Monday, September 18, 2017

மாவட்ட செய்திகள்

ஐந்து வயதில் அடிமனதில் பதிந்த கனவு


களைப்பற்ற உழைப்பு, கருணைமிக்க செயல்பாடு மூலம் சேலம் மாவட்ட மக்களை கவர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பேசப்படுபவர்.
செப்டம்பர் 17, 2017, 07:15 PM

- ரோகிணி ஆர்.பாஜிபாகரே ஐ.ஏ.எஸ்.

களைப்பற்ற உழைப்பு, கருணைமிக்க செயல்பாடு மூலம் சேலம் மாவட்ட மக்களை கவர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பேசப்படுபவர். காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வரும் அவர் அலுவலகப் பணி, ஆய்வுப் பணி என்று இரவு 10 மணி வரை மின்னலாக செயல்படுகிறார். பொதுமக்களின் கோரிக்கை மனுக் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய அதிக அக்கறை காட்டுகிறார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களை டெங்கு காய்ச்சல் பாதித்த வேளையில், டெங்கு அறிகுறியுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டார். அவர் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கியதோடு, சிறப்பான சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்தார். ஆய்வின்போது, மகுடஞ்சாவடி என்ற இடத்தில் போலி டாக்டர் ஒருவரை கையும் களவுமாக பிடித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால், ஆசிரியர்கள் வகுப்புக்கு வராத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது கருத்தராஜபாளையம் என்ற குக்கிராமத்திற்கு ஆய்வுப் பணிகளுக்காக சென்ற கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு மாணவ-மாணவிகள் நின்று கொண்டிருந்ததை கண்டார். உடனடியாக அவர்களை வகுப்பறையில் உட்காரவைத்து ஆங்கில பாடம் நடத்தினார். தங்களுக்கு பாடம் நடத்துவது கலெக்டர் என்பது தெரியாத சில மாணவர்கள், ‘தங்களுக்கு பாடம் நடத்த புதிய டீச்சர் வந்திருப்பதாக..’ பேசிக்கொண்டார்கள்.

இப்படி சேலத்தில் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்துகொண்டிருக்கும் ரோகிணி, ஐந்து வயதிலே கலெக்டர் ஆகவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். படிப்படியாக முன்னேறி அந்த லட்சியத்தை அடைந்திருக்கிறார். அது பற்றி அவரிடம் பேசுவோம்!

உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உப்பலாயி என்ற குக்கிராமத்தில் நான் பிறந்தேன். விவசாயம்தான் எங்கள் பூர்வீக தொழில். அப்பா ராம்தாஸ் பாஜிபாகரே, அம்மா சுவர்ணலதா. எனக்கு 2 அக்காள், ஒரு அண்ணன், ஒரு தம்பி ஆகியோர் இருக்கிறார்கள். நான் மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்தது எனது பாட்டி-தாத்தாவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சி தரவில்லை. ஆனால் பெற்றோர் எனக்கு பாசத்துடன் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தனர்.

கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட என்ன காரணம்?

விவசாயியான என் அப்பா, விவசாய நிலத்திற்கு தேவையான பட்டா பெறுவதற்கும், மானியம் பெறுவதற்கும் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்று வந்துகொண்டிருந்ததை, நான் 5 வயது சிறுமியாக இருந்தபோது கண்கூடாக பார்த்தேன். அவரிடம், ‘எதிர்காலத்தில் நான் எப்படிப்பட்ட அதிகாரியானால் மக்களுக்கு நிறைய உதவமுடியும்?’ என்று கேட்டேன். அதற்கு அப்பா, ‘அனைத்து மக்களுக்கும் உதவவேண்டும் என்றால் நீ எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும்’ என்றார். அப்பா சொன்ன அந்த கருத்து ஐந்து வயதிலே என் அடிமனதில் பதிந்துவிட்டது. யாருடைய உதவியும் இன்றி, சொந்த முயற்சியிலே படிப்படியாக முன்னேறி நான் அந்த லட்சியத்தை அடைந்தேன்.

சுயமுயற்சியில் லட்சியத்தை அடைந்தது பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்?

எங்கள் கிராம பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தேன். பொதுத் தேர்வுகளில் ‘மாநில ரேங்க்’ எடுத்தேன். அங்கு 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தாலே மாநில ரேங்க்தான். அதிக மதிப்பெண் வாங்கியதால் பிரபலமான அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை தேர்ந்தெடுத்தேன். அந்த கல்லூரி எங்கள் கிராமத்தில் இருந்து 400 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 17 வயதில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக கல்லூரிக்கு சென்று இண்டர்வியூவில் கலந்துகொண்டேன். ‘செலக்ட்’ ஆனதும் கல்வி கட்டணத்தையும் செலுத்திவிட்டுதான் திரும்பினேன். என் தந்தைதான் அந்த அளவுக்கு எனக்கு தைரியத்தை தந்து வழிகாட்டினார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் பெரிய நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது லட்சியம் ஐ.ஏ.எஸ். ஆவது என்பதால், அதற்காக தயாரானேன். பயிற்சிக்காக நான் எந்த மையத்திலும் சேரவில்லை. நானே சுயமாக பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தேன். யாருடைய உதவியும் இன்றி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனேன்.

