Monday, September 18, 2017

தலையங்கம்

தமிழ்நாட்டுக்கும் வேண்டும் ‘புல்லட் ரெயில்’


ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேயும், அவரது மனைவி அகிஅபேயும் இந்திய சுற்றுப்பயணமாக ஆமதாபாத் வந்தனர். ஷின்ஜோ அபேக்கு இந்தியா புதிதல்ல.

செப்டம்பர் 18 2017, 03:00 AM

ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேயும், அவரது மனைவி அகிஅபேயும் இந்திய சுற்றுப்பயணமாக ஆமதாபாத் வந்தனர். ஷின்ஜோ அபேக்கு இந்தியா புதிதல்ல. ஏற்கனவே 2007, 2011–ம் ஆண்டுகளிலும் இந்தியா வந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அவரது தாத்தா கிஷி ஜப்பான் நாட்டு பிரதமராக இருந்தபோது, 1957–ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நேரத்தில், தன்னை இந்திய நாட்டு மக்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு அறிமுகப்படுத்தி சொல்லிய வாசகங்களை தன் பேரக்குழந்தை ஷின்ஜோ சிறுவனாக இருந்தபோது மடியில் உட்கார வைத்துக்கொண்டு சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ஆக, தாத்தா உறவு பேரன் வரை நிலைத்து நீடித்து வந்திருக்கிறது. ஆமதாபாத்தில் ஜப்பான் நாட்டு உதவியோடு அந்த நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆமதாபாத்–மும்பை இடையே ‘புல்லட் ரெயில்’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியும் ஷின்ஜோ அபேயும் சேர்ந்து அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கும் இந்த திட்டம் 2022–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவில் ஜப்பான் நாடு 88 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக அளிக்கிறது. இந்த கடனுக்கு வட்டி 0.1 சதவீதம் தான். அதுவும் 50 ஆண்டுகளில் தவணைகளில் திரும்ப கட்டலாம். இதுமட்டுமல்லாமல், மேலும் 15 ஆண்டுகள் கட்டுவதற்கும் சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, 65 ஆண்டுகளில் இந்த கடனை கட்டினால் போதும். ஆமதாபாத்–மும்பைக்கு இடையே 508 கிலோமீட்டர் தூரமாகும். மொத்தம் 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். ஆனால் சராசரி வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர். எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்போது இந்த ரெயில் 2 மணி 58 நிமிடங்களிலும், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றால் 2 மணி 7 நிமிடத்திலும் செல்ல முடியும். இந்த புல்லட் ரெயிலை அமைப்பதால் நிறைய வேலைவாய்ப்பு உருவாகும். 12 ஊர்களிலும் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில் வளர்ச்சி பெருகும். நிச்சயமாக இந்த திட்டம் வரவேற்க தகுந்த திட்டம். இதுபோன்ற புல்லட் ரெயிலை தமிழ்நாட்டிலும் விடுவதற்கு நல்ல வாய்ப்புகள், சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தையும், எளிதான கடன் வசதியையும், ஜப்பான் நாடு நிச்சயமாக தரும்.

சென்னையில் இருந்து 739.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு 336.6 கிலோமீட்டர் தூரம் உள்ள திருச்சி, 493.2 கிலோமீட்டர் தூரம் உள்ள மதுரை, 649.7 கிலோமீட்டர் தூரம் உள்ள நெல்லை, 723.8 கிலோமீட்டர் தூரம் உள்ள நாகர்கோவில் வழியாக புல்லட் ரெயில் விடலாம். இதுபோல, சென்னையில் இருந்து 494.3 கிலோமீட்டர் தூரம் உள்ள கோயம்புத்தூருக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாகவும், சென்னையில் இருந்து 358.6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெங்களூருவுக்கும் புல்லட் ரெயில் விடலாம். மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயிலை இந்த வழிகளில் விட்டால் பயணிகள் ஒருசில மணிநேரத்தில் நினைத்த இடத்திற்கு சென்றுவிடலாம். இதே வழியில், இதே வேகத்தில் சரக்கு ரெயிலை விட்டால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் வர்த்தகம் செழிக்கும். இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து வரும் எல்லா தலைவர்களையும் டெல்லி மற்றும் ஆமதாபாத் போன்ற சில இடங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லாமல் தென் மாநிலங்களுக்கும் அழைத்துவந்தால், அவர்களோடு வரும் வர்த்தக குழு தென் மாநிலங்களிலும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இதுபோல ஜப்பான் நாட்டில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக மின்னணு தொழில் வளர்ச்சி தொடர்பான தொழில்நுட்பங்களோடு கூடிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறைய தொடங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...