பெண் குழந்தைகளைப் பாதிக்கும் மாதவிடாய்க் குழப்பம் - தீர்வு என்ன?
ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பருவமடைதலிலேயே நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால், சீரற்ற மாதவிலக்கு, அதிக உதிரப்போக்கு, கருப்பையில் நீர்க்கட்டிகள் என பெண்களில் பலர் இளம்வயதிலேயே மனதளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மாதவிடாய் என்பது இயல்பான நிகழ்வு தான் என்று காலங்காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் இன்னும் அதுசார்ந்த மூடநம்பிக்கைகள் ஓயவில்லை. மாதவிடாய் காலங்களில் பிள்ளைகளை வீட்டை விட்டு விலக்கி வைப்பது, தனிப்பாய், தனித்தட்டு கொடுத்து தீண்டத்தகாதவர்களாக நடத்துவது போன்ற செயல்களை படித்தவர்களே செய்து வருகிறார்கள். குழந்தைகள் மனதில் மாதவிடாய் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட தண்டனை என்ற மனோபாவம் உருவாகி விடுகிறது.
அண்மையில், திருநெல்வேலியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் மாதவிடாய் ஏற்பட்டு சீருடையிலும் இருக்கையிலும் ரத்தக்கறை படிந்துள்ளது. பிற மாணவிகள் அதைச் சுட்டிக்காட்ட, பதறிய மாணவி கழிவறைக்குச் செல்ல வகுப்பாசிரியரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அந்த ஆசிரியை வகுப்பறையில் ரத்தக்கறை படிந்ததற்காக மற்ற மாணவர்களின் முன் திட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சொல்லி வகுப்பை விட்டு வெளியேற்றியும் இருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
7-ம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு மாதவிடாய் என்பதே புதிய அனுபவம் தான். அதைப்பற்றி போதிய அளவுக்கு புரிதல் இருக்காது. அதன் அறிகுறிகளைக் கூட அந்த மாணவி அறிந்திருக்க மாட்டாள். அவள் கவனத்தை மீறி நிகழ்ந்த ஒரு தவறை பெரிதாக்கி சுட்டிக்காட்டியதோடு, பிற மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தி வெளியேற்றும் அளவுக்குத் தான் ஒரு ஆசிரியைக்கு மாதவிடாய் பற்றிய அறிவு இருக்கிறது. அந்த மாணவி மட்டுமல்ல... அவளைப் போல ஆயிரமாயிரம் சிறுமிகள் மாதவிடாயை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதி பெரும் மன உளைச்சல் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அது குறித்துப் பேசுவதும் பிறகு மறந்து விடுவதும் நம் இயல்பாக இருக்கிறது. மாதவிடாய் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சிறுமிகளை விட பெற்றோருக்கு அது குறித்த விழிப்பு உணர்வு இங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.
நாம், நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றிய என்ன மாதிரியான புரிதலைத் தந்திருக்கிறோம்? இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது என்று எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்?
"ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளுக்கே புரிதலுக்கான தேவைகள் அதிகம் உள்ளது. குறிப்பாக தத்தம் உடல் ரீதியான புரிதல் அதிகம் தேவைப்படுகிறது. உணவுமுறை மாற்றம், சுற்றுச்சூழல், மன அழுத்தம், சமூகச்சூழல் போன்ற காரணங்களும், மரபியல் மாற்றங்களும் 11 வயதிலேயே பூப்பெய்த வைத்து விடுகின்றன. ஆனால் அதுகுறித்து அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால், கேள்விக்குறிதான்!?
ஒரு குழந்தை 11 வயதிலும், இன்னொரு குழந்தை 15 வயதிலும் பூப்படையலாம். ஆக, பூப்படைந்த சிறுமிக்கும் பூப்படையப் போகும் சிறுமிக்கும் மாதவிடாய் குறித்து என்னமாதிரியான அறிவு இருக்கிறது என அவரவர் பெற்றோருக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) தெரிந்திருக்க வேண்டும்.