தமிழில் தெள்ளத்தெளிவாகப் பேச எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

எனது தாய்மொழி மராத்தி. கூடுதலாக இந்தி, ஆங்கில மொழிகளையும் கற்றுக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் எனக்கு தமிழ் அறிமுகமானது. தமிழ்நாடு கேடரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு பயிற்சி மையத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அரைகுறை தமிழுடன் வந்த எனக்கு மதுரையில் பயிற்சி கலெக்டராக பணி வழங்கப்பட்டது. அங்கே நன்றாக தமிழ்பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். பின்பு திண்டிவனம், சேரன்மகாதேவி ஆகிய ஊர்களில் சப்-கலெக்டராக பணியாற்றினேன். அடுத்து மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்புகளை வகித்தேன்.

சுகாதார மேம்பாட்டுக்காக நீங்கள் மத்திய அரசின் பாராட்டை பெற்றது எப்படி?

மதுரை மாவட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பற்றி கிராம மக்களிடம் எடுத்துச்சொன்னேன். அந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் மானியம் உண்டு. 100 நாள் வேலை உறுதி திட்டத்தையும் என்னால் முடிந்த அளவுக்கு கிராம மக்களிடம் கொண்டு போய் சேர்த்தேன். அவைகளை நான் ஒரு சேவையாக சிறப்பாக செய்தேன். அதற்காக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் என்னை பாராட்டி கவுரவித்தது. அதை தொடர்ந்து சுகாதார மேம்பாடு, 100 நாள் வேலைதிட்டம் போன்றவைகளை பற்றி மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தேன். மிசவுரி பயிற்சி மையத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்.களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது. அதையும் திறம்படசெய்தேன்.

உங்கள் கணவர் விஜேந்திரபிதாரி ஐ.பி.எஸ். அதிகாரி. நீங்கள் செய்து கொண்டது காதல் திருமணமா?

நாங்கள் காதல் திருமணம் செய்து கொள்ளவில்லை. பெற்றோர் பார்த்து பேசி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் கணவர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரியாக பெங்களூருவில் பணியாற்றுகிறார். எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமையே சேவை மனப்பான்மைதான். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களால் முடிந்த அளவு மக்களுக்கு சேவையாற்றுவோம். எங்களுக்கு 6 வயதில் அபிஜெய் என்ற மகன் இருக்கிறான்.



புடவையைத்தான் விரும்பி உடுத்துகிறீர்கள். அதற்கு என்ன காரணம்?

என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும், சேலை அணிவதில் உள்ள அழகே தனிதான். மராட்டிய மாநிலத்தின் பாரம்பரிய உடையும் புடவைதான். அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். புடவையில் சென்றால் கிராம மக்களும் என்னை அவர்களில் ஒருவராக நினைத்து எளிதாக அணுகுவார்கள். புடவை, மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் பெண்களுக்கு பொருத்தமான உடை.

கிராம மக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

கிராமங்களில் பிறந்தவர்கள் அனைவரும் பெருமை அடைய வேண்டும். பொதுவாக நகரப்பகுதியில் வசிப்பவர் களைவிட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். இந்தியா 70 சதவீத கிராமங்களை உள்ளடக்கிய நாடு. இன்றைய காலகட்டத்தில் கிராம மக்களுக்குத்தான் இந்தியாவை பற்றி முழுமையாகத் தெரியும் என்பது எனது கருத்து. கிராம மக்கள் பாசம் கொண்டவர்கள். அவர்களுடைய நலம் விசாரிப்பு, அனுசரணையான உபசரிப்பு போன்றவை நகரங்களில் கிடைப்பது அரிது. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதில் பெருமை அடைகிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம், சேலம். இந்த மாவட்ட வளர்ச்சிக்காக முக்கிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?

நான் சேலம் மாவட்ட கலெக்டரான தகவலை கிராமத்தில் வசிக்கும் தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். அதற்கு அவர், ‘பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடும்மா’ என்றார். அப்பா சொன்ன வார்த்தையில் பல அர்த்தங்கள் உள்ளன. மக்களின் பிரச்சினைகள் என்னால் தீர்த்துவைக்கப்படும்போது, அவர்கள் அடையும் மகிழ்ச்சியை எனது பதவிக்கு கிடைத்த வெகுமதியாக நினைக்கிறேன். இது முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களின் சேவைக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அதிக முயற்சி எடுப்பேன். தற்போது டெங்கு தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்துகிறோம். இது கூட்டு முயற்சி. அதிகாரிகள் தங்கள் பணிகளை திறம்பட செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருகைக்காக பொதுமக்கள் காத்திருக்க கூடாது என கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு அவர்கள் பணிக்கு வரவேண்டும். அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறார்கள். புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இளம்பெண்கள் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்களை விட தைரியமானவர்கள் யாரும் கிடையாது. மனதைரியத்திற்கு எடுத்துக்காட்டே பெண்கள்தான். அப்படிப்பட்ட பெண்கள் நொடிப்பொழுதில் எடுக்கும் தவறான முடிவை தடுக்க முடியாமல்போய் விடுகிறது. பெண்கள் வாழ்ந்து காட்டவேண்டும். ஒருபோதும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சியுடன் செயல்பட்டு பெண்கள் வெற்றிகளை குவிக்கவேண்டும்.

சேவையில் சிறக்கும் இவருக்கு நமது பூங்கொத்து!

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024