Wednesday, September 6, 2017

ஓ.எம்.ஆர்., அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு பாதுகாப்பு..இல்லை! சுத்தமான காற்று, சுகாதாரத்திற்கும் வாய்ப்பு குறைவு

பதிவு செய்த நாள்06செப்
2017
00:39

நாவலுார்:நாவலுார், படூர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லையென, புகார் எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலுார், படூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவைகளில், லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து, பல ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வசிக்கின்றன.

இக்குடியிருப்புகள் உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன.இப்பகுதியில், சிறுசேரி, 'சிப்காட்' முதல் கேளம்பாக்கம் வரையில் போதிய சாலையோர விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, அசம்பாவிதங்கள் நடந்திடுமோ என்ற அச்சத்தில், குடியிருப்பு வாசிகள் வெளியே வருவதே இல்லை.

இச்சாலைகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் தண்ணீர் லாரிகளால், இப்பகுதியினர், சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.மேலும், மண் மற்றும் ஜல்லிக்கற்கள் மூடப்படாமல் கொண்டு செல்லும் லாரிகள், எவ்வித பாதுகாப்புமின்றி அசுரவேகத்தில் செல்வதாலும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை சாலைகளில் ஓட்டிச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

இப்பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், சில நேரங்களில் பிரதான சாலைகளிலேயே விடப்படுவதால், அதன் மீது தான் பகுதிவாசிகள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், சுத்தமான காற்று, சுகாதாரமான வசதிகளுக்காக, நகரை விட்டு வெகுதுாரம் வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுமட்டுமல்லாமல், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீர் சாலைகளிலேயே விடுகின்றனர்.

நகர்ப்புறத்தில் சேரும் கழிவுகள், நகருக்கு வெளியே உள்ள இப்பகுதிகளில் விடப்படுவதால், நாற்றமெடுக்கிறது.மேலும், இப்பகுதிகளில் உள்ள தனியார் உணவு விடுதிகளில் உள்ள நாள்பட்ட உணவுப்பொருட்கள், தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள், ரசாயன கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன.அவை, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பகுதிவாசிகளுக்கு நோய்தொற்றும் அபாயமும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இப்பகுதிகளில் ஆய்வு செய்து, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான முறையில் இப்பகுதிகளில் வாழ்க்கை நடத்துவதற்கான ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு இல்லை!
ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோர் இரவில் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் வீடு திரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு இப்பகுதிகளில் அறவே இல்லை. மேலும், தனியார் உணவு விடுதிகளும், மருத்துவமனைகளும் இப்பகுதிகளில் செய்கின்ற அக்கிரமத்திற்கு அளவே இல்லை. எப்பகுதிகளிலெல்லாம் இடம் கிடைக்கிறதோ அப்பகுதிகளிலெல்லாம் கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசடையச் செய்கின்றனர்.

- எம்.ஜெயக்குமார், நாவலுார்
தண்ணீர் பிரச்னை!நகரில், நெருக்கடியான இடங்களில், மூச்சடைக்கும் நிலையில் வசித்தவர்கள், சற்று விஸ்தாரமாக இருக்கட்டுமே என, புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை நாடி வந்துள்ளனர்.ஆனால், இவர்களுக்கு, தண்ணீர், மின்சாரம், மொபைல் போன் வசதி கிடைப்பதில் பாதிப்பு உள்ளது.

திட்டமிடப்படாத, அங்கொன்றும், இங்கொன்றுமான அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தேவைப்படும், தண்ணீருக்கு முறையான வசதிகள் இல்லை. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிக்கவும், திட்டங்கள் இல்லை.அதுபோல, போதிய மின்சாரம் இல்லாதது, மொபைல் போன் டவர் சிக்னல் சரிவர கிடைக்காதது போன்ற பிரச்னைகளால், பெரும்பாலான அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் அல்லல் படுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024