7, 8 வயதுக்குள் பூப்பெய்வதற்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது மிகவும் அவசியம்' என மருத்துவக் குழுவின் பரிந்துரை ஒன்று சொல்கிறது. ஆனால் அறிகுறிகள் என்னென்ன என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தெரியவில்லை. பிள்ளைகள் தெரிந்து கொள்ளும் முன் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் பற்றிய அறிவுரைகளைப் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கு முன், அதுபற்றி ஏற்கனவே அவர்கள் என்னென்ன அறிந்திருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் தவறாக அறிந்து வைத்திருக்கக் கூடும். அதை தவறென்றுச் சுட்டிக்காட்டி சரியான தகவலை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை, பெற்றோருக்கு உண்டு.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? மாதவிடாய் பற்றிய மருத்துவரீதியான புரிதலை குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். உதாரணமாக, மாதவிடாய் காலத்தில் ஏன் ரத்தம் வருகிறது? அத்தருணத்தில் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நாப்கின் எப்படி பயன்படுத்துவது? எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றவேண்டும்? ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் என்ன செய்யலாம்? அந்நேரத்தில் எப்படி நாப்கின் பயன்படுத்தவேண்டும்? மாதவிடாய்க் காலத்தில் தவிர்க்கவேண்டிய/தவிர்க்கக்கூடாத உணவுகள் என்னென்ன? அந்நாட்களில் வரும் வலியில் இருந்து மீள்வது எப்படி என்றெல்லாம் விளக்க வேண்டும்.
மேலும், இக்கட்டான சில சூழல்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதையும் சொல்லித்தரவேண்டும். உதாரணமாக, மாதவிடாயின்போது, பொதுவெளியில் வலி ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது, தன்னை அறியாமல் ஆடையில் கறை படிந்து விட்டால் சூழலைப் புரிந்துகொண்டு பதற்றமடையாமல் சுத்தப்படுத்துவது, எப்போதும் ஒரு நாப்கினை பையில் வைத்திருப்பது போன்ற ஒழுங்குமுறைகளைப் போதிக்கவேண்டும்." என்கிறார், குழந்தைகள் உளவியல் ஆலோசகர் டாக்டர் சங்கீதா சங்கரநாராயணன்.
"பெண்களுக்கு 10 முதல் 11 வயதில் பருவ மாற்றங்கள் நிகழத் துவங்கும். எனவே, 8 வயது தொடங்கி அவர்களுக்கு அதுகுறித்த விஷயங்களை ஷேர் செய்யவேண்டும். சில சிறுமிகள் 15 வயதில் பூப்பெய்துவர். சிலர் 10 வயதிலேயே பூப்பெய்துவிடுவர். இரண்டுமே இயற்கையான விஷயம்தான். இரண்டையுமே விளக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பது, அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான் (அம்மாவாகவோ, பெண் உறவினராகவோ இருத்தல் கூடுதல் நலம்). இது பெண்கள் வாழ்வில் ஏற்படும் சராசரி விஷயம் என்பதை விளக்கிக்கூறி, 'உன் உடலில் எப்போது ரத்தப்போக்கு தெரிகிறதோ அப்போது பயப்படாமல் என்னிடம் வந்து சொல்' என்று சொல்வது, அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். அதற்கு மாறாக, மாதவிடாய் பற்றி எதுவும் அறியாமல் திடீரென அனைத்தையும் அறிந்துகொள்ளும் குழந்தைகள், பதற்றமடையத் துவங்குவர். இது அவர்களின் வளர்சிதை மாற்றங்களைப் பாதிக்கும்.
மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், அதிக வலி எடுத்தல், சுழற்சி சரியாக இல்லாமை போன்றவற்றை குழந்தைகள் சொல்லாவிட்டாலும், பெற்றோர் தாமாக முன்வந்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அப்பா/அம்மா - மகளுக்கான பந்தம் எந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக உள்ளதோ, அந்த அளவு குழந்தைகள் தங்கள் மாதவிடாய் நேரத்தில் தைரியமாகவும் இயல்பாகவும் செயல்படுவர்..." என்கிறார், மகப்பேறு மருத்துவர் டாக்டர் மனுலஷ்மி.
மாதவிடாயின்போது வரும் சிக்கல்களையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறி குழந்தைகளை வளர்க்க வேண்டும். அப்போதுதான் அது உடலில் ஏற்படும் ஒரு இயல்பான விஷயம் என்ற கருத்தை அவர்கள் உணர்வர். அவர்களது உடல்நிலையைப் பொறுத்து அவர்களாகவே முடிவெடுத்துக் கொள்ளும் திறனை குழந்தைகள் கையில் ஒப்படைப்பது நல்லது. வலி ஏதுமின்றி அவர்கள் உடல்நிலை நன்றாக இருப்பின், இயல்பாகவே அவர்கள் வளரட்டும். வலி ஏற்படும்போது அதற்கேற்ற மருத்துவமுறையைப் பின்பற்ற வலியுறுத்துங்கள்.
No comments:
Post a Comment