரெயில் புறப்படும் நேரத்தில் அவசர, அவசரமாக ரெயில் பெட்டியில் ஏற வேண்டிய நிலை உள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே ரெயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக செய்து தந்துள்ள மின் அறிவிப்பு பலகையினை பழுது நீக்கி முறையாக செயல்படவும் தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் ரெயில் நிலையத்திற்குள்ளேயே பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024